Casting : Takur Anoop Singh, Sai Dhansika, Kishore, Tanya Hope
Directed By : Sunil Kumar Desai
Music By : Sanjay Choudhry
Produced By : D Creations R Devaraj
சாய் தன்ஷிகா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் ‘உச்சக்கட்டம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கும் தன்ஷிகா, அங்கு நடக்கும் கொலையை தனது செல்போனின் வீடியோ எடுத்து விடுகிறார். அதை பார்க்கும் கொலையாளிகள் தன்ஷிகாவை துரத்துவதோடு, அவரது காதலர் ஹீரோ தாக்கூர் அனூப் சிங்கையும் சிறை பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தாக்கூர் அனூப், தன்ஷிகாவை தேடி செல்ல, தன்ஷிகா வில்லன்களிடம் சிக்கிக் கொள்கிறார். வில்லன்களிடம் இருக்கும் தன்ஷிகாவை மீட்க தாக்கூர் அனூப் போராட, மறுபக்கம் ஓட்டலில் நடந்த கொலை பற்றி போலீஸ் விசாரணையை தொடங்க, தாக்கூர் தன்ஷிகாவை மீட்டாரா இல்லையா, ஓட்டலில் நடந்த கொலையின் பின்னணி என்ன என்பது தான் ‘உச்சக்கட்டம்’ படத்தின் கதை.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் எப்படி இருக்க கூடாது, என்பதற்கான உதாரண சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் இந்த ‘உச்சக்கட்டம்’
சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கான இமேஜையும், லாஜிக்கையும் பார்க்காமல், முழுக்க முழுக்க மசாலாப் படமாகவே இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநர் சுனில் குமார் தேசாய் வடிவமைத்திருக்கிறார்.
‘சிங்கம் 3’ யில் வில்லனாக நடித்த தாக்கூர் அனூப் சிங் தான் படத்தின் ஹீரோ. அவர் நடித்திருக்கிறார் என்பதை விட பலரை அடித்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் தான். ஒன்று இரண்டு இடத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் வசனம் பேசுபவர், பெரும்பாலான இடங்களில் டமால்...டுமீல்...,என்று சண்டைப் போடுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.
ஹீரோ இப்படி, என்றால் ஹீரோயினான சாய் தன்ஷிகா, செல்போனில் படம் பிடிப்பது, பதுங்குவது பிறகு வில்லன்களிடம் சிக்கிக் கொள்வது, தப்பிக்க முயல்வது என்று அழுகையும், அலறுலுமாகவே நடித்திருக்கிறார்.
படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கபீர் துஷன் சிங், தன்யா ஹோப், கிஷோர், வம்சி கிருஷ்ணா என்று எந்த நடிகரும் மனதில் நிற்கும்படி, நடிக்கவும் இல்லை, அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த படத்திற்காக இயக்குநர் நடிகர்களை தேர்வு செய்யும் போது, அவர்களுக்கு நடிப்பு வருமா, கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்களா, என்றெல்லாம் யோசிக்காமல் அவர்கள் பாடி பில்டராக இருக்கிறார்களா, என்று மட்டுமே யோசித்திருப்பார் போல, அதேபோல் நடிகைகள் தொடை தெரியும்படி உடை அணிந்தால் போதும், என்று நினைத்திருப்பார் போல.
இசையைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரை விட ஆக்ஷன் இயக்குநருக்கு தான் படத்தில் அதிக வேலை, அந்த வேலையை அவர் சரியாகவே செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.
இயக்குநர் சுனில் குமார் தேசாய், சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெயரில், இந்திய சினிமாவே கைகழுவிய கற்பழிப்பு விஷயத்தை கருவாக வைத்து எடுத்திருக்கும் இப்படத்தின், மூலம் ரசிகர்களை கசக்கி பிழிந்துவிடுகிறார். அதிலும், அந்த கற்பழிப்பு சம்பவ காட்சி, ஐயோ, கொடூரமோ கொடூரம்.
மொத்தத்தில், ‘உச்சக்கட்டம்’ சஸ்பென்ஸ், திரில்லர் என்ற எதுவும் இல்லாத, ரசிகர்களுக்கு தலைவலி கொடுக்கும் ஓவர் டோஸ் மசாலாப் படம்.
ரேட்டிங் 2/5