Casting : Geethan, Varsha Bollamma, Viji Chandrasekar
Directed By : Santhosh Thiyagarajan
Music By : Josh Franklin
Produced By : E.Sujay Krishna
கிராமத்து காதல் கதையாக உருவாகியிருக்கும் ‘சீமத்துரை’ எப்படி என்பதை பார்ப்போம்.
கல்லூரியில் படிக்கும் ஹீரோ கீதன், தனது கல்லூரி சக மாணவியான ஹீரோயின் வர்ஷா பொல்லம்மாவை கண்டதும் காதல் கொள்கிறார். வர்ஷாவோ கீதனின் காதலை ஏற்க மறுத்தாலும், கீதன் அவரை விரட்டி விரட்டி காதலிக்க, ஒரு கட்டத்தில் வர்ஷாவும் கீதனின் காதல் வலையில் விழுந்துவிடுகிறார். இருவரும் உருகி உருகி காதலிக்க, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஹீரோயினின் தாய்மாமனே ஆதரவு தெரிவித்தாலும், இவர்களது காதலுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை வர, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஒரு சிறிய அவமானம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், என்பதை காதல் பின்னணியில் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் சொல்லியிருக்கிறார்.
ஹீரோ கீதன், பக்கத்து வீட்டு பையன் போல சாதாரணமான தோற்றத்தோடு இயல்பாக நடித்திருக்கிறார். ஹீரோயின் வர்ஷா பொல்லம்மா, தனது கண்களினாலே நடித்திருக்கிறார். அவரது முட்டை கண்களே அவர் சொல்ல வருவதை, அவர் சொல்லாமலே புரிய வைத்துவிடுகிறது.
ஹீரோயின் அம்மாவாக செல்லத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோசஜாக இருக்கிறது.
ஹீரோயினின் மாமாவாக நடித்திருப்பவரின் வேடம் கவனிக்க வைப்பது போல, அந்த வேடத்திற்கான சரியான தேர்வாகவும் அவர் இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் திருஞானசம்மந்தத்தின் பணியும், ஜோஷ் பிராங்கிளினின் இசையும் கதையோடு பயணித்திருக்கிறது.
ஒரு தலை காதலால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழகாக சொல்லிய இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன், பலர் சொல்லிய பழைய பார்முலாவை அதே பாணியில் சொல்லியிருப்பதை சற்று தவிர்த்திருக்கலாம்.
யாரும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனையை கொடுப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு க்ளைமாக்ஸோடு படத்தை முடித்திருப்பதும் சற்று நெருடலாகவே இருக்கிறது. இருந்தாலும், கிராமத்து பின்னணியில் காதலர்களை உருக வைக்கும் அளவுக்கு, அதே சமயம் திகட்டாத அளவுக்கும் இப்படத்தை இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5