Casting : Gajini Murugan, Vishnu Priya, Mayilsami, Singam Puli, RNR Manoharan
Directed By : Murapaselan
Music By : Devguru, Pa.Chandrakanth
Produced By : S.Senthilkumar
அறிமுக நடிகர்கள் நடித்திருக்கும் ‘என்னதவம் செய்தேனோ’ மகள், தந்தை பாசத்தைப் பற்றி பேசுவதோடு, கெளரவ கொலை பற்றியும் பேசுகிறது.
ஊர் பெரிய மனிதரான ஆர்.என்.ஆர்.மனோகரன், தனது மகள் விஷ்ணு பிரியா மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். என்னதான் பெரிய வேலையாக இருந்தாலும், தனது மகள் அழைத்தால் அத்தனையையும் விட்டுவிட்டு ஓடிவரும் அளவுக்கு அவர் மீது பாசத்தை கொட்டுகிறார். தந்தையின் பாசத்தினால் குழந்தையாக இருப்பதோடு, தந்தையின் அதே பிடிவாதத்துடனும் வளர்கிறார் ஹீரோயின் விஷ்ணு பிரியா.
இதற்கிடையே, ஆர்.என்.ஆர்.மனோகரின் எதிரிகள் சிலர் அவரது மகள் விஷ்ணு பிரியாவை கடத்தி கற்பழிக்க முயற்சிக்க, அவர்களிடம் இருந்து ஹீரோ கஜினி முருகன் காப்பாற்றுகிறார். அதன் மூலம் கஜினி முருகன் மீது விஷ்ணு பிரியா காதல் கொள்ள, கஜினி முருகனோ, விலகி விலகிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் விஷ்ணு பிரியாவின் காதலை ஏற்பதோடு, அவரை அழைத்துக்கொண்டு ஊரை விட்டே ஓடு விடுகிறார்.
இந்த விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆர்.என்.ஆர்.மனோகரன், வேறு ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரை தனது மகள் என்று கூறி ஊர் மக்களை நம்ப வைத்துவிடுவதோடு, ஓடிப்போன தனது மகளையும், அவரது காதலரையும் கண்டுபிடித்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பயந்து ஓடும் காதலர்கள், திருமணம் செய்துக்கொண்டு ஆந்திராவில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்.என்.ஆர்.மனோகரன், அவர்களை கொலை செய்ய முயற்சிக்க, கை குழந்தையோடு கணவன், மனைவி தப்பித்து ஒட, அவர்களை துரத்தி செல்லும்போது ஆர்.என்.ஆர்.மனோகரன் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். தன்னை கொலை செய்ய வந்தாலும், அதை மனதில் கொள்ளாமல் தனது தந்தையை காப்பாற்ற போராடும் விஷ்ணு பிரியா தனது தாலியை விற்று அவரை காப்பாற்றுகிறார். இந்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் ஆர்.என்.ஆர்.மனோகரன் மனம் மாறி, தனது மகளை ஏற்றுக்கொள்ள முடிவு எடுத்து, அவரை சந்திக்க செல்லும் போது, நடக்கும் ஒரு விஷயத்தால் ஒட்டு மொத்த கதையே மாறிவிடுகிறது, அது என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.
ஹீரோ கஜினி முருகன், ஹீரோயின் விஷ்ணு பிரியா புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது பணியை முழுமையாக செய்துள்ளார்கள். படத்தில் இவர்கள் நடிப்பதைக் காட்டிலும் ஓடுவதை தான் அதிகம் செய்துள்ளார்கள். வெகுளித்தனமான நடிப்போடு இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் கஜினி முருகன் தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார். ஹீரோயின் விஷ்ணு பிரியா, பணக்கார பெண்ணின் பிடிவாதத்தையும், திமிரையும் தனது நடிப்பால் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக பல இடங்களில் மிரட்டும் ஆர்.என்.ஆர்.மனோகரன், பாசம் மிகு தந்தையாகவும் பல இடங்களில் கவர்கிறார்.
முதல் பாதியில் ரசிகர்களை சிங்கம் புலி சிரிக்க வைப்பது போல, இரண்டாம் பாதியில் மயில்சாமி சிரிக்க வைக்கிறார்.
தேவ்குருவின் இசை, பா.சந்திரகாந்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து கெளரவ கொலை பற்றி பேசியிருக்கும் இயக்குநர் முரபாசெலன், தான் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லியிருப்பதோடு, ஹீரோ, ஹீரோயினை ஓட வைப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார்.
அதே சமயம், அட்வைஸ் செய்வது போல அல்லாமல், காதல், காமெடி, பவர் ஸ்டாரின் குத்தாட்டம் என்று அனைத்து அம்சங்களையும் நிறைவாக வைத்து ஒரு முழுபொழுது போக்கு படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 2/5