Latest News :

’சீதக்காதி’ விமர்சனம்

b9f3f83e309d7bc40c6b4d798bd2d7ca.jpg

Casting : Vijay Sethupathi, Sunil, Archana, Pagavathi Perumal, Rajkumar, Mouli, Mahendran

Directed By : Balaji Tharanitharan

Music By : Govind Vasantha

Produced By : Passion Studios

 

நல்ல சினிமாவை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், வியாபாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை, என்பதை நம்ப முடியாத ஒரு களத்தின் மூலம் சொல்லியிருப்பது தான் ‘சீதக்காதி’.

 

சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வரும் அய்யா ஆதிமூலம் என்ற விஜய் சேதுபதியின் நாடகம் என்றால் கூட்டம் அலைமோதுகிறது. அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வர,  தான் உயிருடன் இருக்கும் வரை மக்கள் முன்பு தான் நடிப்பேன், என்று கூறி அதை மறுத்துவிடுகிறார். காலம் மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் மேடை நாடகங்கள் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் குறைந்து, நாடகங்களை பார்க்க வரும் மக்கள் கூட்டமும் குறைந்தாலும், அய்யா ஆதிமூலமும், அவரது நாடக குழுவும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதிக்கு பண கஷ்ட்டம் வர, அவர் மறைமுகமாக சினிமாவில் நடிக்க தொடங்க, சினிமா வியாபாரிகளால் விஜய் சேதுபதியின் கலை உணர்வுகள் நசுக்கப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘சீதக்காதி’ படத்தின் மீதிக்கதை.

 

நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தை கொடுத்து வெற்றிப் பெற்ற இயக்குநர் பாலாஜி தரணிதரன், ‘சீதக்காதி’ மூலம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதன் மூலம் சினிமாவை ஒரு கலையாக பார்க்க வேண்டும், என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு திரைக்கதையை எழுதிய இயக்குநர் பாலாஜி தரணிதரனின் தைரியத்தையும், இந்த படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

75 வயது முதியவராக மேக்கப்பில் மட்டும் இன்றி நடிப்பிலும் விஜய் சேதுபதி அசத்தியிருக்கிறார். நாடக கலைஞராக மேடையில் நடிக்கும் போது தனது உடல் மொழியில் மட்டும் இன்றி, வசன உச்சரிப்பிலும் மெனக்கெட்டிருக்கும் விஜய் சேதுபதி, வயதான தோற்றத்தில் நடிக்கும் போது, வயதின் முதிர்ச்சியை தனது நடிப்பில் சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஹவுரங்கசீப் வேடத்தில் அவர் நடித்த சிங்கிள் டேக் காட்சி தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது.

 

விஜய் சேதுபதியையும், அவரது பர்பாமன்ஸையும் விரும்பும் ரசிகர்கள், இந்த படத்தில் எதிர்ப்பார்க்காத சில நடிகர்களின் பர்பாமான்ஸாலும் ஈர்க்கப்படும் அளவுக்கு படத்தில் நடித்த ஒட்டு மொத்த நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் மேடை நாடக கலைஞர்களின் நடிப்பும் அப்ளாஷ் பெற வைக்கிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதியின் படங்கள் மூலம் பாராட்டு பெற்ற பகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் இருவர் வரும் காட்சிகள் விஜய் சேதுபதியையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு மனதில் ஒட்டிக்கொள்கிறது.

 

முதல் பாதியில் பகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் ஸ்கோர் செய்ய, அறிமுக நடிகரான சுனில் இரண்டாம் பாதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். “யார் இவர்?” என்று ஒட்டு மொத்த கோடம்பாக்கமே கேட்கும் அளவுக்கு சுனிலின் பர்பாமன்ஸ் பாராட்டு பெறுகிறது.

 

விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் அர்ச்சனா, மெளலி, நீதிபதியாக வரும் இயக்குநர் மகேந்திரன், வழக்கறிஞர்களான கருணாகரன், ஜி.எம்.சுந்தர் என படத்தில் ஒரு சில காட்சிகளில் வருபவர்கள் கூட தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியும் மற்ற நடிகர்களும் என்றால் அவர்களுக்கு இணையாக ஒரு ஹீரோவாக வலம் வந்திருப்பவர் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் இரண்டிலுமே தனது முத்திரையை அழுத்தமாக பதிய வைத்திருக்கும் கோவிந்த் வசந்தா, படத்தின் மீதிருக்கும் ரசிகர்களின் கவனம் திசை திரும்பும் போது, தனது இசை மூலம் அவர்களின் கவனத்தை மீண்டும் படத்தினுள் கொண்டு வந்துவிடுகிறார். 

 

ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த் டி.கே மற்றும் எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ் இருவரும் காட்சிகளில் உள்ள உயிரோட்டத்தை சிதைத்துவிடாமல் பணியாற்றியிருக்கிறாரகள். மேடை நாடக கலைஞர்களின் டீட்டய்ளிங்கான நடிப்பை போல காட்சிகளில் பல டீட்டய்லை கையாண்டிருக்கும் இவர்களது பணி குறைவான வேகத்தில் இருந்தாலும், காட்சிகளை ரசிக்க முடிகிறது.

 

விஜய் சேதுபதி என்றால் பர்பாமன்ஸ் மட்டும் இன்றி காமெடியும் நிச்சயம் இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இதில் விஜய் சேதுபதி ஏமாற்றினாலும், மற்ற நடிகர்கள் அதனை வஞ்சனை இல்லாமல் செய்திருக்கிறார்கள். சினிமா நடிகர்களாக வரும் ராஜ்குமார் மற்றும் சுனில் ஆகியோரது காட்சிகள் அத்தனையும் எந்த அளவுக்கு நடிகர்களை கலாய்க்கிறதோ, அதே அளவுக்கு நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.

 

சினிமா என்றால் வியாபாரம் மட்டுமே என்று ஒரு கூட்டம் கூறினாலும், அது ஒரு கலை, அதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், என்பதை தான் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இதில் சொல்லியிருக்கிறார் என்றாலும், அதை நம்ப முடியாத ஒரு கதையாக கொடுத்திருப்பதால் இந்த படம் ரசிகர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறது.

 

மக்களிடம் நேரடியாக சென்றடைய கூடிய நாடக கலையையும், நாடக கலைஞர்களையும் மையமாக வைத்து இந்த கதையை எழுதியிருக்கும் பாலாஜி தரணிதரன், அதை படமாக்கும் போது மட்டும் சினிமாத்தனத்தை கையாண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், சினிமாவில் உள்ள சிஸ்டத்தை இயக்குநர் தரணிதரன், ரொம்ப தைரியமாக விமர்சனம் செய்திருப்பதோடு, சினிமா வியாபாரிகள் மூலமாகவே அதை கலாய்த்தும் இருப்பது ரசிக்க வைக்கிறது.

 

விஜய் சேதுபதியை எந்த கதாபாத்திரமாக பார்த்தாலும், அதில் அவர் கொடுக்கும் பர்பாமன்ஸ் மூலம் ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள், இந்த படத்தில் அவருடன் சேர்த்து பல புதிய நடிகர்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இதில் பல விஜய் சேதுபதிகள் நடித்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், இந்த ‘சீதக்காதி’ சினிமா விரும்பிகளுக்கான ஒரு வித்தியாசமான முயற்சி என்றே சொல்லலாம்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery