Casting : Vikram Prabhu, Hansika, MS Baskar, Vela Ramamurthy
Directed By : Dinesh Selvaraj
Music By : LV Muthu Ganesh
Produced By : Kalaipuli S.Thanu
விக்ரம் பிரபு, ஹன்சிகா நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படமான ‘துப்பாக்கி முனை’ எப்படி என்பதை பார்ப்போம்.
எந்த நேரமும் துப்பாக்கியுடன் இருக்கும், என்கவுண்டர் போலீஸ் அதிகாரி, என்கவுடண்டர் செய்ய வேண்டிய ஒரு குற்றவாளியை காப்பாற்ற முயற்சிக்கிறார், எது ஏன்? என்பது தான் ‘துப்பாக்கி முனை’ படத்தின் ஒன்லைன் கதை.
போலீஸ் யூனிபார்ம் போடுவதைவிட, ரவுடிகளை போட்டுத்தள்ளுவதிலேயே குறியாக இருக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விக்ரம் பிரபு, மும்பையில் வாழும் தமிழர். தான் செய்யும் என்கவுண்டர்களால் தனது அம்மாவின் அன்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் ஆகியவற்றை இழப்பவர், ஒரு கட்டத்தில் தனது போலீஸ் வேலையையும் இழந்துவிடுகிறார். என்ன தான் போலீஸ் வேலையில் இருந்து அடிக்கடி சஸ்பெண்ட் ஆனாலும், மேலதிகாரிகள் அவருக்கு அவ்வபோது சில அதிரடி வேலைகளை கொடுக்க, அதன் மூலம் தனது துப்பாக்கிக்கு விக்ரம் பிரபு தொடர்ந்து வேலை கொடுத்து வருகிறார்.
இதற்கிடையே, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படும் வட மாநில இளைஞர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் என்ற தகவல் போலீஸுக்கு கிடைக்க, அவர் குறித்து மேலும் விசாரிக்கும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் வந்து சேருகிறது. தனது துப்பாக்கிக்கு மீண்டும் வேலை வந்துவிட்ட சந்தோஷத்தில் உற்சாகமாக ராமேஸ்வரத்திற்கு வரும் விக்ரம் பிரபு, மாணவியின் கொலையில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்துக்கொண்டு தனது துப்பாக்கிக்கு வேலை கொடுப்பதை தவிர்த்துவிட்டு, தனது போலீஸ் புத்திக்கு வேலை கொடுக்கிறார். அதன் மூலம் அவருக்கு பல பிரச்சினைகள் வருவதோடு, வட மாநில வாலிபர் நிரபராதி என்பதும் தெரிய வருகிறது. குற்றம் செய்யாத அந்த வட மாநில வாலிபரை காப்பாற்ற நினைக்கும் விக்ரம் பிரபு, அதே சமயம் உண்மையான குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்க, ராமேஸ்வரத்தில் இருந்து அவர் வெளியேறாத வகையில் அவரை வில்லன் கோஷ்ட்டி சுற்றி வளைக்க, அவர்களிடம் இருந்து எப்படி அவர் தப்பித்து, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார், என்பது தான் ‘துப்பாக்கி முனை’ படத்தின் மீதிக்கதை.
சிறுமிகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமையை மையக் கருவாக வைத்துக் கொண்டு, அதைநேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கொடுத்திருக்கிறார்.
விக்ரம் பிரபு ஹீரோ, ஹன்சிகா ஹீரோயின், என்று இருப்பதால் டூயட், ஹீரோவுக்கான ஓபனிங் சாங், வில்லனுக்கான பில்டப் என்றெல்லாம் யோசிக்காமல், இந்த கதையை இப்படி கொடுத்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யூகித்ததுடன், எந்தவித சமரசமும் இன்றி இயக்குநர் தினேஷ் செல்வராஜ் அமைத்தை திரைக்கதை தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
போலீஸாக நடிப்பது என்பது நடிகர்களுக்கு இருக்கும் ஆசை என்றால், காவல் துறையே ரசிக்கும் ஒரு போலீஸாக நடிக்கும் வாய்ப்பு என்பது சிலருக்கு தான் அமையும். அந்த வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் தான் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். பிர்லா போஸ் என்ற வேடத்திற்காக அவர் தனது உடலளவில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. அம்மாவின் பிரிவு, காதலியின் விலகல் என்று அனைத்தும் ஒரு சில நிமிட காட்சிகளாக இருந்தாலும், அதில் விக்ரம் பிரபு வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஸன்கள் அனைத்தும் எக்ஸலண்ட். வில்லனை நேருக்கு நேராக சந்தித்து பேசும் காட்சியிலும் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் தனது உடல் மொழி மூலமாகவே தான் சொல்ல வருவதை புரிய வைப்பவர், ”சிவாஜியின் பேரன் என்றால் சும்மாவா!” என்று நமக்கு சொல்லாமல் சொல்வது போல அசத்தியிருக்கிறார்.
ஹன்சிகா, ஹீரோயினாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வந்து போகிறார். வட மாநில இளைஞராக நடித்திருக்கும் ஷா தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். சவரத்தொழிலாளியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் ரொம்பவே தெளிவாக இருந்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தியின் கெட்டப் புதிதாக இருப்பது போல, அவரது நடிப்பும் இதில் சற்று புதிதாக இருக்கிறது.
படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, சாதாரணமாக வந்து போக வேண்டிய வேடங்களை கூட முக்கியமான வேடங்களாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக காதலியுடன் போலீசிடம் சிக்கிக்கொண்டு, அதன் மூலம் விக்ரம் பிரபுவுக்கு உதவி செய்யும் அந்த பல்சர் பையன். அந்த வேடத்திற்கு இயக்குநர் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும், அந்த வேடத்தை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம் என்பதை இயக்குநர் மட்டும் இன்றி ஒளிப்பதிவாளர் ராசா மதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், எடிட்டர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக புரிந்துக்கொண்டு பணியாற்றியிருக்கிறார்கள். எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசையும், ராசா மதியின் ஒளிப்பதிவும் படம் பார்க்கும் ரசிகர்களை கதையுடனேயே பயணிக்க வைப்பதில் கவனமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
சாதாரணமான கதையாக இருந்தாலும், திரைக்கதை மூலம் அதை ஸ்பெஷல் கதையாக்கும் இயக்குநர்களின் பட்டியலில் தினேஷ் செல்வராஜியின் பெயரும் இடம் பெறும். அந்த அளவுக்கு திரைக்கதையை எந்த அளவுக்கு நேர்த்தியாக கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார். செண்டிமெண்ட், காதல் ஆகியவை படத்தில் இருந்தாலும், அவற்றை ரொம்பவே ஷார்ட்டாக பயன்படுத்தியிருப்பவர், பல விஷயங்களை வசனங்கள் மூலமாக சொல்லாமல், காட்சிகளின் மூலம் சொல்லி புரிய வைத்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.
குற்றங்கள் செய்பவர்களைக் காட்டிலும், அதை செய்ய அவர்களுக்கு தைரியம் கொடுக்கும் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் தான் முக்கிய குற்றவாளிகள் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தினேஷ் செல்வராஜ், படத்தின் க்ளைமாக்ஸையும் சாதாரண ஒன்றாக இல்லாமல், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவே அமைத்திருக்கிறார்.
துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாவை போல, படம் வேகமாக நகர்ந்தாலும், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் படம் தெளிவாக பேசியிருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘துப்பாக்கி முனை’ பர்பெக்ட்டான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மட்டும் இன்றி நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கிறது.
3.5/5