Casting : Jayakumar, Jenifer, Bava Selladurai, Akash, Krishnamoorthy, Veerasamar, Kiran, Bala Singh
Directed By : Satheeshwaran
Music By : SM Prashanth
Produced By : Jeevamalar Satheeshwaran Movies
பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தாலும், ”மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம்”, என்ற வாக்குறுதி மட்டும் எந்த அரசியல் கட்சியின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை. இதற்கு காரணம், அரசின் முக்கியமான மற்றும் அதிக வருவாய் தரும் தொழிலாக மதுபானக் கடைகள் இருப்பது தான்.
இப்படி அரசுக்கு அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கும் இந்த மதுபானக் கடைகள், பொதுமக்களுக்கு எவ்வளவு பெரிய துயரத்தை தருகிறது, மதுவால் எத்தனை குடும்பங்கள், எப்படி சீரழிகிறது, என்பதை நமக்கு புரிய வைக்கும் படம் தான் ‘குடிமகன்’.
மனைவி, ஒரு பிள்ளை என்று அளவான குடும்பத்தோடு அழகான வாழ்க்கை நடத்தி வரும் விவசாயி ஜெய்குமார், ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நிற்கும் குணம் கொண்டவர். மது பழக்கம் இல்லாத ஜெய்குமாருக்கு தனது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்.
இதற்கிடையே, ஊரில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று வர, அதனை எதிர்த்து ஜெயகுமார் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் போராடுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகளோ, ஒரு மாதத்திற்கு பிறகு கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவதாக கூறுகிறார்கள். அதை நம்பி மக்களும் போராட்டத்தை கைவிட, ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்கள், குடிக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதில் ஹீரோ ஜெய்குமாரும் ஒருவராகிவிடுகிறார். பிரச்சினை பெரிதாவதை பார்த்து ஊர் பெண்கள், ஊர் பெரியவர் தலைமையில் மீண்டும் மதுபானக் கடைக்கு எதிராக போராட முடிவு செய்ய, ஆண்கள் அனைவரும் மதுபானக் கடைக்கு ஆதரவாக நின்றுவிடுகிறார்கள். இதனால், கடையை காலி செய்ய முடியாமல் போகிறது.
இப்படி குடிக்கு அடிமையாகி பலர் பல இன்னல்களை அனுபவிக்க, ஹீரோ ஜெய்குமாரின் மனைவி ஜெனிபரும் தனது கணவனின் மது பழக்கத்தினால் பெரும் துன்பத்தை எதிர்கொள்கிறார். கணவனின் குடி பழக்கத்தை நிறுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் அனைத்தும் தோல்வியில் முடிய, ஒரு கட்டத்தில், ஊரே அதிர்ந்து போகும் அளவுக்கு ஜெனிபர் ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.
மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு, என்று மதுபாட்டிலில் எழுதப்பட்டிருந்தாலும், அதனைக் கண்டுக்கொள்ளாத குடிமகன்கள், இந்த ‘குடிமகன்’ படத்தை பார்த்தால், ”மது பழக்கத்தால் நாம் மட்டும் இன்றி, நமது குடும்பமும் எப்படி கஷ்ட்டப்படுகிறது” என்று நிச்சயம் யோசிப்பார்கள்.
ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய்குமார் புதுமுகம் என்றாலும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஜெனிபர், இதற்கு முன்பு சில படங்களில் நடித்த அனுபவத்தோடு நடித்திருக்கிறார். கணவன் மது பழக்கத்திற்கு ஆளான பிறகு, வரும் பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், குடிமகன்களால் துன்பப்படும் தாய்மார்களை நினைவுப்படுத்துகிறது.
கவுன்சிலராக நடித்திருக்கும் கிரண், ஊர் தலைவராக நடித்திருக்கும் பாவா செல்லதுரை, வீரசமர், பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
எதற்கு எடுத்தாலும் பார்ட்டி, என்ற பெயரில் குடிக்க காரணம் தேடுபவர்கள், அந்த குடியினால் உறவினர்கள் உள்ளிட்ட பிறரிடம் எப்படி அவமானப்பட்டு அசிங்கப்படுகிறார்கள், என்பதையும் இயக்குநர் காட்சிகளின் மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
ஆடம்பரம் இல்லை, பிரம்மாண்டம் இல்லை, ஆனால், தான் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதியும் விதத்தில் இயக்குநர் சதீஷ்வரன் படத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
சி.டி.அருள் செல்வனின் ஒளிப்பதிவும், எஸ்.எம்.பிரசாந்தின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
யார், எப்படிப்பட்ட உபதேசம் செய்தாலும், குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு, என்று எப்போதும் போல டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டாலும், இப்படத்தை ஒரு முறை பார்ப்பவர்கள், முழுவதுமாக மது பழக்கத்தை விடவில்லை என்றாலும், அன்றைய ஒரு நாளாவது குடிக்காமல், குடும்பத்தை பற்றி யோசிப்பார்கள் என்பது உறுதி.
மதுவுக்கு எதிராக பலர் பல விதத்தில் போராடுவது போல, இயக்குநர் சத்தீஷ்வரன், சினிமா என்ற மிகப்பெரிய மீடியத்தின் மூலம் நடத்தியிருக்கும் இந்த போராட்டமும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.
மொத்தத்தில், இந்த ‘குடிமகன்’ வெறும் திரைப்படமாக அல்லாமல் மக்களை திருத்துவதற்கான ஒரு வழிகாட்டியாக உள்ளது.
ரேட்டிங் 3/5