Casting : Raghava Lawrence, Oviya, Vedhika, Nikki Tamboli, Ri-Djavi Alexander, Kovai Sarala, Soori, Anupama Kumar
Directed By : Raghava Lawrence
Music By : S.Thaman
Produced By : Kalanidhi Maran, Raghava Lawrence
ராகவா லாரன்ஸுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்து வரும் ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ வெற்றியை தொடர்கிறதா, அல்லது முடிவுக்கு கொண்டு வந்ததா, என்பதை பார்ப்போம்.
தாத்தா - பாட்டியின் 60 ம் கல்யாணத்திற்காக குடும்பத்தோடு தங்களது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு செல்லும் ராகவா லாரன்ஸ், வழியில் செய்யும் ஒரு செயலால், பேய் ஒன்று அவரை பின் தொடர்ந்து வருகிறது.
தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்ஸின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸை லவ் பண்னுவதாக அவரையே சுற்றி அவர, அவரும் அவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.
இதற்கிடையே லாரன்ஸை பின் தொடர்ந்த பேய், வீட்டுக்குள் புகுந்து தனது கலவரத்தை ஆரம்பிக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு லேசாக டவுட் வர, அந்த டவுட்டை கிளியர் பண்ணிக்க, அகோரி ஒருவர் சொல்வது போல பூஜை ஒன்றை செய்கிறார்கள். அந்த பூஜையின் மூலம் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிவிடுவதோடு, அந்த பேய் ராகவா லாரன்ஸ் உடலில் புகுந்துக் கொண்டிருப்பதையும் தெரிந்துக் கொள்கிறார்கள்.
லாரன்ஸின் உடலில் புகுந்த பேய் பல அட்டகாசங்களை செய்ய, பிறகு நடக்கும் சம்பவங்களும், பேயின் பின்னணியும் தான் படத்தின் மீதிக்கதை.
ராகவா லாரன்ஸ், எப்போதும் போல காமெடி கலந்த நடிப்பில் கவர்வதோடு, தனது மாஸான நடிப்பு மூலமும் அசத்துகிறார். இயக்குநர் ஹரியின் படத்தின் ஹீரோ போல, படு வேகமாக நடிப்பவர், பேயாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அதிரடி காட்டுபவர், ஹீரோயின்களிடம் லவ்வபல் பாயாகவும் அசத்துகிறார்.
ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று ஹீரோயின்களுக்கும் ராகவா லாரன்ஸை காதலிப்பது மட்டுமே வேலை. இதை கவர்ச்சியாகவும் செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீமன் - தேவதர்ஷினியின் கூட்டணியும், கோவை சரளாவின் சோலோ பர்பாமன்ஸும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. கூடுதலாக சூரியின் காமெடியும் சேர்ந்துக் கொள்ள புல் மீல்ஸுடன், இனிப்பு சுவைத்த அனுபவத்தை கொடுக்கிறது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு சினிமாவை விரும்பும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அறிந்து ஒரு இயக்குநராக தன்னை மீண்டும் நிரூபித்திருக்கும் ராகவா லாரன்ஸ், த்ரில்லர், காமெடி இரண்டையும் சமமாக கொடுத்திருப்பதோடு, ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைப்பது போல, பின்னணி இசை பயமுறுத்தும் வகையில் மாஸாகவும் இருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவு, வண்ணங்களே கூச்சப்படும் அளவுக்கு வண்ணமயமாக இருக்கிறது.
விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகரும் திரைக்கதைக்கு ஒரு சில பாடல்கள் வேகத்தடையாக இருக்கிறது. காஞ்சனா சீரிஸ் படங்களின் கதைகள் இப்படி தான் இருக்கும், என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் யூகித்துவிடும்படி கதையும், திரைக்கதையும் இருப்பது சற்று சலிப்படைய செய்தாலும், காட்சிகளில் வித்தியாசத்தையும், வீரியத்தையும் கையாண்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.
பேய் படம் என்றால் திகில் நிறைந்தவையாக இருக்க வேண்டும், என்ற லாஜிக்கை மாற்றி, பேய் படங்களை நகைச்சுவையாக சொல்வதோடு, அதில் வெற்றியும் பெறலாம், என்று நிரூபித்து காட்டிய ராகவா லாரன்ஸ், தனது பாணியில், திகலையும், காமெடியையும் தூக்கலாக காட்டி, அதற்குள் கமர்ஷியல் மசாலாவையும் தூவி, குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் முடியும் போது ‘காஞ்சனா 4’ மூலம் மீண்டும் சந்திப்போம், என்று ரசிகர்களுக்கு சொல்லும் ராகவா லாரன்ஸ், எத்தனை காஞ்சனாவை காண்பித்தாலும், அதை ரசிகர்களுக்கு போரடிக்காமல் காட்டுவேன், என்பதை படத்திற்கு படம் நிரூபிக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘காஞ்சனா 3’ குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடிய, கலகல திகில் படமாக உள்ளது.
ரேட்டிங் 3.25 / 5