Casting : Prabhu Deva, Ditya Bhande, Aishwarya Rajesh
Directed By : Vijay
Music By : Sam C. S.
Produced By : Prateek Chakravorty, Shruti Nallappa, R. Ravindran
விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் நடனத் திரைப்படமாக மட்டும் இன்றி, சிறுவர்களுக்கான திரைப்படமாகவும் வெளியாகியிருக்கும் ‘லக்ஷ்மி’ எப்படி என்பதை பார்ப்போம்.
காலை படுக்கையில் இருந்து எழுந்திருப்பது முதல் இரவு படுக்க செல்லும் வரை கிடைக்கும் கேப்பில் எல்லாம் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் தித்யாவுக்கு நடனத்தின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தாலும், அவரது அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனம் என்றால் பிடிக்காது. இருந்தாலும் தனது அம்மாவுக்கு தெரியாமல் நடனத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் தித்யாவுக்கு இந்திய அளவில் நடைபெறும் ‘பிரைட் ஆப் இந்தியா’ நடனப் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ஆனால், அப்போட்டியில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட நடன பள்ளி மாணவராக இருக்க வேண்டும் என்பதால், காபி ஷாப் வைத்திருக்கும் பிரபு தேவாவை தனது அப்பாவாக நடிக்க வைத்து நடனப் பள்ளியில் சேறும் தித்யா, தனது அம்மாவுக்கு தெரியாமல் தினமும் நடனப் பயிற்சியும் மேற்கொள்கிறார்.
வீடு, பாத்ரூம், சாலை, பள்ளி என்று அனைத்து இடங்களிலும் நடனம் ஆடும் தித்யா, பிரம்மாண்டமான மேடையில், லைட் வெளிச்சத்தில் நடனம் ஆட முடியாமல் திணற, அதனால் அவரது அணி, நடனப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போகிறது. வருத்தத்தில் இருக்கும் தித்யாவை மீண்டும் போட்டியில் பங்கேற்க செய்வதற்காக நடனப் போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் பிரபு தேவை பார்த்து ஒட்டு மொத்த பேரும் அதிர்ச்சியாவதோடு, அவருக்கு மரியாதையும் கொடுக்கிறார்கள். அதுவே தான், பிரபு தேவா நடன ஜாம்பவான், இதே பிரைட் ஆப் இந்தியா போட்டியை வெல்ல வேண்டும் என்று களத்தில் இறங்கிய அவர் விபத்து காரணமாக இறுதிப் போட்டியில் பங்கேற்காமல் போக, அதில் இருந்து நடனத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதை இயக்குநர் நமக்கு தெரியப்படுத்துகிறார்.
தித்யாவை மட்டும் இன்றி, அவரது பள்ளி அணியையும் நடனப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அந்த அணிக்கு பிரபு தேவா பயிற்சியாளராக இருக்க வேண்டும், என்று நிபந்தனை விதிக்கப்பட, தித்யா மற்றும் அவரது அணி போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மீண்டும் நடனம் ஆட தொடங்கும் பிரபு தேவா, சிறுவர்களுக்கு பயிற்சியாளராக களம் இறங்க, அந்த சிறுவர்கள் அணி போட்டியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் ‘லக்ஷ்மி’ படத்தின் கதை.
ரப்பர் மனிதர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பிரபு தேவா, இந்த படத்தில் தான் மட்டும் நடனம் ஆடாமல், பலரை நடனம் ஆட வைத்திருக்கிறார்.
நடனம் தான் கதை என்பதால், திரைக்கதையில் இடம்பெறும் நடனக் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் வரும் சிறுவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் நடனம் ஆடி அசத்துகிறார்கள். அதிலும், காமெடிக்காக தான் இந்த சிறுவன் போல என்று அந்த குண்டு சிறுவனை நாம் நினைக்கும் போது, திடீரென்று அந்த சிறுவன் ஆடும் அதிரடி நடனத்தால் திரையரங்கமே சற்று அதிரச்செய்கிறது. அவர் மட்டுமா, பிரபு தேவாவை போட்டிக்கு அழைக்கும் யூசுப் என்ற வேடத்தில் நடித்திருக்கும் அந்த நபரின் முரட்டுத்தனமான நடனம் கூட பிரமிக்க வைக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான தித்யா, குட்டி பிரபு தேவா என்று சொல்லும் அளவுக்கு பிரபு தேவாவுடன் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார். தனது நடிப்பில் கூட நடன அசைவுகளை வெளிப்படுத்துபவர், பல இடங்களில் மெளனமாக இருந்தே நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.
பிரபு தேவா நடனத்தில் மட்டும் அல்லாமல் நடிப்பாலும் நம்மை கவருகிறார். அவரது ரெகுலர் நடிப்பில் இருந்து சற்று விலகி வேறு ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும், தித்யாவின் அம்மாவாக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
படம் முழுவதும் நடனம் வருவதால், ஒவ்வொரு நடனத்திலும் எதாவது ஒரு வித்தியாசத்தை கையாண்டு நடனம் மீது ஆர்வம் இல்லாதவர்களை கூட படம் ரசிக்க வைக்கிறது.
அதிரடி பாடலாகட்டும், மொலொடி பாடலாகட்டும் அனைத்திற்கும் நடனம் ஆடும் விதத்தில் மெட்டமைத்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். நடனத்திற்கான பீஜியம், பாடல் என்று தனது இசையால் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
சீறிப்பாய்ந்து நடனம் ஆடும் சிறுவர்களின் ஒவ்வொரு அசைவையும் பிரம்மாண்டமான முறையில் காட்சிப் படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும், அதனை கச்சிதமாக எடிட்டிங் செய்த ஆண்டனியும் கூட இந்த ‘லக்ஷ்மி’ யை நங்குரமாக தாங்கியிருக்கிறார்கள்.
ஆக்ஷன் படங்களையே கவித்துவமாக சொல்லும் வல்லமை படைத்த இயக்குநர் விஜய், அதிரடியான இந்த நடனப் படத்தையும் ரொம்ப மென்மையாகவே கையாண்டுள்ளார்.
பள்ளி வாகனம், அல்லது ஆட்டோக்களில் செல்லும் மாணவர்களுக்கு இடையே தித்யா பேருந்தில் பள்ளிக்கு செல்வது, படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது நடனம் ஆடுவது சரி, ஆனால் ஷூ போட்டுக்கொண்டு தான் நடனம் ஆட வேண்டும் என்பதற்காக ஷூ காலுடன் தூங்குவது. பிரபு தேவாவிடம் முன் அறிமுகம் இல்லாமல் அவரை அப்பாவாக நடிக்க சொல்வது, என்று படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படத்தை கையாண்ட விதமும், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும் அவற்றை மறைத்து விடுகிறது.
போராட்ட குணம் கொண்டவர்கள், வாழ்க்கையில் எந்தவித தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து நின்று வெற்றி பெறுவார்கள், அத்தகைய குணம் வர வேண்டும் என்றால் இதுபோன்ற போட்டிகளில் சிறுவர்கள் பங்கேற்பது அவசியம் என்பதை இந்த நடனத் திருவிழா மூலம் இயக்குநர் விஜய் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், பிரபு தேவாவின் நடன விரும்பிகளுக்கும், சிறுவர்களுக்கும் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கிறது ‘லக்ஷ்மி’ யின் இந்த நடனத் திருவிழா
ரேட்டிங் 4/5