Latest News :

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ திரைப்பட விமர்சனம்

bcbe1959d780d4f9f87822d32792b81e.jpg

Casting : Hari Baskar, Losliya, Rayaan, Ilavarasu, Sha Ra

Directed By : Arun Ravichandran

Music By : Osho Venkat

Produced By : Nithin Manohar, Murali Ramasamy

 

பொறியியல் கல்லூரி மாணவரான நாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், நாயகி லாஸ்லியாவை காதலிக்கிறார். லாஸ்லியா அவரது காதலை நிராகரித்து விடுகிறார். கல்லூரி முடிந்து சில வருடங்களுக்குப் பிறகும் படிப்பை முடிக்காமல் அரியர் வைத்துக்கொண்டு ஊர் சுற்றி வரும் ஹரி பாஸ்கர், சந்தர்ப்ப சூழ்நிலையால் லாஸ்லியாவின் இல்லத்தில் ஆறு மாதங்கள் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ய நேரிடுகிறது. அப்போது அவருடனான புரிதலால் நட்பு பாராட்டும் லாஸ்லியா, ஹரி பாஸ்கரை தனது நெருங்கிய தோழனாக ஏற்றுக் கொண்டு அவர் மீது அக்கறை காட்டுகிறார்.

 

லாஸ்லியாவின் நட்பை காதல் என்று புரிந்துக் கொள்ளும் ஹரி பாஸ்கர், மனதுக்குள் காதல் வளர்த்துக்கொள்ள, திடீரென்று லாஸ்லியா வேறு ஒருவரை காதலிப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சியடையும் ஹரி பாஸ்கர், லாஸ்லியாவுக்கு தொடர்ந்து காதல் தொல்லைக் கொடுக்க, இறுதியில் யாருடைய காதல் வென்றது ? என்பதே கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் யூடியுப் பிரபலம் ஹரி பாஸ்கர், முதல் படம் போல் அல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்தில் மூழ்கி, அப்பாவின் அடியோடு வளர்ந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக வலம் வரும் இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர், தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் இளைஞர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது செய்லபாடுகள் நாம் ஏற்கனவே பல படங்களில், பல நடிகர்களிடம் பார்த்துவிட்டதால், பத்தில் ஒன்றாகவே பார்வையாளர்களை கடக்கிறார். 

 

நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, நடிப்பிலும், அழகிலும் பிரகாசிக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக நடித்து பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயான், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

சாரா வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. இளவரசு, நாயகனின் அம்மாவாக நடித்த நடிகை, தங்கையாக நடித்தவர் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

 

இசையமைப்பாளர் ஓசோ வெங்கட்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் குலோத்துங்க வர்மன், காட்சிகளை பளிச்சென்று படமாக்கியிருப்பதோடு, நாயகன் மற்றும் நாயகியை அழகாக காட்டியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ராம சுப்பின் நேர்த்தியான படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அருண் ரவிச்சந்திரன், தற்போதைய தலைமுறையினர் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், என்பதை ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகள் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பழகிய பாணி என்பதால், பெரிதாக பாதிக்கவில்லை.

 

நாயகன் கண்ணோட்டத்தில் இருக்கும் காதலை தவறு, என்று சொல்லும் நாயகி, அதே கண்ணோட்டத்தில் காதலை பார்க்கும் போது, உண்மையான காதல் என்றால் என்ன? என்பதை புரிந்துக் கொள்வதும், ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், அவரை தொடர்ந்து தொல்லைக் கொடுக்க கூடாது, என்பதை நாயகன் புரிந்துக் கொள்ளும் காட்சியும் ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற அனைத்தும் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்கள் தான் என்றாலும், படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்வதோடு, அதை காமெடியாக காட்சிப்படுத்தியிருக்கும் அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரனை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ ஓல்டு இஸ் கோல்டு.

 

ரேட்டிங் 2.7/5

Recent Gallery