Casting : Rajinikanth, Nana Patekar, Samuthirakani, Eswari Rao, Huma Qureshi
Directed By : Pa. Ranjith
Music By : Santhosh Narayanan
Produced By : Dhanush
கமர்ஷியல் ஹீரோவாக இருந்த ரஜினிகாந்தை ‘கபாலி’ மூலம் கதையின் நாயகனாக மாற்றிய இயக்குநர் ரஞ்சித், ரசிகர்களுக்கான ஹீரோவாக காட்டுவதில் சற்று தடுமாறியிருந்தார், அந்த தடுமாற்றத்தை ‘காலா’வில் சரி செய்துகொண்டாரா இல்லையா, என்று பார்ப்போம்.
திருநெல்வேலியில் இருந்து பிழைப்புக்காக மும்பையில் குடிபெயர்ந்த வேங்கையன் என்பவரது மகனான கரிகாலன் என்ற காலாவான ரஜினிகாந்த், மும்பை தாராவி பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அரசியல் பலம் கொண்ட நானா படேகர், மும்பையை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் தாராவி மக்களை விரட்டியடித்துவிட்டு அந்த இடத்தை அபகரிக்க நினைக்கிறார். இதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவிக்க, ரஜினிகாந்தை அழிக்க நானா படேகர் பல சதிகளை செய்ய, அந்த சதிகளை முறியடித்து தாராவியை ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார், என்பது தான் படத்தின் கதை.
ரஜினிக்கு மட்டும் அல்ல அவரது ரசிகர்களுக்கும் பிடித்த படமாகவே ‘காலா’ வை இயக்குநர் ரஞ்சித் கையாண்டுள்ளார். ரஜினியின் வயதுக்கு ஏற்றவாறு அவரின் கதாபாத்திரத்தை சித்தரித்திருந்தாலும், அதே சுறுசுறுப்பு விறுவிறுப்பு என்று ரசிகர்கள் கைதட்டும் அளவுக்கும் ரஜினியை காட்டியிருக்கும் ரஞ்சித், ‘கபாலி’-யில் வைத்த சில குறைகளை இதில் நிவர்த்தி செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
தனக்காக படத்தின் போக்கை மாற்றாமல் படத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தின், ஹீரோயிஷம் எந்த அளவுக்கு ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறதோ அதே அளவுக்கு அவரது நடிப்பும் ரசிக்க வைக்கிறது. நரைத்த தாடியுடன் தனது மனைவியை கொஞ்சுவதும், முன்னாள் காதலியைப் பார்த்ததும் பழைய நினைவில் ஏங்குவது என்று நடிப்பில் சிக்சர் அடித்திருக்கிறார்.
ரஜினியை சுற்றி மட்டுமே கதை நகராமல், அவரை சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நிலம் தான் மக்களின் உரிமை, என்பதை காட்சிகள் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரஞ்சித், முதல் முறையாக ராவணனை ஜெயிக்க வைத்திருக்கிறார்.
சிறுமி ரஜினியின் காலில் விழ வரும்போது, அதை தடுக்கும் ரஜினி, வணக்கம் சொன்னால் போதும், காலில் விழ வேண்டாம், என்று சொல்லும் காட்சி சமத்துவத்தை பேசுவதோடு, சிறுவர்களை எப்போதும் நல்லா படிக்கணும்...படிக்கணும்...என்று அவர் சொல்லும் காட்சிகள், படிப்பு தான் மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதையும் வலியுறுத்துகிறது.
ரொம்ப நாளுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார் நானா படேகர். அவர் மட்டும் நடிக்கவில்லை, படத்தில் அவரது கட்-அவுட்களும் நடிக்கிறது. ரஜினியின் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி, ஹூமா குரோஷி ஆகியோரம் நடிப்பால் மக்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள். சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் தங்களது நடிப்பால் மக்கள் மனதில் நின்றாலும், ரஜினியின் மகன்களின் ஒருவராக லெனின் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ரொம்பவே கவனிக்க வைக்கிறார்.
முரளி.ஜி யின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. டைடில் கார்டு தொடங்கும்போதே தனது பீஜியம் மூலம் நமது கவனத்தை ஈர்த்துவிடும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது.
மும்பை தாராவி போல செட் அமைக்கப்பட்டிருந்தாலும், அதை செட் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு பிரம்மாண்டத்தோடு ஒரிஜினலாக இருக்கிறது. கலை இயக்குநருக்கு விருது நிச்சயம்.
திரைக்கதை, காட்சிகள் வடிவமைப்பு, நடிகர் நடிகைகளின் நடிப்பு என்று அனைத்து ஏரியாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குநர் ரஞ்சித் கலக்கியிருக்கிறார். அதிலும் ரஜினிகாந்த், போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்தே அரசை சில இடங்களில் விமர்சித்திருப்பவர், ராவணனை ராட்சனாக பார்த்த ரஜினிகாந்தையே இதில் ராவணனாக நடிக்க வைத்து தனது இயக்குநர் ஆளுமையை நிரூபித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ரஜினிக்கே தெரியாமல் தாராவி பகுதியில் பில்டர் ஒருவர் பூமி பூஜை போட, ஒரு இளைஞர் சொல்லிய பிறகு ரஜினிக்கு அந்த விஷயம் தெரிய வருகிறது. தாராவியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஜினிக்கு தெரியாமல் பூமி பூஜை நடக்கும் காட்சி லாஜிக் மீறலாக இருக்கிறது.
”கியாரே செட்டிங்கா...வேங்கை மவன் ஒத்தைல நிக்கே..” என்ற வசனம் டிரைலர் மூலம் மக்களிடம் ரீச் ஆனாலும், டிரைலரில் வராத ஒரு அதிரடி காட்சி படத்தில் இருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவு படைத்த நானா படேகர், தாராவி பகுதிக்கு வந்து ரஜினியை மிரட்டி விட்டு போகும் போது, ரஜினிகாந்த் ‘நான் உன்ன போகவே சொல்லலயே...” என்று சொன்ன பிறகு, அங்கு நடக்கும் சம்பவங்களும், அதை பார்த்து அதிர்ந்து போகும் நானா படேகர், திரும்பி வந்து ரஜினியிடம் பர்மிஷன் கேட்கும் காட்சியில், திரையரங்கே ஆட்டம் காணும் அளவுக்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
ரஜினிகாந்த் - நானா படேகர் இடம்பெறும் காட்சிகள் எல்லாமே அனல் பறக்கும் காட்சிகளாக இருப்பதோடு, மக்களின் உரிமையை பற்றி பேசும் காட்சிகளாகவும் இருக்கிறது.
”ரஜினிகாந்த கம் பேக்” என்று சொல்லும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் ஒட்டு மொத்த தமிழகர்களுக்கான ஒரு படமாகவும் இந்த ‘காலா’ வை படைத்திருக்கிறார்.
மொத்தத்தில், கருப்பு நிறத்தை உயர்த்தி பிடித்திருக்கும் இந்த ‘காலா’ கலர்புல் இல்லை என்றாலும் பவர் புல்லாக இருக்கிறது.
ரேட்டிங் 4/5