Casting : RK Suresh, Induja, Shanthini, Thambi Ramaiah
Directed By : Raj Sethupathi
Music By : Ilayavan
Produced By : KC Prabhath
விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து வில்லன் நடிகரான ஆர்.கே.சுரேஷ், ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘பில்லா பாண்டி’.
ரியல் லைபில் தீவிர அஜித் ரசிகரான ஆர்.கே.சுரேஷ், ரீல் லைபிலும் அதே தீவிர அஜித் ரசிகராகவே நடித்திருக்குக்கும் இந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை என்னவோ, தமிழ் சினிமாவில் சக்கையாக பிழிந்தெடுத்த முக்கோண காதலும், அதற்காக ஹீரோ செய்யும் தியாகங்களும் தான் என்றாலும், அதை நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்து பழைய பாணியிலேயே சொல்லியிருக்கிறார்கள்.
கதையும், அதை கையாண்ட விதமும் பழசாக இருந்தாலும், பில்லா பாண்டி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் எனர்ஜியும், அவர் அஜித் மீது காட்டும் வெறித்தனமான பாசமும் தான் படத்தின் பிளஸ் ஏரியாவாக உள்ளது.
படத்தின் ஆரம்பத்திலேயே மாஸான ஓபனிங் பாடலோடு அறிமுகமாகும் ஆர்.கே.சுரேஷ், பாடல் முடிந்ததும் ஜாதி பிரிவினை குறித்து பேசுவதோடு, நடக்க இருக்கும் ஜாதி கலவரத்தை, ஆன்மீகம் மூலம் அடக்குபவர், அந்த காட்சியில் ”ஆத்தா வந்திருக்கேண்டா...” என்று ஆக்ரோஷமாக சாமியாடி தனது நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்திவிடுகிறார்.
சாந்தினி, இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவரது வேடமும் சுமார் தான். இவர்கள் இருவருடன் படத்தையும் தோளில் தூக்கி சுமந்திருப்பவர் ஹீரோ ஆர்.கே.சுரேஷ் தான்.
தம்பி ராமையாவின் நகைச்சுவைக் காட்சிகள் சில எடுபடாமல் போனாலும், அவர் வரும் பெரும்பாலான காட்சிகள் நமக்கு விலா நோகும்படி சிரிக்க வைக்கிறது. அதிலும், அம்மா, மனைவி இடையே அவர் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சி நம்மை சிரிக்க வைப்பதோடு, ஆண்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஜீவனின் ஒளிப்பதிவும், இளையவனின் இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது.
கதையையும், திரைக்கதையையும் இயக்குநர் ராஜ் சேதுபதி நம்பவில்லை என்றாலும், அஜித் என்ற ஒரு பெயரை மட்டும் நம்பி இப்படத்தின் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி அஜித் புராணம் பாடும் ஹீரோ, நிச்சயம் அஜித் ரசிகர்களை டார்க்கெட் செய்தே இப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது புரிகிறது. இருந்தாலும், கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மசாலாப் படமாகவும் இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், அஜித் புகழ் பாடும் இப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, பொழுதுபோக்கு படங்களை விரும்பும் அனைத்து ரசிகர்களுக்கும் ட்ரீட்டாகவே இருக்கும்.
ரேட்டிங் 3/5