Latest News :

’டெஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

57b10a7ac3d71d23f55657685d1c9b79.jpg

Casting : Madhavan, Nayanthara and Siddharth, Meera Jasmine, Kali Venkat, Aadukalam Murugadass

Directed By : S.Sashikanth

Music By : Shakthisree Gopalan

Produced By : Chakravarthy Ramachandra & S.Sashikanth

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கொண்டாடப்பட்ட சித்தார்தை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. அதனால், சித்தார்த் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறது. ஆனால், தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத சித்தார்த், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே ஓய்வு குறித்து அறிவிக்க நினைக்கிறார். இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

 

தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக பயணித்தாலும், ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு, கணவன், குழந்தை என்ற வாழ்க்கையே போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர், அதற்கான கடைசி முயற்சியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்கிறார்.

 

இந்த மூவரும் தங்கள் கனவுகளின் கடைசி வாய்ப்பை எதிர்நோக்கி பயணிப்பதோடு, இந்த உலகத்திற்கு தங்களை நிரூபிப்பதற்கான கடைசி தருணமாகவும் பார்க்கிறார்கள். இதனால், எப்படியாவது நினைத்தது நடக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் பயணிக்கும் இவர்கள் மூவரின் பயணத்தை ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் கிரிக்கெட் போட்டி, இவர்களை மிகப்பெரிய சோதனையில் சிக்க வைக்கிறது. அந்த சோதனையை கடந்து தாங்கள் நினைத்தது போல் வாழ்க்கையில் சாதனை படைத்தார்களா? என்பதை மனிதர்களின் ஈகோ விளையாட்டின் மூலம் சொல்வதே ‘டெஸ்ட்’.

 

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா மூன்று பேரும் அசுரத்தனமாக நடித்திருக்கிறார்கள். மூவரில் யார் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருவரும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறு சிறு ரியாக்‌ஷன்களை கூட அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

வெற்றி பெற்றவன் பின்னாடி செல்லும் உலகத்தைப் பார்த்து ஆத்திரம் கொள்ளும் தோல்வியுற்றவனாக நடித்திருக்கும் மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும், இறுதியில் பணத்திற்காக எடுக்கும் வில்லன் அவதாரத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

வெற்றி என்பது சாதாரணமாக கிடைப்பதில்லை, அந்த வெற்றியை கடைசிவரை தன்வசப்படுத்திக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த், அளவான நடிப்பு மூலம் தனது அழுத்தமான மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

சொந்த குரலில் பேசி நடித்திருக்கும் நயன்தாரா, குழந்தைக்காக ஏங்கும் பெண்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

 

சித்தார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மினும் படத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக அவருக்கு சிறு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் சரியாக பயன்படுத்தி மீரா ஜாஸ்மின் ரிட்டர்ன் என்று சொல்லியிருக்கிறார்.

 

காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்களும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹிலின் பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதம், சினிமாத்தனமாக அல்லாமல் நிஜ கிரிக்கெட் போட்டியை பார்க்கும் உணர்வை கொடுத்திருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர்கள் என்.மதுசூதன் மற்றும் சுவேதா சாபு சிரில் ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சஷிகாந்த், கிரிக்கெட் போட்டியை களமாக கொண்டு ஈகோவினால் வாழ்க்கையில் விளையாடும் மனிதர்களையும், அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும் விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

உலகம் கொண்டாடும் வெற்றியாளர்கள் அந்த இடத்தை சாதாரணமாக அடைந்துவிடவில்லை என்பதையும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எஸ்.சஷிகாந்த், மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் சேர்த்து அமைத்திருக்கும் திரைக்கதை  ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘டெஸ்ட்’ டி20 போல் விறுவிறுப்பாக இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery