Casting : Sathyaraj, Varalakshmi, Kishore, Vivek Rajagopal
Directed By : Sarjun K.M
Music By : Sunddaramurthy KS
Produced By : Time Line Cinemas
சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
கொலை குற்றத்திற்காக சிறு வயதிலேயே சிறை செல்லும் கிஷோர் 15 வருடங்கள் கழித்து வெளியே வந்ததும், தனது அக்கா மகன் விவேக் ராஜகோபாலை சந்திக்கிறார். அவர் பைக் திருடி பிழைப்பு நடத்த, இருவரும் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். அதன்படி தனது காதலியும், தொழிலதிபரின் மகளுமான வரலட்சுமியை கடத்தலாம் என்று விவேக் ராஜகோபல் கிஷோருக்கு யோசனை சொல்கிறார். ஆனால், அவர் தனது காதலி என்பதை மறைத்துவிடுகிறார்.
விவேக்கின் யோசனைப்படி அவருடன் சேர்ந்து வரலட்சுமியை கடத்தும் கிஷோர், அவரது தந்தையிடம் ரூ.8 கோடி கேட்கிறார். போலீசிடம் போகாத வரலட்சுமியின் தந்தை, பணி ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜிடம் உதவி கேட்கிறார். உடல் நிலை பாதிக்கப்பட்ட தனது மகளை விட்டு வர முடியாத நிலையில் இருக்கும் சத்யராஜ், தனது வீட்டில் இருந்தபடியே குட்டி போலீஸ் டீமை தன்னுடன் வைத்துக் கொண்டு விசாரணையை தொடங்குகிறார். கடத்தல் காரர்கள் யார் என்பதை அவர் கண்டுபிடிக்கும் நேரத்தில், போலீஸ் தலையீடு இருப்பதை அறியும் கிஷோர், வரலட்சுமியின் தந்தையை எச்சரிக்க, அவரும் சத்யராஜியிடம் விசாரணையை கைவிடும்படி கூறிவிட்டு பணத்தை கொடுத்து மகளை மீட்க கிளம்புகிறார்.
அதே சமயம், விவேக் ராஜகோபால் வரலட்சுமியிடம் கடத்தல் குறித்த உண்மையை சொல்வதோடு, பணம் வந்ததும் கிஷோரை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில், சத்யராஜ் மகளின் உடல் நிலை மோசமாக, அவரை காப்பாற்ற வேண்டுமானால் கிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று மருத்துவர் கூறிவிடுகிறார். ஏற்கனவே மனைவியின் மருத்துவ செலவுக்காக அனைத்து பணத்தையும் செலவழித்த சத்யராஜ், மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், வரலட்சுமியை மீட்பதற்காக அவரது தந்தை கடத்தல்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து அபேஷ் செய்ய திட்டம் போடுகிறார்.
ஒரு பக்கம் வரலட்சுமியும், விவேக்கும் கிஷோரை ஏமாற்றிவிட்டு பணத்தை அபேஷ் பண்ண நினைக்க, மறுபுறம் கிஷோர் பணத்தோடு வெளிநாட்டுக்கு செல்ல திட்டம் போடுகிறார். இவர்கள் அனைவரிடம் இருந்து பணத்தை கைப்பற்ற திட்டம் போட்டு சத்யராஜ் களத்தில் இறங்க, இறுதியில் அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது தான் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் க்ளைமாக்ஸ்.
உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் பணம், எப்படி வேண்டுமானாலும் நம்மை விட்டு பறிபோகும், என்ற கருவை வைத்துக் கொண்டு இயக்குநர் சர்ஜுன் கே.எம் சஸ்பென்ஸ் ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார்.
சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், விவேக் ராஜகோபல் என்ற இந்த நான்கு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி பயணிக்கும் திரைக்கதை, ஒவ்வொரு சமயத்திலும் ஒருவர் தோளில் ஏறிக்கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது.
கிஷோர் - விவேக் ராஜகோபால் ஆகியோரது உறவு மற்றும் அவர்களுக்கு இடையிலான ஆடுபுலி ஆட்டம் என்று பயணிக்கும் திரைக்கதை, ஒரு கட்டத்தில் விவேக் - வரலட்சுமி ஜோடியின் காதல் மற்றும் அவர்கள் சேர்ந்து கிஷோரை ஏமாற்றுவது என்று பயணிக்க, இறுதியாக சத்யராஜ் மீது பயணிக்கும் போது, பணம் யாருக்கு கிடைக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு, யாரோ ஒருவர் உயிரிழக்க போகிறார்கள், அது யார்? என்ற பரபரப்பும் நம்மை தொற்றிக்கொள்கிறது.
கிஷோர், விவேக் ராஜகோபால், வரலட்சுமி, சத்யராஜ் என்று அனைவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். காமெடி ஏரியாவில் யோகி பாபு வலம் வந்தாலும் சிரிப்பு என்னவோ பெரிதாக வரவில்லை. காரணம் யோகி பாபுவுக்கான போஷன் ரொம்பவே குறைவு.
சாதாரண ஆள் கடத்தல் கதை தான் என்றாலும், அதை சொன்ன விதத்தில், ஆரம்பம் முதல் முடியும் வரை திரைக்கதையை பரபரப்புடனும், எதிர்ப்பார்ப்புடனும் நகர்த்தி செல்லும் இயக்குநர் சர்ஜுன் க்ளைமாக்ஸை மட்டும் ஏதோ திணித்தது போல வைத்துவிடுவது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.
அதேபோல் சத்யராஜ் வீட்டில் இருந்தபடியே போலீஸ் போர்ஸ் ஒன்று விசாரணை நடத்துவது, சுங்கச்சாவடி கேமராவை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய விஷயங்களை சாதாரணமாக கையாண்டு அவ்வபோது ரசிகர்கள் காதில் இயக்குநர் சர்ஜுன் பூவும் சுற்றுகிறார்.
இருந்தாலும், தான் சொல்ல வந்த கதையை நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் சொல்லியதோடு, விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்.
சுந்தரமூர்த்தி கே.எஸ்-ன் இசையும், சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் திரைக்கதையோடு பயணித்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை எந்தவித பயமும் இன்றி பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5