Latest News :

ரூபாய்

croppedImg_969338465.jpeg

Casting : Chandran, Aanandi, Chinni Jayanth, Kishor Ravichandran, Harish Uthaman

Directed By : 'Sattai' Anbazhagan

Music By : D.Imman

Produced By : Prabhu Solomon

பணம் பத்தும் செய்யும், ஆனால் அந்த பணம் தவறான வழியில் வந்தால், நம்மை பாடாய் படுத்திவிடும், என்பது தான் ‘ரூபாய்’ படத்தின் கரு.

 

தேனியில் இருந்து கோயம்பேடுக்கு லோடு ஏற்றி வரும் ஹீரோ சந்திரன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ரவிச்சந்திரன், தங்களது பண தேவைக்காக, வீடு மாறும் சின்னிஜெயந்தின் வீட்டு சாமான்களை ஏற்றிச் செல்கிறார்கள். ஆனால், சின்னி ஜெயந்துக்கு வீடு கொடுப்பதாக சொல்லிய ஹவுஸ் ஓனர், திடீரென்று வீடு இல்லை என்று சொல்லிவிட, வீடு தேடி அலையும் சின்னி ஜெயந்த், சந்திரனின் வேனிலேயே ஒரு நாள் முழுவதும் தனது வீட்டு பொருட்களையும், மகள் ஆனந்தியையும் வைத்துக் கொண்டு பயணிக்கிறார்.

 

இதற்கிடையே, வங்கி ஒன்றில் பல கோடிகளை கொள்ளையடிக்கும் ஹரீஷ் உத்தமன், அதை எடுத்துச் செல்லும் போது போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க, சந்திரனின் வேனில் பண பெட்டியை வைத்துவிட, அந்த பணத்தை சந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் பார்த்துவிடுவதோடு, அதை எடுத்து செலவு செய்யவும் தொடங்குகிறார்கள். வீடு வாங்குவது, ஓட்டல் வாங்குவது என்று அந்த பணத்தால் சந்திரன், சின்னி ஜெயந்த் ஆகியோர் தங்களது வாழ்க்கை தரத்தையே மாற்றிக்கொள்ள, அந்த பணத்தை தேடிக்கொண்டிருக்கும் ஹரிஷ் உத்தமனிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

அந்த பணத்தை பாதியை செலவழித்த சந்திரன் மற்றும் சின்னி ஜெயந்திடம் ஹரிஸ் உத்தமன், தனது பணம் முழுவதும் தனக்கு வேண்டும் என்று கேட்பதோடு, பணத்தை தரவில்லை என்றால் அனைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். இதனால் அந்த பணத்தில் வாங்கிய அனைத்து பொருட்களையும் ஹரிஸ் உத்தமனுக்கு திருப்பி கொடுத்தாலும், முழு பணத்தையும் கொடுக்க முடியாத சந்திரனை கொள்ளையடிக்கும்படி ஹரிஸ் உத்தமன் கூற, அவரது பேச்சைக்கேட்டு சந்திரன் கொள்ளையடித்தாரா இல்லையா, என்பதே படத்தின் கதை.

 

’சாட்டை’ படத்தை இயக்கிய எம்.அன்பழகனின் இரண்டாவது படம் தான் இந்த ‘ரூபாய்’. தனது முதல் படத்தில், தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், என்று பாடல் சொல்லிய அன்பழகன், பணம்...பணம்....என்று அலையும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.

 

எளிமையான கருவுக்கு வளிமையான திரைக்கதை அமைத்துள்ள அன்பழகன், ஒரு சில நடிகர்களை வைத்துக்கொண்டே முழு படத்தையும் பரபரப்பாக நகர்த்தியிருப்பதோடு, எதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகளை வைத்து கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

டி.இமான் இந்த படத்தில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே தனது இசை மூலம் ரசிகர்களை கதைக்குள் இழுத்துவிடும் இமான், படம் முழுவதுமே தனது பின்னணி இசையை கவனிக்கும்படி செய்கிறார். ஒளிப்பதிவாளர் வி.இளையராஜா, சென்னையின் நெரிசல் மிகுந்த இடங்களில் பல காட்சிகளை படமாக்கியிருந்தாலும், அத்தனை காட்சிகளையும் எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார். அதேபோல், கிளைமாக்ஸில் வரும் ஆக்‌ஷன் காட்சியாகட்டும், படத்தின் முதல் பாதியில் வரும் வேன் பயணம் என்று தனது பணியின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

கயல் படத்திற்கு பிறகு ஜோடி சேர்ந்திருக்கும் சந்திரன், ஆனந்தி இருவரும் கதைக்கு தேவையான நடிகர்களாக இருக்கிறார்கள். அறிமுக நடிகர் கிஷோர் ரவிச்சந்திரன் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார். காமெடி மட்டும் இன்றி குணச்சித்திர நடிகராகவும் இப்படத்தில் ஜொலித்துள்ள சின்னி ஜெயந்துக்கு, பல வித்தியாசமான வேடங்கள் குவியப் போகிறது. ஹரிஷ் உத்தமன் எப்போதும் போல மிரட்டியிருக்கிறார்.

 

ரசிகர்களுக்கு பிடித்த நல்ல திரைப்படமாக மட்டும் அல்லாமல், மக்களுக்கு நல்ல செய்தியை சொல்லும் ஒரு படமாகவும் இருக்கும் இந்த ‘ரூபாய்’, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் டிக்கெட் விலை உயர்ந்திருந்தாலும், அதை கொடுத்து பார்க்க வேண்டிய படமாகவே உள்ளது.

Recent Gallery