Latest News :

’டெக்ஸ்டர்’ திரைப்பட விமர்சனம்

b16777875dd5baf1461a74386ffe536a.jpg

Casting : Rajiv Govindh, Abishek Gorge, Yuktha Pervi, Siddhara Vijayan, Harish Peradi, Ashraf Kurukkal, Soba Priya,

Directed By : Suriyan.G

Music By : Srinath Vijay

Produced By : Prakash SV

 

காதலர்களான நாயகன் ராஜீவ் கோவிந்த், நாயகி யுக்தா பெர்வி, திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், திடீரென்று யுக்தா பெர்வி மர்ம நபரால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். காதலியை மறக்க முடியாமல் சோகத்தில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைக்கு செல்லும் நாயகனின் மனநிலையை மாற்றுவதற்காக, அவரது பழைய நினைவுகளை அழிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழைய நினைவுகளை இழந்தாலும், தனது காதலியை கடத்தி கொலை செய்தவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நாயகனுக்கு, பள்ளி தோழி சித்தாரா விஜயனின் நட்பு கிடைக்கிறது. 

 

பழைய நினைவுகளை மறந்து தடுமாற்றத்தில் இருந்த நாயகன், சித்தாரா விஜயன் உடனான நட்பினால் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் நேரத்தில், மர்ம நபரால் அவரும் கடத்தப்படுகிறார். அவரை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன் அதில் வெற்றி பெற்றாரா? அல்லது தனது காதலியை இழந்தது போல் பள்ளி தோழியையும் பறிகொடுத்தாரா?,  நாயகனைச் சார்ந்தவர்களை கடத்தி கொலை செய்யும் நபர் யார்?, எதற்காக அவர் இப்படி செய்கிறார்? ஆகிய கேள்விகளுக்கான விடையை சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்வது தான் ’டெக்ஸ்டர்’.

 

நாயகனாக நடித்திருக்கும் ராஜீவ் கோவிந்த், காதலி மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பவை முரட்டுத்தனமாக வெளிக்காட்டுவதிலும் சரி, காதலியை இழந்த சோகத்தில் கஷ்ட்டப்படும் காட்சிகளிலும் சரி நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

 

சிறிய வேடங்களில் நடித்து வந்த அபிஷேக் ஜார்ஜ், முக்கிய வில்லன் வேடத்தில், சைக்கோ கொலையாளியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அப்பாவித்தனமான முகமாக இருந்தாலும், அதில் கொலைவெறியை வெளிக்காட்டி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் யுக்தா பெர்வி, தாராளமான கவர்ச்சி மட்டும் இன்றி தனது உடலின் ஏராளமான பகுதிகளில் நாயகனை தாராளமாக தொடுவதற்கு அனுமதித்து பார்வையாளர்களை கிரங்கடித்து விடுகிறார். “ஐயோ...பாட்டு இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சே...” என்று புலம்பும் ரசிகர்கள், யுக்தா பெர்வின் மரணத்தால் நாயகனை விட பெரும் சோகத்தில் மூழ்கி விடுகிறார்கள்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சித்தாரா விஜயன், சைக்கோ கொலையாளியிடம் சிக்கிக் கொண்டு கதறும் காட்சிகளில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

 

ஹரிஷ் பெராடியின் அனுபவமான நடிப்பு படத்திற்கு தூணாக துணை நின்றிருக்கிறது. அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, சிறுவர்கள் பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் என அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஸ்ரீநாத் விஜயின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளை ரசிக்க வைக்கும்படி பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆதித்ய கோவிந்தராஜனின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீனிவாஸ் பி.பாபு, தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் இயக்குநர் சொல்ல வந்ததை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் சொல்லும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

சிறு வயதில் விளையாட்டாக நடந்த ஒரு சம்பவம், எவ்வளவு பெரிய வினையாக உருவெடுக்கிறது, என்பதை கருவை வைத்துக் கொண்டு கதையாசிரியர் சிவம், சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையை எழுதியிருக்கிறார். 

 

சிவத்தின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சூரியன்.ஜி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்றாலும், அதில் காதல் உள்ளிட்ட கமர்ஷியல் விசயங்களை அளவாக கையாண்டு சுவாரஸ்யமான படமாக கொடுத்திருக்கிறார். 

 

படத்தின் ஆரம்பத்திலேயே காதல் பாடலை கலர்புல்லாக மட்டும் இன்றி படுகவர்ச்சியாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை திரையோடு ஒன்றிவிட செய்திருப்பவர், அடுத்தடுத்த காட்சிகளில் சைகோ கொலையாளியின் கொடூரம், அதைச் சார்ந்த சம்பவங்கள் என்று திரைக்கதையை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தி பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

 

மொத்தத்தில், ‘டெக்ஸ்டர்’ பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery