Casting : Goutham Karthik, Manjuma Mohan, Suri, FEFSI Vijayn, Bose Venkat, Vinothini
Directed By : Muthaiah
Music By : Nivas K.Prasanna
Produced By : Studio Green KE Gnanavel Raja
குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில், கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தேவராட்டம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
சட்டம் படித்த ஹீரோ கெளதம் கார்த்திக், எங்கு தப்பு நடந்தாலும் அதை தட்டி கேட்பதோடு, அடித்து கேட்கும் கோபக்காரராக இருக்கிறார். 6 அக்கா, மாமா என்று பெயரிய குடும்பத்தின் கடைக்குட்டியாக இருக்கும் கெளதம் கார்த்திக், சட்டம் படித்த ஹீரோயின் மஞ்சுமாவை கண்டதும் காதல் கொல்ல, மஞ்சுமாவுக்கும் கெளதம் மீது காதல் மலர்கிறது.
இதற்கிடையே, கெளதம் கார்த்திக் அக்கா மகளை இளைஞர்கள் சிலர் கேலி செய்ய, அதை தட்டி கேட்ட அவரது தோழியை பழிவாங்கும் எண்ணத்தில், பெரிய இடத்து பையன் ஒருவன், சொல்ல முடியாத அளவுக்கு சீரழித்து விடுகிறான். அந்த பெண்ணின் நிலையை அறியும் கெளதம் கார்த்திக், குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்க, அவர்களது பணமும், அதிகாரமும் அதை தடுத்துவிடுகிறது. உடனே ஆக்ரோஷமாகும் கெளதம் கார்த்திக், எடுக்கும் அதிரடியான முடிவால், அவரது குடும்பம் பெரிய பிரச்சினையில் சிக்க, அவர்களை காப்பாற்றுவதற்காக எதிரிகளை கெளதம் கார்த்திக் எப்படி சூரையாடுகிறார் என்பதே ‘தேவராட்டம்’ படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் முத்தையா இதற்கு முன்பு இயக்கிய நான்கு படங்களில் ஹீரோக்களின் அதிரடியுடன், ஹீரோயினின் குடும்ப பின்னணியில் அழகான குட்டி கதை ஒன்றை சொல்லியிருப்பார். அது படத்திற்கு பலமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் அதை இயக்குநர் மிஸ் பண்ணியிருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
கெளதம் கார்த்திக்கை தமிழ் சினிமாவின் ஹீரோ என்றே ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவரை தென் மாவட்ட ஹீரோவாக காட்டியிருக்கும் இயக்குநர் முத்தையாவின் தைரியத்துக்கும், நம்பிக்கைக்கும் கெளதம் கார்த்திக் சார்பில் பெரிய பொக்கே கொடுக்கலாம்.
இயக்குநரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு கெளதம் கார்த்திக்கும் சூறாவளியாக சுழன்றிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளாகட்டும், கோபமாக பேசுவதாகட்டும், நடனமாகட்டும் கதைக்களத்திற்கு ஏற்ற ஹீரோவாக மக்கள் மனதில் கெளதம் நின்றுவிடுகிறார். ஹீரோயின் மஞ்சுமா கொஞ்சமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதுவும் கொடுத்த சம்பளத்திற்காக ஒரு பாட்டு, கொஞ்சம் ரொமான்ஸ், அம்புட்டு தான். மற்றபடி மகராசி படத்திற்கு தேவையே இல்லை.
சூரியின் காமெடி என்று சொல்வதைவிட கெளதம் கார்த்திக்கின் மாம்ஸ்களின் காமெடிகள் சில சிரிக்க வைக்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சாதாரண காட்சியை கூட தனது அதிரடியான பின்னணி இசையின் மூலம் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா தூக்கி நிறுத்துவதை போல, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் தனது கேமராவை சுழலவிட்டு காட்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறார். படத்தொகுப்பாளரின் பணியும் பாராட்டும்படி இருக்கிறது.
‘தேவராட்டம்’ என்ற தலைப்பு ஒரு கலையை குறிக்கிறதே தவிர அது ஜாதியை குறிக்கவில்லை, என்று இயக்குநர் முத்தையா ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். அதுபோல, படத்திலும் ஜாதியை பற்றி பெரிதாக பேசவில்லை. அதே சமயம், ”400 ரூபாய் ஜீன்ஸ், 200 ரூபாய் டீ-சர்ட் போட்டுக்குணு பொண்ணுங்களை மயக்கிறானுங்க” மற்றும் “கண்டதும் காதல் வரலாம். ஆனால் கண்டவன் மேல் தான் காதல் வரக்கூடாது” போன்ற வசனங்கள் பிற சமூகத்தினரை கொஞ்சைப்படுத்துகிறதோ இல்லையோ காதலை கொஞ்சைப்படுத்துவது போல இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பற்றி அழுத்தமாக பேசியிருக்கும் இயக்குநர் முத்தையா, அப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும், என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். அதே சமயம், கூட்டு குடும்பத்தில் வாழ்பவர்கள் தான் நல்ல மனிதர்களாக அதுவும் பெண்களை மதிப்பவர்களாக வாழ முடியும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் முத்தையாவின் படம் என்றால் இப்படி தான் இருக்கும், என்ற நமது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடியே இந்த படம் இருந்தாலும், அவரது படத்தில் சொல்லப்படும் சில கூடுதலான விஷயங்கள் இந்த படத்தில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. ஊரே பார்த்து நடுங்கும் வில்லனால் ஹீரோவுக்கு வரும் பிரச்சினை, அதை தொடர்ந்து ஏற்படும் மோதல், என்று ரெகுலரான திரைக்கதை என்றாலும், அதை அழகியலோடும், கலாச்சாரத்தோடும் சொல்லும் இயக்குநர் முத்தையா, இந்த திரைக்கதையை எழுதும் போது, யாருக்காகவோ, எதற்காகவோ கட்டுப்பட்டது போல, அடக்கி வாசித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதத்தில், சட்டென்று படம் முடிந்துவிடுகிறது. அதிலும், ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இடையிலான மோதலில் அழுத்தமும், ஆக்ரோஷமும் இல்லாமல் படத்தில் வரும் ஒரு ஆக்ஷன் காட்சியை போல் முடித்து வைத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.
இருந்தாலும், பெண்களின் பாதுகாப்பு, அதிலும் பெண்கள் விஷயத்தில் குற்றம் செய்பவர்கள் எப்படி உருவாகிறார்கள், என்பதை மையமாக வைத்துக் கொண்டு குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கிறது.
மொத்தத்தில், அதிரடியான ஆட்டமாகவே இந்த ‘தேவராட்டம்’ இருக்கிறது
ரேட்டிங் 3/5