Latest News :

’தில்லுக்கு துட்டு 2’ விமர்சனம்

69df2404b4150637e5a7a734e7699bb8.jpg

Casting : Santhanam, Naan Kadavul Rajendran, Shritha Shivadas, Urvasi

Directed By : Rambhala

Music By : Shabir

Produced By : Handmade Films

 

சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், அதே கான்சப்ட்டில் வெளியாகியிருக்கும் திகில் படமான ‘தில்லுக்கு துட்டு 2’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஏரியா மக்களுக்கு தொல்லையாக இருக்கும் சந்தானமும், அவரது மாமா நான் கடவுள் ராஜேந்திரனும் கொடுக்கும் டார்ச்சரால் நொந்து நூடுல்ஸாகும் அப்பகுதி மக்கள் சந்தானத்தை எதாவது செய்து இடத்தை காலி பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த சமயத்தில், மலையாள மந்திரவாதியின் மகளான நாயகி ஸ்ரிதா சிவதாஸிடம் ‘ஐ லவ் யு’ சொல்பவர்களை பேய் புரட்டி எடுக்கும் விஷயம் அப்பகுதி மக்களில் ஒருவருக்கு தெரியவர, அவர் இதை பயன்படுத்தி சந்தானத்தை பழிவாங்க நினைக்கிறார்.

 

அதன்படி, ஸ்ரீதா சிவதாஸையும், சந்தானத்தையும் சந்திக்க வைப்பவர், அப்படியே சந்தானத்திற்கு ஸ்ரீதா சிவதாஸ் மீது காதல் ஏற்பட செய்துவிடுகிறார். சந்தானமும் சிவதா மீது உள்ள காதலால், அவரிடம் ஐ லவ் யு சொல்ல, பேய் அவரது வீட்டுக்கே வந்து புரட்டி எடுக்கிறது. அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளும் சந்தானம், நேரடியாக கேரளாவுக்கே சென்று ஸ்ரீதாவின் மந்திரவாதி அப்பாவை எதிர்கொள்ள, அதன் பிறகு நடக்கும் திகில் மற்றும் தில்லாலங்கடி விஷயங்களை திகட்டாதா காமெடியாக சொல்லியிருப்பது தான் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் மீதிக்கதை.

 

’தில்லுக்கு துட்டு’ படத்தின் கான்சப்ட்டிலேயே இந்த ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், முதல் பாகத்தை காட்டிலும், இந்த இரண்டாம் பாகத்தில் காமெடியும், விறுவிறுப்பும் கூடுதலாக இருக்கிறது.

 

ஹீரோவுக்கு உண்டான ஆக்‌ஷன், ஆட்டம் என்று ஒரு பக்கம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் சந்தானம், மறுபக்கம் தனது அக்மார்க் காமெடி மூலம் படம் முழுவதும் ரசிகர்களை குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறார். எப்போதும் தனது நக்கலான டைமிங் வசனங்களால் சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் வசனங்களை குறைத்துவிட்டு பேசாமலே நம்மை சிரிக்க வைத்திருப்பது புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

 

படத்தின் ஆரம்பம் முதல், படம் முடிந்து எண்ட் டைடில் போடும் வரை, சந்தானத்துடன் வரும் நான் கடவுள் ராஜேந்திரன் படத்தின் இரண்டாம் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு, அவரது பர்பாமன்ஸ் அமைந்திருக்கிறது. சில காட்சிகளில் சந்தானம் இல்லாமலே சோலோவாக அவர் பேசும் வசனங்களும், மேனரிசமும் திரையரங்கில் அதிர்வை ஏற்படுத்துகிறது.

 

Dhillukku Dhuddu 2 Review

 

படத்தில் வந்து போகும் பேய்களை போல ஹீரோயின் வந்து போவதுடன், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்,மற்றபடி அவரைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் பிபின், ஊர்வசி ஆகியோரது கூட்டணியும் நம்மை குஷிப்படுத்த, சில இடங்களில் நடன இயக்குநர் சிவசங்கர் மற்றும் அவரது சகாக்களும் நம்மை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

 

படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் இருந்தாலும், அவை பலருக்கு புரியாதவாறும், சிலருக்கு தெரியாதவாறும் இருப்பதால், முகம் சுழிக்க வைக்காமல் சிரிக்க வைக்க மட்டுமே செய்கிறது.

 

சந்தானம் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனின் காமெடி விருந்தில், வேறு எதையும் கண்டுக்கொள்ள தோன்றவில்லை என்றாலும், தீபக்குமாரின் ஒளிப்பதிவும், ஷபீரின் இசையும் சில இடங்களில் கவனிக்க வைக்க, ”மவனே யாருக்கிட்டே” பாடலும், அப்பாடல் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சியும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

ஒரே கான்சப்ட் திரைக்கதை என்றாலும் அதில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் இயக்குநர் ராம்பாலா, நகைச்சுவையுடன், ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட செய்யும் அளவுக்கு திரைக்கதையை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைத்திருக்கிறார்.

 

திரைக்கதை ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் இடம்பெறும் காமெடிக் காட்சிகள் அத்தனையும் சர்க்கரை கட்டிகளை போல இனிக்கும் அளவுக்கு அமைத்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலம். அதிலும், ஹீரோயினின் மந்திரவாதி அப்பாவை சந்தானமும், ராஜேந்திரனும் கலாய்க்கும் காட்சி ‘புது மனிதன்’ படத்தில் சத்யராஜ் - கவுண்டமணி கூட்டணி செய்யும் நய்யாண்டித்தனத்தையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

 

இப்படி படம் முழுவதும் கேப்பே கொடுக்காமல் குளுங்க குளுங்க சிரிக்க வைக்கும் இந்த ’தில்லுக்கு துட்டு 2’ திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும், காட்சிகளை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ரசிகர்கள் கொடுக்கும் துட்டுக்கு 200 சதவீதம் திருப்திப்படுத்தும் படமாக இருக்கிறது இந்த ‘தில்லுக்கு துட்டு 2’

 

ரேட்டிங் 4/5

Recent Gallery