Casting : Roopa Koduvayur, Narendra Prasath, Geetha Kailasam, Raju Rajappan, Subash Ramasamy, Haritha
Directed By : Peppin George Jayaseelan
Music By : Jecin George
Produced By : Naisat Media Works - Srinivasarao Jalakam
அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழும் நாயகி ரூபா கொடவையூர், ஒருநாள் தனது அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார். வெளியே தெரிந்தால் வேறு விதமாக கதை கட்டுவார்கள் என்று நினைக்கும் குடும்பத்தார், அவருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களிடம் சொல்கிறார்கள். ஊர் மக்களும் நம்பி விடுகிறார்கள்.
இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது, தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருப்பதோடு, திடீரென்று அசைவுகள் தெரிகிறது. இதனால் துக்க வீட்டில் சற்று சலசலப்பு ஏற்பட, மீண்டும் சடலத்தை தூக்க முயற்சிக்கும் போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிறது. துக்க வீட்டுக்கு வந்த ஊர் மக்கள் யாரும் அவர் அவர் வீட்டுக்கு திரும்பி செல்லாமல் அங்கேயே இருக்க, மறுபக்கம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்பவரை அழைத்து வந்து, என்னாச்சு என்று பார்க்க சொல்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்த சடலத்தை பார்த்துவிட்டு, இந்த பெண் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார், என்று சொல்கிறார். அதன்படி, இறந்த நாயகி ரூபா என்ன சொல்ல வருகிறார்?, என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்வதே ‘எமகாதகி’.
சடலம் திடீரென்று எழுந்து உட்கார்வது மட்டும் அல்ல மீண்டும் மீண்டும் அதை தூக்க முயற்சிக்கும் போது அந்தரத்தில் நிற்பது போலவும் இருப்பது நம்ப முடியவில்லை என்றாலும், இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடைபெற்று இருக்கிறதாம், அதை தான் இயக்குநர் படமாக எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக இருக்கும் நாயகி ரூபா கொடவையூர் தனது அளவான நடிப்பின் மூலம், உயிரற்ற உடலாக இருந்தாலும் பார்வையாளர்களை உலுக்கி விடுகிறார். காதலனை ”உயிரே” என்று அழைத்து தன் காதலை வெளிப்படுத்தும் விதம், வெட்க்கத்தோடு கலந்த சிரிப்பு ஆகியவற்றின் மூலம் அறிமுக நாயகி ரூபா, நயன்தாராக்களையும், திரிஷாக்களையும் ஓரம் கட்டிவிட்டு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காரப்போவது உறுதி.
அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரூபாவின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத், பார்த்த உடனே பிடித்துப் போகும் கேமராவுக்கான முகமாக இருக்கிறார். காதல் காட்சிகளில் அவரது திரை இருப்பு மற்றும் நாயகி உடனான கெமிஸ்ட்ரி திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அப்பாவாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா ஆகியோருடன் ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது இயல்பான நடிப்பின் மூலம், நடிகர்களாக அல்லாமல் கதைக்களத்தைச் சேர்ந்த கிராமத்து மக்களாக திரையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ், இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிப்பது போல் இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் டைடில் கார்டின் போது இடம்பெறும் நாட்டுப்புற பாடலின் வார்த்தை சுத்தமாக புரியவில்லை. காதல் பாடல் மனதை மயக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், குறைந்த ஒளியை பயன்படுத்தி கிராமத்து பழங்காலத்து வீட்டினுள் நம்மையும் பயணிக்க வைக்கிறார். துக்க வீட்டை சுற்றி கதை நடந்தாலும் அந்த வீட்டை காட்சிப்படுத்திய விதம் மற்றும் சடலத்தின் மாற்றங்கள் மூலம் தனது கேமரா மூலமாகவே ஏதோ ரகசியம் இருக்கிறது, என்பதை உணர வைத்துவிடுகிறார்.
படத்தொகுப்பாள ஸ்ரீஜித் சாரங், ஒரு எளிமையான கதையை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி சுருக்கமாகவும் சொல்லி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.
வன்முறை காட்சிகள் இல்லை என்றாலும் சாதி பாகுபாட்டின் வன்மத்தையும், அது மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் எஸ்.ராஜேந்திரனின் வசனங்கள் மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், பார்வையாளர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் விதத்தில் கூர்மையாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், தான் பார்த்த ஒரு உண்மை சம்பவதை திரை மொழியில் மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இதுபோல் நடந்த சில சம்பவங்கள் பற்றி கதாபாத்திரங்களை பேச வைத்து, அந்த சம்பவங்களுடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்திருப்பவர், வெவ்வேறு விசயங்கள் மீது பார்வையாளர்களின் கவனம் திருப்பும் விதமாக காட்சிகளை வடிவமைத்து இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை சொல்லி படத்தை முடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் அழகாகவும், நாகரீகமாகவும் இருக்கிறது. குறிப்பாக நாயகன், நாயகி இடையிலான கெமிஸ்ட்ரி மற்றும் அவர்களின் திரை இருப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாதி பாகுபாடு, பெண்ணியம், ஆணவக்கொலை மற்றும் அதன் பின்னணி ஆகியவை குறித்து படம் பேசினாலும், அனைத்தையும் அளவாக பேசியிருப்பதோடு, படம் குறிப்பிட்ட ஒரு விசயத்தை மட்டுமே சுற்றி நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல், கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை மிக சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலமாக, சமூக அக்கறையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், சிறந்த படைப்பாக மட்டும் இன்றி திரை ரசிகர்கள் ரசிக்கும்படியான சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த ‘எமகாதகி’ பெண்களின் மன உறுதியை உரக்க சொல்கிறார்.
ரேட்டிங் 4.5/5