Latest News :

’சித்திரம் பேசுதடி 2’ விமர்சனம்

42e773d9b4f8e10a0d9577171fe1c5ba.jpg

Casting : Vidharth, Ajmal, Ashok, Naren, Subbu Panjchu, Gayathri, Radhika Apthey

Directed By : Rajan Madhav

Music By : Shajan Madhav

Produced By : Lv SrikanthLakshman, S.N.Ezilan, Yugesram@YG

 

எல்.வி.ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மன், எஸ்.என்.எழில், யுகேஷ்ராம் ஆகியோரது தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில், விதார்த், அஜ்மல், அசோக், ராதிகா ஆப்தே ஆகியோரது நடிப்பில் ‘உலா’ என்ற பெயரில் உருவான படம் தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டது இந்த படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு மாற்றத்தோடு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஆக்‌ஷன் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

விதார்த், அஜ்மல், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆப்தே ஆகிய 5 கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மைய கரு. படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை என்றாலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையால் ஏதோ ஒரு வகையில், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்பட, அதன் மூலமாகவும், மறைமுகமாகவும் அவர்களது பிரச்சினை எப்படி தீர்கிறது என்பது தான் திரைக்கதை.

 

இப்படத்தின் பலமே திரைக்கதையும், நடிகர்கள் தேர்வும் தான் என்பதை இயக்குநரை விடவும் படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நல்லாவே புரிந்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இத்தகைய ஒரு படத்தையும் அவர் தயாரித்திருக்கிறார். 

 

கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விதார்த்தின் நடிப்பு ஒரு விதம் என்றால், அவருடன் இருந்துக் கொண்டே அவருக்கு எதிராக எதை வேண்டுமானலும் செய்ய ரெடியாக இருக்கும் அசோக்கின் நடிப்பு ஒரு விதத்தில் அசத்துகிறது. சொத்தை இழந்துவிட்டு பணத்திற்காக தவறான முயற்சியில் இறங்கும் அஜ்மல், கணவரை காப்பாற்ற போராடும் ராதிகா ஆப்தே என்று படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

 

விலைமாதுவாக நடித்திருக்கும் நடிகையும், அவரை காதலிக்கும் நிவாஸ் ஆதித்தன், அவரது நண்பரான பிளேடு சங்கர், காயத்ரி, ஆடுகளம் நரேன், சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள் என்று படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும் அளவுக்கு இயக்குநர் ராஜன் மாதவின் திரைக்கதை அமைந்திருக்கிறது.

 

ஷஜன் மாதவின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது. அதிலும், பிராவோ நடனம் ஆடும் “ஏண்டா...ஏண்டா...” பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பத்மேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ராஜேசேகர் மாஸ்டரின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதத்திற்காகவே ஒளிப்பதிவாளருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம். குறுகலான மற்றும் பாத்ரூம்களில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் கேமரா பிரமிக்க வைக்கிறது. 

 

இயக்குநரின் திரைக்கதையையும், காட்சிகளையும் எந்த வித குழப்பமும் இன்றி ரசிகர்கள் புரிந்துக் கொள்ளும்படி எடிட்டர் கே.ஜே.வெங்கட்ராமன் கொடுத்திருக்கிறார். இத்தனை கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை சொல்வதில், ஒரு இடத்தில் தவறு நடந்திருந்தாலும் மொத்த படமே தப்பாக போக வேண்டிய ஒரு கான்சப்ட்டை ரொம்ப கச்சிதமாகவே எடிட்டர் கத்திரி போட்டிருக்கிறார்.

 

இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும், படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த விதார்த், அசோக், நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இதுபோன்ற ஜானரில் சில படங்கள் வந்திருந்தாலும், இத்தனை கதாபாத்திரங்களை வைத்து இப்படி ஒரு ஜானரில், இந்த படத்தை இயக்கியிருக்கும் ராஜன் மாதவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதேபோல், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை சரியாக தேர்வு செய்திருக்கும் இயக்குநர் சில நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அவர்களையும் படத்தில் முக்கிய பங்கு பெறும்படி காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘சித்திரம் பேசுதடி 2’ கதையை பற்றி பேச முடியாத படமாக இருந்தாலும், படம் பேசும்படி இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery