Casting : Arya, Sayyeshaa, Sathish, Karunakaran, Sampath, Naren, Naan Kadavul Rajendran
Directed By : Santhosh P.Jayakumar
Music By : Balamurali Balu
Produced By : Studio Green - KE Gnanavelraja
’ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று தனது முதல் இரண்டுப் படங்களையும் அடல்ட் காமெடிப் படங்களாக இயக்கி கோலிவுட்டையே சற்று அதிரச் செய்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் மூன்றாவது படமாக மட்டும் இன்றி, யு சான்றிதழ் படமாகவும் வெளியாகியுள்ள இந்த ‘கஜினிகாந்த்’ எப்படி என்று பார்ப்போம்.
தீவிர ரஜினிகாந்த் ரசிகரான நரேன், தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார். சிறு வயது முதலே ஞாபகமரதி குறைபாடோடு வளரும் ஆர்யாவின் வளர்ச்சியை போல அவரது ஞாபகமரதி குறைபாடும் வளர்ந்து விடுகிறது. ஒரு விஷயத்தை செய்யும் போது, இடையில் வேறு எதாவது நடந்துவிட்டால், முந்தைய விஷயத்தை சுத்தமாக மறந்துவிடும் அளவுக்கு ஞாபகமரதி குணமுடைய ஆர்யாவுக்கு, இதன் காரணமாக யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை. அப்படி தான் ஹீரோயின் சாயீஷாவின் அப்பாவான சம்பத்தும், ஆர்யாவின் குறைபாட்டை தெரிந்து அவரை நிராகரித்து விடுகிறார்.
இதற்கிடையே, சாயீஷாவை பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் பத்திக்கொள்ள, பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு சாயீஷாவை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறார். சம்பத்தின் மகள் தான் சாயீஷா என்பது தெரியாமல் அவரை ஆர்யா காதலிக்க, தான் நிராகரித்தவரை தான் தனது மகள் காதலிக்கிறாள் என்பது தெரியாமல் சம்பத்தும் தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அப்போது தான் ஆர்யாவுக்கு சாயீஷாவின் அப்பா தான் சம்பத் என்பது தெரிகிறது. தனது ஞாபகமரதி குறைபாடு குறித்து அறிந்த சம்பத்திடம் இருந்து தனது காதலை காப்பாற்ற நினைக்கும் ஆர்யா, அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளினால் பல குழப்பங்கள் ஏற்படுவதோடு, அவரது ஞாபகமரதி பிரச்சினை வேறு அவ்வபோது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தையும் அவர் சமாளித்து தனது காதலியை கரம் பிடித்தாரா இல்லையா என்பது தான் ‘கஜினிகாந்த்’ படத்தின் மீதிக்கதை.
எளிமையான கதைக்கு, ரொம்ப எளிமையான திரைக்கதை அமைத்திருந்தாலும், ஜாலியான ஒரு படமாகவே இந்த ‘கஜினிகாந்’ தை இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் நகர்த்தி செல்கிறார்.
ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காதல் பிளஸ் காமெடி என்று இரண்டிலுமே கலக்கியிருப்பவர், சந்தானத்துடன் சேர்ந்து மட்டும் அல்ல, தனியாகவும் காமெடி படத்தை கையாள தெரியும் என்று நிரூபித்திருக்கிறார். தனது ஞாபகமரதியால் தனது வாழ்க்கையில் பல விஷயங்களை இழக்க நேரிடும் போது கூட அதை பெருஷாக எடுத்துக்கொள்ளாமல், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஆர்யாவின் கதாபாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
’வனமகன்’ படத்திற்கு பிறகு சாயீஷாவை சரியாக பயன்படுத்தியிருக்கும் படம் என்றால் இது தான். பாலில் செய்த சிலை போல இருக்கும் சாயீஷா, அழகோடு நடிப்பாலும் பல இடங்களில் கவர்கிறார். ஆர்யா சொல்லும் அத்தனை பொய்களையும் நம்பும் அவரது குழந்தைத்தனமான நடிப்புக்கும், துள்ளலான நடனத்திற்கு ரசிகர்கள் அடிமையாகிவிடுகிறார்கள்.
தொடர்ந்து பல படங்களில் மொக்கை போட்டு வந்த சதீஷ், இந்த படத்தில் சுதாரித்துக் கொண்டிருக்கிறார். அவரது டைமிங் காமெடியும், ரைமிங் வசனங்களும் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஆர்யாவுக்கு உதவி செய்யவதற்காக சம்பத்திடம் ஆள்மாறாட்டம் செய்யும் சதீஷின் எப்பிசோட்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடி என்றால், ஆர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் உமா பத்மநாபன் ஆகியோரது எப்பிசோட்கள் சிரிப்பு ஆட்டோபாமாக திரையரங்கை அதிர வைக்கிறது.
கருணாகரன் படத்தில் இருந்தாலும் அவருக்கான வேலையும், அதில் அவர் கொடுக்கும் பர்பாமன்ஸும் குறைவு தான். நான் கடவுள் ராஜேந்திரனின் எண்ட்ரி சற்று சிரிப்பொலியை ஒலிக்க செய்தாலும், அதற்கு பிறகு அவர் வரும் காட்சிகள் அனைத்தும் நம்மை கடுப்பேற்றும் காட்சிகளாகவே இருக்கிறது. சாயீஷாவின் அப்பாவாக நடித்திருக்கும் சம்பத், தெளிவான நடிப்பால் கவர்ந்துவிடுகிறார்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் எந்த பாடல்களும் கேட்கும்படி இல்லை. அதே சமயம் பல்லுவின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.
எந்த சப்ஜக்ட்டாக இருந்தாலும் அதில் ரொம்ப டீப்பாக இறங்கிவிடும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், இந்த படத்தை ஆடியன்ஸ் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்பதோடு, தியேட்டரை விட்டு வெளியே போகிறவர்கள் ஜாலியான மனநிலையில் போக வேண்டும் என்று ரொம்பவே டீப்பாக இறங்கி வேலை பார்த்திருப்பவர், காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வேறு எதற்கும் கொடுக்கவில்லை.
திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு ஆகியவை ரொம்ப பழசாக இருப்பதோடு, சில இடங்களில் டிவி சீரியல் பார்க்கும் உணர்வை நமக்கு கொடுத்தாலும், அவற்றை உடனே நாம் மறந்துபோகும் அளவுக்கு நடிகர்களின் பர்பாமன்ஸ் நம்மை டைவர்ட் செய்துவிடுகிறது. அதிலும் படத்தின் இரண்டாம் பாதியில், ஆள்மாறாட்டம் செய்யும் ஆர்யாவும், அவரது குடும்பத்தாரும் மாட்டிக்கொண்ட பிறகு சமாளிக்கும் காட்சியில் சிரிக்க தெரியாதவர்கள் கூட சிறித்துவிடுவார்கள்.
மொத்தத்தில், இந்த ‘கஜினிகாந்த்’ நம்மை நாமே மறந்து சிரிக்கும்படி செய்துவிடுகிறார்.
ரேட்டிங் 3/5