Casting : Gautham Karthik, Vaibhavi Shandilya, Shah Ra, Yaashika Aanand, Chandrika Ravi, Karunakaran
Directed By : Santhosh P. Jayakumar
Music By : Balamurali Balu
Produced By : K. E. Gnanavel Raja
படம் தொடங்குவதற்கு முன்பாக, “டிஸ்யூ பேப்பர் எடுக்காமல் உள்ளே வந்தவங்க தயவு செய்து எடுத்துட்டு வாங்க...வாயும் கையும் துடைக்குறதுக்கு பயன்படும்.” என்ற ஸ்லைட் போடப்படுகிறது. இப்படி டைடிலுக்கு முன்பாகவே தனது வேலையை தொடங்குவிடும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், படம் முழுவதும் குத்து...குத்து...என்று குத்தியிருக்கிறார்.
பிளேய் பாயான கெளதம் கார்த்திக் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார். எப்படியோ ஹீரோயின் வைபவி சாண்டில்யா, கெளதமை பற்றி தெரிந்தாலும், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். ஆனால், அவருடன் பழகி பார்க்க வேண்டும் என்ற கண்டிஷனோடு. வருங்கால மனைவியின் கண்டிஷனை நிறைவேற்றுவதற்காக அவருடன் கெளதம் கார்த்திக் தாய்லாந்து செல்கிறார். அவருடன் அவரது நண்பரும் நண்பரின் காதலியும் என நான்கு பேரும் தாய்லாந்த் நாட்டில் பங்களா ஒன்றில் தங்குகிறார்கள்.
ஏற்கனவே அந்த வீட்டில் குடிக்கொண்டிருக்கும் பேய், இந்த நான்கு பேரையும் பழமுறுத்த அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் இவர்களில் இரண்டு பெண்கள் மட்டும் எஸ்கேப் ஆகிவிட, கெளதம் கார்த்திக்காலும், அவரது நண்பராலும் எஸ்கேப் ஆக முடியவில்லை. உடனே எண்ட்ரி கொடுக்கும் பேய், “கண்ணி கழியாமல் நான் செத்துபோய்ட்டேன். எனக்கு ரொம்ப நாளா வெர்ஜன் ஆணோடு செக்ஸ் வச்சிக்கனும்னு ஆசையா இருக்கு, அந்த ஆசைய நீங்க தான் தீர்த்து வைக்கனும்” என்று கூறுவதோடு, ”என்னோடு செக்ஸ் வச்சிக்கிட்டா நீங்க செத்துடுவிங்க.” என்ற ட்விஸ்ட்டையும் வைக்குது.
பேய் வீட்டை விட்டு வெளியேவும் போக முடியாம, பேயுடன் செக்ஸும் வச்சிக்க முடியாம அந்த வீட்டில் இருந்து திண்டாடும் கெளதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பருடன் நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், கருணாகரன் என்று மேலும் சிலர் வந்து சிக்கிக்கொள்ள அவர்களையும் வச்சி செய்ய நினைக்கும் பேயின் காம பசிக்கு இவர்கள் பலி ஆனார்களா? அல்லது அங்கிருந்து தப்பித்தார்களா? என்பது தான் படத்தின் கதை.
இந்த படம் வசூல் மழை பொழிந்து 2015 ஆம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை விட, பெரிய அளவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா லாபத்தை சம்பாதிக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. இப்படிப்பட்ட லாபகரமான ஒரு படத்தை இயக்கியிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமாரை பாராட்டுவதைக் காட்டிலும், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும், கட் பண்ண வேண்டிய காட்சிகளை கட் செய்யாமல் விட்ட சென்சார் குழு உறுப்பினர்களை தான் அதிகமாக பாராட்டியாக வேண்டும்.
படம் ஆரம்பித்ததும், ஒரு அறையில் பெண்களின் உள்ளாடைகள் கலைந்திருக்க, கட்டில் மெத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. கேமரா மேலே சென்றதும், அந்த மெத்தையில் சிறுமி ஒருவர் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார். இதை இப்படியே விட்டால் கூட பரவாயில்லை. அந்த சிறுமி “எல்லாத்தையும் குறு குறு என்று பார்ப்பது, டபுள் மீனிங்காவே நினைப்பது...” என்று சொல்வது போல இயக்குநர் காட்சி வைத்திருக்கிறார். அந்த காட்சியில் அந்த சிறுமியை காட்டுவது தவறு என்று இயக்குநருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், சென்சார் அதிகாரிகள் எப்படி கண்டுக்காமல் விட்டார்கள், என்று தான் புரியவில்லை. ஆரம்பத்திலேயே இப்படி ஆபாச எண்ணத்தோடு தொடங்கும் படம், அடுத்தடுத்த கட்டத்தில் வசனங்களாலும், காட்சிகளினாலும் ஆபாசத்தை அளவே இல்லாமல் வாரி இறைத்திருக்கிறார்கள்.
ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்து ஓரளவு தலை தூக்க தொடங்கியிருக்கும் கெளதம் கார்த்திக், இந்த சமயத்தில் இப்படிப்பட்ட படத்தில் நடித்திருக்கிறாரே! என்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் நடித்திருந்தாலும், காமெடி, காதல், நடனம் என்று கமர்ஷியல் ஹீரோவுக்கான அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கெளதமின் நண்பராக வரும் சாரா, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், கருணாகரன் ஆகியோரது கூட்டணியில் வரும் காமெடி காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும் பழசு தான் என்றாலும், ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன.
வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று பேரில் வைபவி சாண்டில்யா கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும், மற்ற இரண்டு நடிகைகளும், ரசிகர்கள் வைத்திருக்கும் டிஸ்யூ பேப்பருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு காட்டு...காட்டு....என்று காட்டியிருக்கிறார்கள்.
பாலமுரளி பாலு வின் இசை, பாலுவின் ஒளிப்பதிவு இரடையும் விட, கலை இயக்குநரின் செட் பிராப்பர்ட்டிகளும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் தான் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.
ஆண்கள், பெண்கள் என்று தனி தனியாக அவர்களது நண்பர்களுடன் பேசிக்கொள்ளும் ஆபாச வசனங்களை, அப்பா பையன் பேசுவது போலவும், கணவன் மனைவி விருந்தினர்களிடம் பேசிக்கொள்வது போலவும் காட்சிகளை வைத்து அதிரடி காட்டுகிறார்கள். தொலைக்காட்சிகளில் வரும் அதற்கான மருத்துவர்களையும் இப்படத்தில் நடிக்க வைத்து காட்சிகளின் வீரியத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் இயக்குநர், புதிய டிரெண்டாக காமெடி பேயையே செக்ஸ் பேயாக காட்டி, முட்டாள் ரசிகர்கள் இங்கு ஏராளம் என்பதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.
இப்படிப்பட்ட படங்களை எடுத்தா சமூகம் உருப்படுமா? என்று இயக்குநரிடம் கேட்க நினைப்பவர்கள், இந்த படத்தை கூட பார்க்க வேண்டாம், இந்த படத்தை பார்க்க வரும் கூட்டத்தை பார்த்தாலே போதும், நமக்கு எதுக்கு வம்பு என்று பொத்திட்டு ஒதுங்கிவிடுவார்கள்.
மொத்தத்தில், ஒரு காலத்தில் பரங்கிமல ஜோதி உள்ளிட்ட சில திரையரங்குகளில் சில சிறப்பு படங்கள் ஓடும். ஆனால், தற்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த சிறப்பு படத்தை ஓட்டுவதற்கான முயற்சியாகவே இந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் அமைந்திருக்கிறது.
ஜெ.சுகுமார்