Latest News :

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ விமர்சனம்

ba610969f5414f6a2d03c37866e44033.jpg

Casting : Dhruva, Aishwarya Dutta, Saranya Ponvannan

Directed By : R. Rahesh

Music By : Achu Rajamani

Produced By : V. Mathiyalagan, R. Ramya

 

சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அவ்வபோது சமூக அக்கறையோடும் சில படங்கள் வருவதுண்டு. அந்த வகையிலான ஒரு படம் தான் இந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’.

 

சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் சயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ தங்கம் மட்டும் தான் திருடப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் பல பெண்களின் உயிர் பறிபோவதோடு, அதனால் பலர் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். அது எப்படி என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருப்பதோடு, செண்டிமெண்ட், காதல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகேஷ்.

 

பொதுவாக இதுபோன்ற படங்களில் வில்லன்கள் தான் சயின் திருடர்களாக இருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோவே சயின் திருடர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்க, ஹீரோவா! ஏன்? என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடும் இயக்குநர், பிறகு அதற்கான காரணத்தை சஸ்பென்ஸோடு சொல்வது தான் இந்த படத்தின் கதை.

 

ஹீரோ துருவா நல்ல வாட்டசாட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். சயின் பறிக்கும் கூட்டத்தில் ஒருவராக அவர் வலம் வருவது, வெகுளித்தனமான அம்மாவுக்கு பாசமான பிள்ளையாக இருப்பது என்று தனது கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார்.

 

ஹீரோயின் ஐஸ்வர்யா தத்தா ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமானலும், ஹீரோவின் பிளாஷ்பேக்கை ஓபன் செய்யும் கருவியாகவே அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். பிறகு திடீரென்று வேறு ஒரு பரிணாமத்தில் க்ளைமாக்ஸில் வந்து நிற்பது அவ்வளவாக எடுபடவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கும் பெண்ணாக வருபவர் குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார். 

 

பாசமான அம்மாவாக பார்த்து வந்த சரண்யா பொண்வன்னனுக்கு அதே ரோலி தான் என்றாலும், அதில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், ராதாரவி ஆகியோரும் எப்போதும் போல தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

Marainthirunthu Paarkum Marmam Enna

 

அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் பைக் சேசிங் காட்சிகள் மிரட்டல், படத்தில் ஏகப்பட்ட பைக் சேசிங் காட்சிகள் வந்தாலும், ஒவ்வொன்றையும் ஒரு விதத்தில் படமாக்கியிருக்கிறார்.

 

சயின் கொள்ளை சம்பவத்தை பற்றி படம் எடுத்தாலும், அதை பெண்கள் சார்பில் இருந்து இயக்குநர் ராகேஷ் திரைக்கதை அமைத்திருக்கிறார். ”பெண்களுக்கு பிடித்தமான விஷயமே தங்கம் தான், ஆனால் அந்த தங்கத்தின் மீதே அவர்களுக்கு பயம் ஏற்பட வைத்துவிட்டார்களே” என்று பெண்களின் நிலையில் இருந்து இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷ், சயின் பறிப்பு குற்றத்தை பொருத்தவரை வழிபறி மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யும் காவல் துறை, அதை கொலை முயற்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் தைரியமாக சொல்லியிருக்கிறார்.

 

இயக்குநர் ராகேஷ் சொல்வது போல, சயின் பறிப்பு திருடர்களுக்கு காவல்துறை தண்டனை கொடுத்தால், நிச்சயம் இந்த குற்றங்கள் நடைபெறாது என்பது உறுதி.

 

படத்தில் சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும், மக்களை குறிப்பாக பெண்களை உஷார்ப்படுத்தும் படமாகவும் இப்படம் இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான்.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery