Casting : Vimal, Soori,Shrita Rao,KGF Ram, Devadarshini, Namo Narayanan
Directed By : K.V.Nandha
Music By : John Peter
Produced By : J Studio International - M.John Peter
நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தெர்ந்தெடுக்கிறார்கள்.
கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன?, மக்களின் மாற்றம் விமலின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?, என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா’.
வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது, என்று ஒரு நடிகராக விமல் தொடர்ந்து செய்து வரும் வேலையை தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களை சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், வேலை இல்லாத நாயகி வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான மற்றும் அதர பழசான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருந்தாலும், தேவையில்லாத சில காட்சிகள் மூலம் படத்தின் நீளத்தை அதிகரித்து சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்கிறார்.
விமல், சூரி ஆகியோரது அலப்பறைகள் மூலம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் கே.வி.நந்தா, விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
மொத்தத்தில், ‘படவா’ பரவாயில்லை ரகம்.
ரேட்டிங் 2.5/5