Casting : Pradeep Ranganathan, Anupama Parameswaran, Kayadu Lohar, VJ Siddhu, Harshath Khan, KS Ravikumar, Mysskin, Goutham Vasudev Menon, Mariam George, Indhumathi, Thenappan
Directed By : Ashwath Marimuthu
Music By : Leon James
Produced By : AGS Entertainment (P) Ltd - Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh
நன்றாக படித்து ஒழுக்கமாக இருக்கும் பசங்களை விட, படிக்காம கெத்தா சுத்திட்டு இருக்கும் பசங்கள தான், பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதெல்லாம் வெறும் கல்லூரி வாழ்க்கை வரை மட்டும் தான். அதை தாண்டிய ஒரு வாழ்க்கையில் கெத்தா சுத்திட்டு இருந்தா, வெத்து என்று நினைத்து பெண்கள் ஓரம் கட்டி விடுவார்கள். அதனால், நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறினால் காதல் மட்டும் அல்ல சகலமும் நம்மை தேடி வரும், என்ற அறிவுரை தான் ‘டிராகன்’.
நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, அதை தாண்டிய வாழ்க்கையில், தோல்வியடைந்தவர் என்பது தெரியாமலேயே கெத்தாக வலம் வந்து பிறகு நொந்துப் போகும் இடங்களில் அசால்டாக நடித்திருக்கிறார். சந்தோஷத்தையும், வருத்தத்தையும் துள்ளிக் குதித்து, கூச்சலிட்டு வெளிப்படுத்தும் பிரதீப்பின் வித்தியாசமான மேனரிசம் இளசுகளை கவர்வவதோடு, அவரிடம் இருக்கும் நடிகர் தனுஷின் பாதிப்பை சற்று மறைக்கவும் செய்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அள்ள அள்ள குறையாத இளமையோடு வலம் வருகிறார். விரட்டி விரட்டி காதலித்தவன் வீணாப்போனப் பிறகு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடி, ஆனால் விட்டுவிடு..,என்று கேட்கும் கட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் காயடு லோஹர், கவர்ச்சி மற்றும் நடிப்பி இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவரது காமெடிக் காட்சிகளும் அவ்வபோது சிரிக்க வைக்கிறது.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மிஷ்கின், கண்டிப்பு இல்லை என்றாலும் படிப்பு தான் வாழ்க்கையின் அடித்தளம் என்பதை மாணவர்களிடம் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.
இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி பிரமாண்டமான காட்சி அமைப்பின் மூலம் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், யூகிக்கும்படியான காட்சிகளாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் திருப்பங்களை மிக சுவாரஸ்யமாக தொகுத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அறிவுரை சொன்னாலும், அதை கல்லூரி அலப்பறைகளோடும், கலர்புல்லாகவும் சொல்லி இளசுகளை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்கிறார்.
கல்லூரி அலப்பறைகள், காதல் தோல்வி, குறுக்கு வழியில் சென்றாலும் விரைவான முன்னேற்றம், அதன் மூலம் கிடக்கும் பலன்கள் என்று நாயகனின் வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிப்பது என அனைத்தையும் இளைஞர்களின் மனதுக்கு நெருக்கமாக மட்டும் இன்றி பெற்றோர்களின் மனதுக்கும் நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை, தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பிப்பதும் வாழ்க்கை தான், என்பதை ஜாலியாக சொல்லி இளைஞர்களின் மனங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘டிராகன்’ நெருப்புடா...
ரேட்டிங் 3.5/5