Casting : Udhay Krishna, Bharathi Mohan, Thendral, Kushi, Sailaja, Maruthu Sezhiyan, Anand Babu, Meesai Rajendran, Anandakodi Subramaniyam, Auditor Baskaran, Kattangipatti Ravi Rajan, Kanchi Sekar
Directed By : Bharathi Mohan
Music By : Bharathi Mohan and
Produced By : Sun Shines Studios Krush Siva
மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி சமூகப் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க, அதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் களத்தில் இறங்குகிறார். மறுபக்கம், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு வனப்பகுதியில் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்படும் நாயகன் உதய கிருஷ்ணா, பழங்குடி சமூகப் பெண் தென்றல் மூலம் காப்பற்றப்பட்டாலும், தனது பழைய நினைவுகளை இழந்து விடுகிறார்.
கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன், கொலை செய்யப்பட்ட பெண் ஒருவருடன் இருக்கும் தொடர்பு காரணமாக நாயகன் உதய் கிருஷ்ணா குறித்தும் விசாரிக்கிறார். அப்போது தான் நாயகன் உதய் கிருஷ்ணா, காலிங்கராயனின் மகன் சேது ஜமீன் என்பது தெரிய வருகிறது. தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் கும்பல் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் உதய் கிருஷ்ணா, பழங்குடி மக்களுக்கு தனது தந்தை வழங்கிய 500 ஏக்கர் நிலத்தை அபகரிக்க அரசியல் அதிகாரம் படைத்த கும்பல் முயற்சிப்பதை கண்டுபிடிக்கிறார். மேலும், அந்த கும்பல் பற்றிய தகவல்களை சேகரிக்கும் போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. தகுந்த ஆதாரங்களுடன் அந்த கும்பலை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாயகன் உதய் கிருஷ்ணா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன், அதை எப்படி செய்தார்கள்?, பழங்குடி சமூகத்தினருக்கும், விவசாயிகளுக்கும் பல நன்மைகளை செய்த காலிங்கராயன் யார்? என்பதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், “உழுபவர்க்கே நிலம் சொந்தம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சொல்வதே ‘S/o காலிங்கராயன்’.
நாயகனாக நடித்திருக்கும் உதய் கிருஷ்ணா, உயரம், வாட்டசாட்டமான உருவம் என ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். சேதுபதி ஜமீன் என்ற கதாபாத்திரத்திற்கு நடிப்பு உள்ளிட்ட அனைத்து வகையிலும் நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகனுக்கு உறுதுணையாக பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரனாக நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் பாரதி மோகன், தனது விசாரணை மூலம், நரபலி உள்ளிட்ட பல்வேறு மர்மங்களின் பின்னணியை கண்டுபிடிப்பது மற்றும் அதிரடி ஆக்ஷன் என ஒரு நடிகராக முத்திரை பதித்திருக்கிறார்.
நாயகியாக பழங்குடி சமூகப் பெண் செல்லக்கிளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தென்றல் எதார்த்தமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். இரண்டாம் கதாநாயகிகளாக நடித்திருக்கும் குஷி மற்றும் சைலஜா கதைக்கு மட்டும் இன்றி கமர்ஷியல் ஏரியாவுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் மருது செழியன் நடிப்பு அளவு.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஆனந்த் பாபு, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மீசை ராஜேந்திரன், அமைச்சராக நடித்திருக்கும் அனந்தகோடி, சுப்ரமணியம், ஆடிட்டர் பாஸ்கர், கண்டாங்கி பட்டி ராஜன், காஞ்சி சேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும், எந்தவித தடுமாற்றமும் இன்றி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சந்திரன் சாமியின் கேமரா மலை மற்றும் வனப்பகுதிகளை கூடுதல் அழகோடு காட்சிப்படுத்தி கண்களை குளிர்விக்கிறது.
கிருஷ் சிவாவின் பின்னணி இசை, சரண் சண்முகத்தின் படத்தொகுப்பு, சரவெடி சரவணனின் சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு என அனைத்தும் படத்திற்கு தூணாக பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் பாரதி மோகனின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்க வைத்து, முனுமுனுக்க வைக்கிறது. குறிப்பாக, காலிங்கராயர் பற்றிய டைடில் பாடல் மற்றும் “கூவாதோ பாடாதோ கொல்லிமலை குயிலே...” என்ற டூயட் பாடல் சூப்பட் டூப்பர் ஹிட் ரகம்.
”உழுபவரே முதன்மையானவர், அவருக்கே நிலம் சொந்தம்” என்ற கருத்தை உரக்க சொல்லும் கருவுக்கு, கிரைம் திரில்லர் ஜானர் திரைக்கதை வடிவம் கொடுத்து, வசனங்கள் மற்றும் காட்சிகளை சமூக பொறுப்புடன் வடிவமைத்திருக்கும் இயக்குநர் பாரதி மோகன், ஆன்மீகம் என்ற பெயரில் பழங்குடி சமூகத்தினர் வாழ்வாதரங்களை பறித்த அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பின்னணியை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் பாசன கால்வாய் கட்டிய காலிங்கராயனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது கதையை, திரைக்கதையில் சிறப்பான முறையில் கையாண்டிருக்கும் இயக்குநர் பாரதி மோகன், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக காட்சி மொழியில் சொல்லக்கூடிய கதையை சிறிய முதலீட்டில், பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் நியாயமான முறையில் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘S/o காலிங்கராயன்’ நல்ல முயற்சி.
ரேட்டிங் 3/5