Casting : Kathir, Anandi, Marimuthu, Yogi Babu
Directed By : Mari Selvaraj
Music By : Santhosh Narayanan
Produced By : Neelam Productions
இயக்குநர் பா.ரஞ்சித் படம் என்றாலே, தலித் பிரச்சார படம் என்ற இமேஜ் உருவாகியிருக்கும் நிலையில், அவரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் எப்படி என்பதை பார்ப்போம்.
தலித் மக்களுக்கு ஆதரவாக பேசும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், அவர்களுக்காக நேரடியாக குரல் கொடுத்த இயக்குநர் என்றால், நமக்கு சட்டென்று நினைவில் வருவது இயக்குநர் பா.ரஞ்சித் தான். அவர் தயாரித்திருக்கும் இந்த படத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டிருந்தாலும், அதை எதிர் தரப்பினரும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ், யார் மனதையும் புன்படுத்தாத வகையில் காட்சிகளை கையாண்டிருப்பது தான், பிற படங்களுக்கும், இந்த படத்திற்கும் உள்ள வித்தியாசம்.
பரியேறும் பெருமாள் என்ற சட்டக்கல்லூரி மாணவரின் வாழ்க்கை தான் இந்த படத்தின் கதை. சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து, தமிழிலேயே 12ம் வகுப்பு படித்துவிட்டு, சட்டக் கல்லூரியில் படிக்கும் பரியேறும் பெருமாள் சந்திக்கும் அவமானங்கள், காதல் அந்த காதலால் ஏற்படும் பிரச்சினைகள் என்று நகரும் படம் ஒரு கட்டத்தில் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை வரும் போது, அதில் இருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை.
ஹீரோயின் ஆனந்திக்கு கதிர் மீது காதல் ஏற்பட்டாலும் அதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக கதிருக்கு தெரியப்படுத்த நினைக்கிறார். ஆனால், ஆனந்தியை நல்ல தோழியாக மட்டுமே பார்க்கும் கதிர், அவரது பேச்சை கேட்டு, அவரது அக்கா திருமணத்திற்கு செல்ல, அங்கே கதிருக்கு நடக்கும் கொடுமையின் வலி படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்படுகிறது. அந்தக் காட்சியில் இருந்து ஆனந்தி குடும்பத்தின் மூலம் அவ்வபோது காயப்படும் கதிர், தொடர்ந்து கல்லூரியில் பல அவமானங்களை சந்திக்க, ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு வரும் அவரது தந்தையும் அவமானப்படுத்தப் படுகிறார். இப்படி ஜாதி என்ற ஒன்றை காரணம் காட்ட்சி கல்லூரி ஆசிரியர்கள், சக மாணவர்கள் என்று பலரிடம் அவமானப்பட்டாலும், அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களுடன் சரி சமமாக நிற்க வேண்டும், என்பதையும் இயக்குநர் மாரி செல்வராஜ் ரொம்ப அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு ஆதரவாக பேசினாலும், எதிர் தரப்பினரின் மன நிலை எப்படி இருக்கும், அவர்களையும் மாற்றியது இந்த சமூகம் தான், சமூகம் மாறினால் நிச்சயம் அவர்களும் மாறுவார்கள், அவர்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள், என்பதையும் சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், இந்த படத்தை ஒட்டு மொத்த சமூகத்திற்கான ஒரு படமாகவே கொடுத்திருக்கிறார்.
“பரியேறும் பெருமாள் பி.ஏ,.பி.எல் மேல ஒரு கோடு” என்று தன்னை அப்பாவித்தனமாக கல்லூரியில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் கதிர், இந்த படத்தில் பரியேறும் பெருமாள் என்ற இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார். சில படங்களில் கதிர் நடித்திருந்தாலும், அப்படங்களின் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், புதிய நடிகராகவே இந்த படத்தில் வலம் வருகிறார். கல்லூரியில் அப்பாவித்தனமாக இருப்பவர், தனக்கு நேர்ந்த அவமானங்களால் வெகுண்டு எழுதுவது, ஆங்கிலம் தெரியாததால் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரிடம் போராடுவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
குழந்தைத்தனம் கொண்ட பெண்ணாக ஆனந்தி. தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்பதை உணராமால் தான் நினைத்ததை தைரியமாக பேசும் ஒரு பெண்ணாக அவர் கதிரை காதலித்துவிட்டு, அதை அவரிடம் சொல்லாமல், தவிக்கும் காட்சியில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்.
