Latest News :

எந்த நேரத்திலும்

croppedImg_1181722205.jpeg

Casting : இராமகிருஷ்ணன், லீமா பாபு, சாண்ட்ரா எமி, யஷ்மித், சிங்கம் புலி

Directed By : ஆர்.முத்துக்குமார்

Music By : சபேஷ்-முரளி, பி.சதீஷ்

Produced By : அஞ்சலி எண்டர்டெயின்மெண்ட் அரிமா என்.இராமலிங்கம்

லீமா பாபுவும், இராமகிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் காதலிக்க, லீமா குறித்து தனது சகோதரி சாண்ட்ரா எமியிடம் கூறும் ராமகிருஷ்ணன், அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வருவதாக கூறுகிறார். அதன்படி ஒரு நாள் லீமாவை சாண்ட்ரா எமி சந்திக்க இராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்ய, லீமாவை பார்க்கும் எமி அதிர்ச்சியாவதுடன் அங்கிருந்து உடனடியாக சென்றுவிடுகிறார்.

 

தனது சகோதரிக்காக காத்திருந்து நொந்து போகும் இராமகிருஷ்ணன், லீமா பாபுவை தனது வீட்டுக்கு அழைத்து வர, சாண்ட்ரா ஷாக்கனது போல அவரது கணவர், அப்பா ஆகியோரும் லீமாவை பார்த்து ஷாக்காகிறார்கள். அதுமட்டும் இன்றி அந்த பெண்ணை மறந்துவிடும்படியும் இராமகிருஷ்ணனிடம் வற்புறுத்துகிறார்கள். லீமாவை பார்த்து அதிர்ச்சியடைந்தவாறே அந்த இடத்தில் இருந்து புறப்படும் சாண்ட்ரா எமியின் கணவரும், அப்பாவும் கார் விபத்தில் பலியாகிவிட, ஊட்டில் இருந்து கோத்தகிரியில் உள்ள தங்களது பழைய வீட்டுக்கு இராமகிருஷ்ணனும், சாண்ட்ரா எமியும் குடிபெயர, அங்கே லீமா பாபு உருவத்தில் அமானுஷய சக்தி ஒன்று சாண்ட்ரா எமியை பயமுறுத்துவதுடன், அவரது குழந்தை உடம்பில் ஏறிக்கொண்டு அவரை கொல்ல முயற்சிக்கிறது. அதே சமயம், லீமா பாபுவை பார்க்கும் சாமியார் ஒருவர் “நீ இறந்து பல வருடங்கள்’ ஆகிவிட்டது என்று கூறுவதோடு, இராமகிருஷ்ணனிடம், அவரது அக்காவின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். அக்காவை காப்பாற்ற அமானுஷ்யத்துடன் மோதும் இராமகிருஷ்ணன் வெற்றிபெற்றாரா?, லீமா பாபுவுக்கும் அந்த அமானுஷ்ய சக்திக்கும் என்ன சம்மந்தம்?, சாண்ட்ரா எமியை அந்த மானுஷ்ய சக்தி ஏன் கொலை செய்ய பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்குகான பதில் தான் ‘எந்த நேரத்திலும்’ படத்தின் மீதிக்கதை.

 

தலைப்புக்கு ஏற்றவாறு படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தும் இயக்குநர், அது என்னவாக இருக்கும், என்ற ஆவலையும் உண்டாக்கி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்.

 

இராமகிருஷ்ணன், லீமா பாபு இருவரும் காதல் ஏரியாவை சிறப்பாக கவனிப்பது போல, திகில் ஏரியாவை சாண்ட்ரா எமி சிறப்பாக கையாண்டுள்ளார். அதிலும், பிளாஷ் பேக்கில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம், அவரது நடிப்பு திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. அவரும் அதை சிறப்பாக கையாண்டுள்ளார்.

 

சபேஷ் முரளியின் பின்னணி இசையும், பி.சதீஷின் இசையில் பாடல்களும் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பது போல, சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

 

திகில் படங்களை எப்படி சொன்னால் ரசிகர்களை சீட் நுணியில் அமர வைக்கலாம் என்ற உற்த்தியை ரொம்ப நன்றாகவே புரிந்து வைத்துள்ள இயக்குநர் ஆர்.முத்துக்குமார் எந்தவித ஆடம்பரமும் இன்றி ரசிகர்களை பல இடங்களில் மிரட்டியிருப்பதோடு, எளிமையான கதைக்கு வளுவான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பமே ரசிகர்களை கதைக்குள் இழுத்துவிடும்படி காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், இரண்டாம் பாதியில் பழைய பாணியில் காட்சிகளை வைத்திருப்பது படத்தில் சிறு தொய்வாக அமைந்திருந்தாலும், தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு, ஒரு திகில் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார்.

 

மொத்தத்தில் ‘எந்த நேரத்திலும்’ ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பேய் படமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery