Casting : Ari Lopez, Renata Vaca, Alfredo Castro, Paulina Gaitán, Jason Patric, Diego Calva
Directed By : Mohit Ramchandani
Music By : Lisa Gerrard
Produced By : Rufus Parker
உலக பணக்காரர்கள் வாழும் நாடு, புதிய கண்டுபிடிப்புகளின் தாயகம், வசதியான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான நாடு என்றெல்லாம் அமெரிக்கா மீது இருக்கும் உயர்வான இமேஜை உடைத்தெறிந்து, அங்கேயும் லட்சம் மற்றும் குழந்தை தொழிலாளிகள் கொடுமை மற்றும் குழந்தை கடத்தில் குற்றங்கள் அதிகமாக இருக்கிறது, என்ற உண்மையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்த ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’.
அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் அகதிகளாக வாழும் கூட்டத்தில் இருக்கும் சிறுவன் ஆரி லோபஸ், கால்பந்தாட்ட கனவுகளோடு அமெரிக்க நகரத்திற்கு வருகிறார். ஆனால், அவர் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக்கப்படுகிறார். அவரைப் போல் அந்த இடத்தில் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆரி லோபஸின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அதில் இருந்து மீள்வவதற்கான அவரது முயற்சிகளையும் எதார்த்தமாகவும் அதே சமயம் சினிமா மொழியின் மூலம் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஆரி லோபஸ், வசனமே பேசாமல் தன் கண்கள் மூலமாக பல உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார். கால்பந்தாட்டத்தின் மீதான தனது அதீத ஆசையை காகிதம் ஒன்றை பார்த்தே வெளிப்படுத்தும் ஆரி லோபஸ், தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒட்டு மொத்த திரையரங்கையே பதற்றமடைய செய்துவிடுகிறார்.
அமெரிக்கா என்றால் ஆடம்பரம் மற்றும் அழகு மட்டும் அல்ல அங்கேயும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்கள் இருக்கத்தான் செய்கிறது, என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், திரைக்கதை மற்றும் காட்சிகளை எதார்த்தமாக வடிவமைத்து மொழி தெரியாதவர்களையும் படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.
இந்த படத்தின் மூலம் அமெரிக்காவின் கருப்பு பக்கங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கர், அதை திரை மொழியின் மூலம் சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான திரைப்படமாகவும் தயாரித்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5