யோகி பாபு, தனது டைமிங் காமெடியால் தியேட்டரே அதிர வைக்கும் அளவுக்கு சிரிக்க வைத்தாலும், படத்தில் பெரும்பாலான பகுதிகளில் குணச்சித்திர நடிகராகவே வலம் வருகிறார். உயர் ஜாதி பெண்களை காதலிக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை கொலை செய்யும் வயதான மனிதர் வேடத்தில் நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ் வரும் காட்சிகளில் எல்லாம் நமக்கு பயம் ஏற்படுகிறது.
இயக்குநர் மாரிமுத்து, கதிரின் அப்பா வேடத்தில் நடித்திருக்கும் தங்கராஜ் என்று படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் மனதில் நிற்கும் விதத்தில் அவர்களது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் கதிரின் அப்பாவாக கல்லுரிக்கு வந்து நடிக்கும் சண்முகராஜன், ஒரு காட்சியில் வந்தாலும், ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையும், ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் நேட்டிவிட்டியை மீறிய சில விஷயங்கள் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், வரட்சியான அந்த கிராமத்தையும், அரசு கல்லூரி அதில் படிக்கும் மாணவர்கள் என்று அனைத்தையுமே எதார்த்தமாகவே காட்டியிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் கதைக்குள் ஒன்றிவிட ஸ்ரீதரின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
சர்ச்சையான விஷயத்தை சொன்னாலும், அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திரைக்கதையை கையாண்டிருக்கிறார். படம் தொடங்கியதுமே ஹீரோ வளர்க்கும் கருப்பி என்ற நாய்க்கு நடக்கும் கொடுமையால் ஒட்டு மொத்த திரையரங்கையே அதிர்ச்சியடைய செய்து ஒரு கனம் மெளனமாக்கிவிடுகிறார்.
கதிர் கல்லூரியில் சேருவது, அவருக்கு நண்பரான யோகி பாபுவுடன், சேர்ந்து செய்யும் காமெடி மூலம் நம்மை அவ்வபோது சிரிக்க வைப்பவர், இடைவேளையின் போது கதிர் எதிர்கொள்ளும் அவமானத்தால் மீண்டும் திரையரங்கில் பெரும் அமைதி நிலவ செய்பவர், அதில் இருந்து மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக சொல்வதோடு, தாழ்த்தப்பட்ட மக்கள் கேள்வி கேட்பதை கூட விரும்பாத மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சரிசமமாக நின்று கேள்வி கேட்க கல்வி என்பது மிக மிக முக்கியம் என்பதை காட்சிகள் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் சொல்லி இயக்குநர் மாரி செல்வராஜ் கைதட்டல் பெறுகிறார்.
கதிர் - ஆனந்தி இடையே ஏற்படும் காதலை அவர் கையாண்ட விதமும், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகரும் ஒட்டு மொத்த திரைக்கதை, கைதட்டல் பெரும் வசனங்கள், இவை அனைத்தும் எப்படி படத்திற்கு பலம் சேர்க்கிறதோ அதுபோல படத்தின் கிளைமாக்ஸும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
என்ன நடக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பை கிளைமாக்ஸ் ஏற்படுத்தும் போது, “இப்படி நடந்துவிடுமோ” என்ற நமது யூகத்தை உடைத்தெரிந்து அருமையான கிளைமாக்ஸோடு படத்தை முடித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
படத்தில் சில சர்ச்சையான விஷயங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், தாழ்த்தப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசியிருந்தாலும், இப்படத்தில் அவர் காதலை கையாண்ட விதமும், எதார்த்தமான காமெடியை கையாண்ட விதத்திலும், இப்படத்தை ஒரு முழுமையாக காதல் பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘பரியேறும் பெருமாள்’ சாதாரண மனிதனின் வாழ்வியலை சொல்லியிருப்பதோடு, அவனது வலியையும் நாம் உணரும்படி செய்கிறது.
ரேட்டிங் 4.5/5