Casting : GV Prakash Kumar, Parthiban, Palak Lalwani, Poonam Pajwa, Yogi Babu
Directed By : Baba Baskar
Music By : GV Prakash Kumar
Produced By : Saravanan.M
ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் ‘குப்பத்து ராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.
சென்னையின் குடிசைப் பகுதியில் வாழும் ஜிவி பிரகாஷ், அதே ஏரியாவில் மாஸ் காட்டும் பார்த்திபனை விட தான், தான் பெரிய ஆள் என்று காட்ட எண்ணுகிறார். அப்படியே காதல், பைக் சீசிங், குடி, நண்பர்களுடன் கும்மாளம் என்று வாழ்ந்து வருபவர், பார்த்திபன் தனது அப்பாவை அடித்தார் என்பதற்காக அவரை அனைவர் முன்பும் அடித்துவிடுகிறார். பிறகு ஜிவி பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரை யாரோ கொலை செய்துவிட, அது பார்த்திபனாக தான் இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் நினைத்துக் கொண்டிருக்கும் போது, வேறு ஒரு கும்பல் ஜிவி பிரகாஷை கொலை செய்ய முயற்சிக்க, அதில் இருந்து அவரை பார்த்திபன் காப்பாற்றுகிறார். தனது அப்பாவை கொலை செய்தது பார்த்திபன் அல்ல, என்பதை தெரிந்து கொள்ளும், ஜி.வி.பிரகாஷ், உண்மையான கொலையாளியை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்க, அவர் ஏரியாவில் சிறுவன் ஒருவன் திடீரென்று காணாமல் போவதோடு, அந்த ஏரியாவில் இயங்கி வந்த சாக்லெட் நிறுவனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து, பெண்கள் பல உயிரிழக்கிறார்கள். அந்த ஏரியாவில் நடக்கும் இந்த மர்மமான சம்பவங்களின் பின்னணி குறித்து அறிய பார்த்திபன் முயற்சிக்க, ஜி.வி.பிரகாஷின் தந்தையின் கொலைக்கும், இந்த மர்மங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அது என்ன, அதன் பின்னணி இருப்பது யார், என்பதை கண்டுபிடித்து அவர்களை, ஜிவி.பிரகாஷும், பார்த்திபனும் என்ன செய்தார்கள், என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள் தற்போது மாடி வீடுகளாக மாறி வரும் காலத்தில், இப்படி ஒரு கதையை எழுதிய பாபா பாஸ்கரை கூட மண்ணித்துவிடலாம், இந்த கதையை தயாரிக்க முன் வந்தாரே அந்த தயாரிப்பாளர், அவரை தான் மண்ணிக்கவே கூடாது.
25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தற்போது எடுத்ததோடு அல்லாமல், அதை சரியாக எடுக்க தெரியாமல் கதை, திரைக்கதை இரண்டிலும் சொதப்பியிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வாரம் ஒரு படம் வெளியானாலும், அவர் மட்டும் நடிப்பை கற்றுக்கொள்வதாக இல்லை. ஏதோ, பார்த்திபன் புன்னியத்தால் சில காட்சிகள் ரசிக்கப்பட்டாலும், சில இடங்களில் ஜி.வி.பிரகாஷை உள்ளே நுழைத்து காட்சிகளை கெடுத்து விடுகிறார்கள்.
ஹீரோயினாக நடித்திருக்கும் பாலக் லால்வாணி, குடிசைப் பகுதி பெண்ணாக கச்சிதமாக பொருந்துவதோடு, நன்றாகவும் நடித்திருக்கிறார். பூனம் பஜ்வா, எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை. அவர் நடித்த வேடத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் யாரைவாவது நடிக்க வைத்திருந்தால் படத்தின் பட்ஜெட்டாவது குறைந்திருக்கும்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அத்தனையும் புரியாத வகையிலேயே இருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தை ஓரளவு தூக்கி நிறுத்துகிறது.
பழைய கதையில் எதாவது புதுமையும், ட்விஸ்ட்டும் வைக்க வேண்டும் என்பதற்காக, சில கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் இயக்குநர் பாபா பாஸ்கர் திணித்திருப்பது படத்திற்கு பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. குறிப்பாக சாக்லெட்டுக்காக சிறுவன் கொலை செய்யப்படுவது.
‘குப்பத்து ராஜா’ என்று தலைப்பு வைத்துவிட்டு, கதையை குப்பையாக எழுதியிருக்கும் இயக்குநர் பாபா பாஸ்கர், படத்தின் முக்கியமான அம்சமான வில்லன் கதாபாத்திரத்தையும் டம்மியாக்கி ஒட்டு மொத்த படத்தையும் குப்பையாக்கி விடுகிறார்.
அனைவரும், இது ‘குப்பத்து ராஜா’ அல்ல ‘குப்பை ராஜா’ என்கிறார்கள், எதற்காக ராஜா என்ற வார்த்தையை அசிங்கப்படுத்த வேண்டும், வெறும் ‘குப்பை’ என்றே சொல்வோம்.
ரேட்டிங் 2/3