Casting : Rajan Tejeshwar, Aarushi, Chamak Chandra, Munishkanth
Directed By : Ravi Appulu
Music By : Sidharth Vibin
Produced By : CR Rajan
அறிமுக ஹீரோ ராஜன் தேஜேஸ்வர், ஹீரோயின் தருஷி நடிப்பில் விஜயை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி அப்புலு இயக்கத்தில், சி.ஆர்.ராஜன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘செயல்’.
அறிமுக ஹீரோவை ஆக்ஷன் ஹீரோவாக காட்ட வேண்டுமானால், இயக்குநர்கள் கையில் எடுக்கும் கதைக்களம் வட சென்னையாக இருப்பதோடு, வட சென்னையை எந்த அளவுக்கு கொடூரமாக காட்ட வேண்டும் என்பதை, அமேசான் காடுகளில் பயிற்சி பெற்று வந்தவர்களைப் போல ரொம்பவே கொடூரமாக காட்டுவது தான் கோலிவுட்டின் வழக்கம், என்ற நிலையை மாற்றி இயக்குநர் ரவி அப்புலு திரைக்கதையை கையாண்ட விதம் தான் இப்படத்தின் ஸ்பெஷல்.
வட சென்னை இளைஞரான ராஜன் தேஜேஸ்வர், பள்ளி பருவத்திலேயே ஹீரோயின் தருஷியை டாவடிக்க, அவரோ இவரை கண்டுக்காமல் இருப்பதோடு, வேறு மாநிலத்திற்கு படிக்க சென்றுவிடுகிறார். அதே மாநிலத்தில் வேலைக்கு செல்லும் ஹீரோ எதிர்பாராதவிதமாக ஹீரோயினை சந்திக்க மீண்டும் தனது பழைய டாவடிக்கும் வேலையை தொடங்குகிறார். இதற்கிடையே, விடுமுறையின் போது சென்னைக்கு வருபவர், தனது ஏரியாவில் உள்ள மார்க்கெட்டில் ரவுடி ஒருவரை அடித்து துவைத்தெடுக்கிறார். ஹீரோவிடம் அடிவாங்கியதால் தனது மரியாதையை பறிக்கொடுப்பதோடு, தனது கோட்டையான மார்க்கெட்டையும் இழக்கும் நிலைக்கு ஆளாகும் வில்லன், மீண்டும் அதே இடத்தில் ஹீரோவை அடித்தால் தான், தனது மரியாதையை திரும்ப பெற முடியும் என்பதால், ஹீரோவை அதே மார்க்கெட்டுக்கு வரவைத்து அடிக்க நினைக்கிறார். அதற்காக ஹீரோவிடம் சமாதானமாக பேசி தனது இடத்திற்கு வர வைக்க முயற்சிக்கிறார். அதே சமயம், ரவுடியை மார்க்கெட்டில் அடித்ததை பார்த்துவிட்டு, தனது மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஹீரோயினின் தந்தை முடிவு செய்கிறார். தனது ஆக்ஷன் எப்பிசோட்டினால் தான் தனது காதலுக்கு காதலி குடும்பத்தார் பச்சைக்கொடி காட்டினார்கள் என்பதை அறிந்துக் கொள்ளும் ஹீரோ, ரவுடியிடம் அடி வாங்கினால் தனது காதலுக்கு எதிர்ப்பு வந்துவிடும் என்பதால், ரவுடியிடம் இருந்து எஸ்கேப்பாக நினைக்கிறார். என்ன தான் நடந்தாலும், மார்க்கெட்டை தன் வசப்படுத்த ஹீரோவை அடித்தே ஆக வேண்டும், என்ற வெறியோடு சுற்றும் ரவுடி ஜெயித்தாரா, அவரிடம் இருந்து எஸ்கேப் ஆக நினைக்கும் ஹீரோ ஜெயித்தாரா என்பது தான் ‘செயல்’ படத்தின் மீதி கதை.
வட சென்னை படம் என்றாலே ரவுடிசமும், ரத்தமும் தான் என்ற தமிழ் சினிமாவின் பார்மட்டை மாற்றியமைத்து, இலகுவான காதலுடன், கலகலப்பான காமெடியை சேர்த்து புதிய பார்மட்டில் குட்டி மெசஜையும் சொல்லியிருக்கிறார்கள்.
அறிமுக ஹீரோ ராஜன் தேஜேஸ்வர், நடனம், ஆக்ஷன் என்று கமர்ஷியலாக அமர்க்களப்படுத்துபவர் நடிப்பிலும் புதுமுகம் என்பதை காட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். டயலாக் டெலிவரியின் போது மட்டும் தனது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் போதும், கிரமாம், சிட்டி என அனைத்து ஏரியாவுக்குமான ஹீரோவாக நிச்சயம் வலம் வருவார்.
அறிமுக ஹீரோயின் தருஷிக்கு கொடுத்த வேலை குறைவாக இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். நாசர், ஆனந்தராஜ் போன்ற வில்லன்கள் காமெடி நடிகர்களாக மாறிவிட்ட நிலையில், அவர்களின் இடத்தில் வைத்துப் பார்க்க கூடிய முகத்தோற்றத்தோடு அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் சமக் சந்திரா, ரொம்பவே கவனிக்க வைக்கிறார். தனது முகத்திலேயே வில்லத்தனத்தைக் காட்டும் அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்பை போல, அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்திருந்தால் ரசிகர்கள் மனதில் இன்னும் அழுத்தமாக பதிந்திருப்பார். இருந்தாலும், வில்லத்தனம் காமெடி என இரண்டையும் கலந்துக்கட்டி கலக்கியிருக்கிறார்.
ரேணுகா, முனீஷ்காந்த், வினோதினி ஆகியோரது கதாபாத்திரத்திரங்கள் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, படம் முழுவதும் காமெடி பின்னி பிணைய உதவியாக இருக்கிறது.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெலொடியாக இருக்கிறது. வி இளையராஜாவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை படம் பிடித்த விதம் ரசிக்க வைக்கிறது.
இளம் ஹீரோக்கள் என்றாலே மது அருந்துவது, டம்மடிப்பது போன்ற காட்சிகளை வைத்து பில்டப் கொடுப்பது தான் வழக்கமாக இருந்தாலும், அப்படிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கும் இயக்குநர் ரவி அப்புலு, ரொம்ப நேர்மையாக படத்தை இயக்கியிருக்கிறார். பணக்காரராக இருந்தால் தான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை, மனம் இருந்தாலே உதவி செய்யலாம், என்ற மெசஜை காதல் பிளஸ் காமெடி கலந்து புதிய கோணத்தில் வட சென்னையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்.
ஊரே பார்த்து பயப்படும் ரவுடியை யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் ஹீரோ புரட்டி எடுப்பதும், இழந்த தனது மரியாதை திரும்ப பெற ரவுடி ஹீரோவை மீண்டும் அடிக்க காத்திருக்க, ஒவ்வொரு முறையும் ஹீரோ நழுவும் போது, வில்லன் தரப்பினர் செய்யும் காமெடி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. பெரிய ரவுடியாக இருந்தாலும் மனைவி என்றால் பயந்து ஓடுவது, அவரிடம் அடி வாங்குவது என்று ரவுடி ஏரியா முழுவதும் ரனகளமாக அல்லாமல் சிரிப்பு வெடியாக வெடிப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில், சாதாரண கதையாக இருந்தாலும் அதற்கு திரைக்கதை அமைத்து காட்சிப் படுத்தும் விதத்தில் இந்த ‘செயல்’ சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
ஜெ.சுகுமார்