Casting : Radharavi, Srija Ravi, Srikumar, Vanitha Vijayakumar, Vaiyapuri, Swaminathan Rajesh, Kottachi
Directed By : Naveen Kumar
Music By : VR Suwaminathan Rajesh
Produced By : RVR Studios - VR Suwaminathan Rajesh
எம்.எல்.ஏ ஒருவர் தனது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வரும் தகவல் அறிந்து, தனது பணம் முழுவதையும் கொடைக்கானலில் உள்ள சொகுசு விடுதியில் உள்ள அறைகளில் மறைத்து வைக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராதாரவி, தேன் நிலவுக்காக வந்திருக்கும் ஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி, மகனின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கும் கொட்டாச்சி மற்றும் அவரது குடும்பம், பிராங்க் வீடியோ எடுக்கும் நான்கு நண்பர்கள் குழு, கள்ளக்காதலியுடன் வந்திருக்கும் வையாபுரி, தனியாக வந்திருக்கும் சுவாமிநாதன் ராஜேஷ் ஆகியோர் அந்த விடுதியில் தங்குகிறார்கள்.
இதற்கிடையே, விடுதிக்கு சம்மந்தமே இல்லாத இளம் பெண் ஒருவர் விடுதியில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கான பின்னணி குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரி வனிதா விஜயகுமார், குற்றவாளியை கண்டுபிடித்தாரா ?, யார் அந்த கொலையாளி ?, எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார் ?, எம்.எல்.ஏ-வின் பணம் என்னவானது ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘கடைசி துப்பாக்கி’.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, குறைவான காட்சிகள் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.
சொகுசு விடுதியின் விருந்தினர்களாக நடித்திருக்கும் ஸ்ரீகுமார், வையாபுரி, சுவாமிநாதன் ராஜேஷ், கொட்டாச்சி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், விசாரிப்பதைக் காட்டிலும் சிகரெட் புகைப்பதையே வேலையாக செய்தாலும், இறுதியில் எந்தவித கஷ்ட்டமும் இன்றி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுகிறார்.
இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதிலும் கானா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மோகன் குமார், கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். பல இடங்களில் கதாபாத்திரங்களின் முகங்கள் மிகவும் சோர்வாக காணப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் படத்தொகுப்பாளர் லோகேஸ்வர், இயக்குநர் சொல்ல நினைத்ததை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
ஒரே இடத்தில் நடக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து இயக்குநர் நவீன் குமார் இயக்கியிருக்கிறார். கொலை செய்தது யார் ? என்பது படத்தின் துவக்கத்திலேயே தெரிந்தாலும், கொலையின் பின்னணி மற்றும் கொலையை நேரில் பார்த்தவரின் தடுமாற்றம் ஆகியவற்றுடன், விடுதியில் தங்கியிருக்கும் மற்ற கதாபாத்திரங்களோடு முழு படத்தையும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் நவீன் குமார்.
குறைகள் சில இருந்தாலும், தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல், சொல்ல வந்ததை சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்லியிருப்பதால் குறைகளை மறந்து படத்தை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘கடைசி தோட்டா’ குறி தப்பவில்லை.
ரேட்டிங் 3/5