Latest News :

’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட விமர்சனம்

bac3839650df092112bcc9f6e7bfe58a.jpg

Casting : Pavish Narayan, Anikha Surendran, Mathew Thomas, Priya P Varrier, Venkatesh Menon, Ramya Ranganathan, Siddhartha Shankar, Rabiya Khatoon, R Sarath Kumar, Saranya Ponvannan, ‘Aadukalam’ Naren, Uday Mahesh, Sridevi

Directed By : Dhanush

Music By : GV Prakash Kumar

Produced By : Wunderbar Films Pvt Ltd - Kasthoori Raja & Vijayalakshmi Kasthoori Raja

 

காதல் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். பிரியா வாரியர் உடன் பவிஷ்க்கு திருமணம் முடிவாகும் நேரத்தில் முன்னாள் காதலி அனிகாவின் திருமண அழைப்பிதழ் அவருக்கு கிடைக்கிறது. திருமணத்திற்கு செல்வது போல், பிரிந்து சென்ற காதலியை பார்க்க செல்லும் பவிஷ், பழைய காதலியுடன் இணைகிறாரா? அல்லது பெற்றோர் பார்த்த பெண்ணுடன் புதிய காதலை தொடங்குகிறாரா ? என்பதை 2K இளசுகளின் மனதுக்கு நெருக்கமாக சொல்வதே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.

 

படத்தின் இயக்குநர் நடிகர் தனுஷின் அக்கா மகன் தான் நாயகன் பவிஷ். அறிமுக காலக்கட்டங்களில் தனுஷை பார்த்தது போலவே இருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, காதல் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்கோர் பண்ணியிருப்பவர், நடனத்திலும் வெளுத்தி வாங்கியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன், குழந்தை தனம் மாறாத முகமாக இருந்தாலும், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார். 

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மேத்யூ தாமஸ், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வெங்கடேஷ் மேனன் மற்றும் ராபியா கதூன் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

சித்தார்தா ஷங்கர், ரம்யா ரங்கநாதன், பிரியா வாரியர், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு உரம் போட்டிருக்கிறார்கள்.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகமாகவும், கொண்டாட்டம் ரகமாகவும் இருக்கிறது. காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும் போது பரவசப்படுத்துகிறது. பின்னணி இசை காதல் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பலவிதமான வண்ணங்களை பயன்படுத்தி படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தி வானவில்லுக்கே சவால் விட்டிருக்கிறார்.

 

வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், அப்படி ஒரு உணர்வு பார்வையாளர்களிடம் ஏற்படாத வகையில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே

 

கலை இயக்குநர் ஜாக்கி, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் ஆகியோர் காட்சிகளில் இருக்கும் கொண்டாட்ட உணர்வுக்கு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் நடிகர் தனுஷ், தற்போதைய 2K இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காதல் கதையை கலர்புல்லாகவும், கலககலப்பாகவும் சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அதற்கான நடிகர்கள் தேர்வு, அவர்களின் நடிப்பு என அனைத்திலும் இளமை துள்ளுகிறது.

 

வழக்கமான காதல் கதை தான், என்று தலைப்பிலேயே சொல்லியிருந்தாலும், காதல் தோல்விப் பாடலுடன் தொடங்கும் படத்தின் மூலம் தற்போதைய இளைஞர்களின் காதல் மற்றும் திருமணம் மீதான பார்வையை, திரை மொழியில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இளசுகளை கொண்டாட வைக்கும்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery