Casting : Vijaya Kumar, Vismaya, Sudhakar, Abbas, Shankar, Anand Raj
Directed By : Vijaya Kumar
Music By : Govind Vasantha
Produced By : 2D Entertainment
வெற்றிப் பெற்ற படங்களை தான், இரண்டாம் பாகம் எடுப்பார்கள், ஆனால், இயக்குநர் விஜயகுமார் வித்தியாசமாக தோல்வியடைந்த தனது முத படமான ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த ‘உறியடி 2’-வை எடுத்திருக்கிறார். இருந்தாலும், ’உறியடி’ க்கும் ‘உறியடி 2’ வுக்கும் கதைப்படி எந்த ஒற்றுமையும் இல்லை என்றாலும், கருவில் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, சமூகத்தில் நடக்கும் அவலங்களை இளைஞர்கள் தட்டி கேட்க வேண்டும் என்பது தான் அது.
“தாபாவில் மது குடி, கல்லூரியில் அடிதடி” என்று பெரும்பாலான காட்சிகளைக் கொண்ட உறியடியில், ஜாதி அரசியலால், மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்று பேசியிருந்த இயக்குநர் விஜயகுமார், இந்த ‘உறியடி 2’வில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார். அது என்ன பிரச்சினை, அதை எப்படி அவர் கையாண்டிருக்கிறார், என்பதை பார்ப்போம்.
கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஹீரோ விஜயகுமாரும், அவரது நண்பர்களும் வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, விஜயகுமாரின் ஊரில் இருக்கும் உரத்தொழிற்சாலையில் மூவருக்கும் வேலை கிடைக்கிறது. உயிருக்கு ஆபத்தான கெமிக்கலை பயன்படுத்தும், அந்த தொழிற்சாலை பழுந்தடைய நிலையில் இயங்கி வர, அங்கு ஏற்படும் விபத்தில் விஜயகுமாரின் நண்பர் ஒருவர் இறந்துவிடுகிறார்.
இதையடுத்து, தொழிற்சாலையில் இருக்கும் அத்தனை எந்திரங்களும் பழுதடைந்திருப்பதோடு, பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் செயல்படாமல் இருப்பதை அறியும் விஜயகுமார், அதன் ஆபத்தை நிர்வாகத்திற்கு எடுத்துக்கூற, அவர்களோ அனைத்தும் தெரிந்தும் எதையும் சரி செய்யாமல் இருப்பதோடு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தொடர்ந்து தொழிற்சாலையை இயக்கி வருகிறார்கள். தொழிற்சாலையில் ஏற்படும் திடீர் விபத்தால், அந்த ஊர் மக்கள் கொடூரமான முறையில் மரணமடைகிறார்கள்.
உயிரிழந்தவர்களை வைத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட, அவர்களை வைத்து வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலையின் முதலாளி தப்பித்துக் கொள்வதோடு, அதே ஊரில் மற்றொரு தொழிற்சாலையையும் தொடங்க திட்டமிடுகிறார். இறந்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதோடு, தவறு செய்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பித்து வெளிநாட்டில் வாழும் அந்த தொழிற்சாலையின் முதலாளியை வர வைத்து அவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக இளைஞர்கள் படையுடன் களத்தில் இறங்கும் விஜயகுமார், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, தொழிற்சாலையின் முதலாளிக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா, என்பது தான் ‘உறியடி 2’ படத்தின் மீதிக்கதை.
போபால் விசவாயு கசிவு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஆகியவற்றை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் விஜயகுமார், ஜாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களும், அரசியலை தொழிலாக நடத்துபவர்களும் எப்படி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு விலை போகிறார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல்வாதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள், என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பவர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த கட்சியை விமர்சனம் செய்வது போலவும் சொல்லியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையின் ஆபத்தை பிறர் கூற கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம், ஆனால் அதை நாம் பார்க்கும்படி இப்படத்தின் காட்சிகள் அமைந்திருக்கின்றன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அமிலங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் அபாயங்களை முதல் பாதியில் விரிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார். அதிலும், தொழிற்சாலையில் விசவாயு கசிய தொடங்கும் அந்த ஒரு காட்சி ஒட்டு மொத்த திரையரங்கையுமே அச்சத்தில் உரைய வைத்துவிடுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராட ஹீரோ களம் இறங்கியதுமே, அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை தொடங்க, அதை எதிர்கொள்ளும் இளைஞர்கள், அரசியல்வாதிகளுக்கு எப்படி செக் வைக்க வேண்டும், என்பதை சொல்லிய விதத்தில் இயக்குநர் ரசிக்க வைத்தாலும், ஜாதி அரசியலை எதிர்க்கிறேன், என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு ஜாதி கட்சியை மட்டும் குறி வைத்து விமர்சித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
சமூக பிரச்சினையை பேசும்போது, நடுநிலையோடு பேச வேண்டும். ஆனால், இயக்குநர் விஜயகுமாரோ அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும்போது நடுநிலையோடு விமர்சிப்பவர், ஜாதி அரசியலை விமர்சிக்கும் போது மட்டும் குறிப்பிட்ட ஒரு ஜாதி கட்சியையும், அதன் தலைவரையும் தாக்கி பேசுவதோடு, அந்த சமூக மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது போலவும் சித்தரித்திருக்கிறார். அப்படியானால், பிற ஜாதி கட்சி தலைவர்கள், அவர்களது சமூக மக்களுக்காக வாரம் வாரம், தங்களது குடும்ப உயிர்களை பலி கொடுக்கிறார்களா?
ஜாதி அரசியலை இப்படி பேதமையோடு கையாண்ட இயக்குநர் விஜயகுமார், படத்தில் சொல்லியிருக்கும் பல சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, எது எதுக்கோ ஆப் இருக்கும் போது, நம் ஊரை சுற்றி இயங்கும் தொழிற்சாலைகளின் தகவல்களைப் பற்றி அறிய ஒரு ஆப் வேண்டும், அதில் பயன்படுத்தும் மெமிக்கல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும், என்று சொல்வது. அதேபோல், போலீஸ் உடையில் வரும் ஒருவர் விஜயகுமாரை பார்த்து “இங்க வாடா” என்று கூப்பிட, அதற்கு விஜயகுமார் “என்ன வேணும் சொல்டா” என்று கூறிவிட்டு, மரியாதையா பேசுனா, மரியாதை கிடைக்கும் என்ற வசனம் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது.
படத்தில் நடித்த நடிகர்கள் என்று பார்த்தால் அத்தனை பேரும் தங்களது பணியை இயல்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவாக நடித்திருக்கும் இயக்குநர் விஜயகுமார், அவரது நண்பர்களாக நடித்திருப்பவர்கள், ஹீரோயினாக நடித்திருக்கும் விஷமயா, ஜாதி கட்சி தலைவர், தொழிற்சாலை முதலாளி, தொழிற்சாலை பணியாளர்கள் என்று அத்தனை நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, நம்முடன் பழகியவர்கள் போல சாதாரண மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பீஜியமும் படத்திற்கு பெரிய பிளஸ். அதிலும், தொழிற்சாலை விபத்து காட்சியில் அவரது பின்னணி இசை காட்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவின் குமாரின் ஒளிப்பதிவில் தொழிற்சாலை காட்சிகள் மிரள வைக்கிறது. தொழிற்சாலையின் வாயு வெளியேறும் உயரமான குழாயை ஏரியல் வீவில் அவர் காட்டிய விதம் பிரமிக்க வைக்கிறது. எடிட்டர் லினு.எம் நேர்த்தியாக கத்திரி போட்டிருக்கிறார்.
சீரியஸான ஒரு விஷயத்தை சினிமாவாக எடுக்கும் போது செய்யப்படும் எந்தவிதமான அட்ஜெஸ்ட்மெண்டையும் செய்யாமல், சீரியஸாகவே நகர்த்தி நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் விஜயகுமார், படத்தின் முதல் பாதி திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் நம்மை மிரட்டி விடுகிறார். அதே சமயம், இரண்டாம் பாதியில் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் விதத்திலும் நம்மை ரசிக்க வைப்பவர், இறுதியில் படத்தை முடிக்கும் போது மட்டும், ஏதோ மசாலா படத்தின் க்ளைமாக்ஸ் போல காட்சியை வைத்திருப்பது மிகப்பெரிய சொதப்ப.
அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், நம் மண்ணை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக நாம் எப்படி போராட வேண்டும் என்பதையும், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதையும் புரிதலோடு சொல்லும் இயக்குநர் விஜயகுமார், இறுதிக் காட்சியை மட்டும் சினிமாத்தனமாக கையாண்டு, நல்ல கருத்தை சொன்னாலும், அதிலும் வியாபாரம் முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டார்.
மொத்தத்தில், ‘உறியடி 2’ சாட்டையடியாக இருந்தாலும், சமத்துவமாக இல்லை.
ரேட்டிங் 3/5