Latest News :

’7’ (செவன்) விமர்சனம்

2233791dea28a52d7d291b4a78ece8ec.jpg

Casting : Havish, Rahman, Nandita, Aditi Arya, Anisha, Regina

Directed By : Nizar Safi

Music By : Nizar Safi

Produced By : Kiran Studios Ramesh Varma

 

ரமேஷ் வர்மா கதை, தயாரிப்பில், நிசார் சபியின் இயக்கத்தில் புதுமுகம் ஹவிஷ், ரெஜினா, நந்திதா, ஆதித்தி ஆர்யா, அனிஷா ஆகியோர் நடிப்பில் ரொமாண்டிக் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் ’7’ (செவன்) எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஹீரோ ஹவிஷை காணவில்லை என்று போலீஸில் புகார் அளிக்கும் நந்திதா, அவர் தனது கணவர் என்றும், தாங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம் என்றும் கூறுகிறார். பிறகு அதே புகைப்படத்துடன், தனது கணவர் காணவில்லை என்று போலீசில் ஆதித்தி ஆர்யாவும் புகார் அளிக்க, அவரும் நந்திதாவின் கணவரின் புகைப்படத்தைக் காட்டி தனது கணவர் என்று சொல்வதோடு, அவர் சொல்லிய கதையையே சொல்கிறார். இதனால் குழப்படையும் போலீஸ் அதிகாரி ரஹ்மானிடம் மூன்றாவதாக ஒரு பெண்ணும் ஹேவிஸ் தனது கணவர் என்று கூறி மிஸ்ஸிங் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்.

 

பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஹீரோ ஹவிஷை பிடிக்க போலீசார் தீவிரம் காட்ட, அப்போது ஒரு வயதானவர், அவரது பெயர் சுந்தரமூர்த்தி என்றும், அவர் தனது நண்பர் என்று கூறுவதோடு, அவர் இறந்து விட்டதாகவும் கூறுகிறார். இப்படி கூறிவிட்டு செல்லும் அந்த பெரியவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

 

இப்படி ஹவிஷ் காணாமல் போன வழக்கை சுற்றி பல மர்மமான விஷயங்கள் நிகழ, இந்த மர்மங்களின் பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

Sevan Review

 

பெண்களை திருமணம் செய்து ஏமாற்றும் ஹீரோ, எதற்காக இப்படி செய்கிறார், என்ற எதிர்ப்பார்ப்போடு பயணிக்கும் திரைக்கதையில், அனைவரும் எதிர்ப்பார்த்த பிளாஷ் பேக் ஒன்று இருந்தாலும், அதில் சொல்லப்பட்ட கதை, யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, அதிலும் பல ட்விஸ்ட்டுகளை வைத்து திரைக்கதையை படு சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்கள் கதையாசிரியர் ரமேஷ் வர்மாவும், இயக்குநர் நிசார் சபியும்.

 

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் ஹவிஸ், கார்த்திக் மற்றும் சுந்தரமூர்த்தி என்று இரண்டு விதமான கதாபாத்திரங்களில் தனது வேலையை சரியாக செய்து கவர்கிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் ரெஜினாவுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார். இதுவரை பார்த்திராத ஒரு ரெஜினாவை திரையில் பார்க்கும் போது சற்று பயமாகவும் இருக்கிறது. காதலுக்காக அவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதை தனது நடிப்பு மூலம் சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்.

 

Actress Regina in Sevan

 

நந்திதா, ஆதித்தி ஆர்யா, அனிஷா மற்றும் அந்த வயதான பெண்மணி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

போலீஸ் அதிகாரியாக வரும் ரஹ்மான் ஸ்டைலிஷான போலீஸாக இருந்தாலும், எப்போது பார்த்தாலும் மது குடித்தபடியே இருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அதிலும் நீதிமன்ற வளாகத்தில் கூட மருந்து அருந்துவது ரொம்பவே ஓவராக இருக்கிறது.

 

Rahman in Sevan

 

பழிவாங்கும் கதை தான் என்றாலும், அதற்கு இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதையும், திருப்புமுனைகளும் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்படுவதோடு தொடங்கும் படம், ஆரம்பத்திலேயே ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

பிறகு வரும் நந்திதாவின் காதல் காட்சிகள் சில ரசிகர்களை சீட்டில் சாய்ந்தபடி உட்கார வைத்தாலும், ரஹ்மானின் விசாரணை தொடங்கியதுமே வேகம் எடுக்கும் படம், அதன் பிறகு வரும் அடுக்கடுக்கான ட்விஸ்ட்டுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்துக்கொள்கிறது.

 

படத்தை இயக்குவதோடு ஒளிப்பதிவு செய்து இசையும் அமைத்திருக்கும் நிசார் சபி, பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுதான் படத்திற்கும் தேவையாகவும் இருக்கிறது. ஒளிப்பதிவும் கதையுடனே பயணித்திருப்பதோடு, பீரியட் கால எப்பிசோட்டை எளிமையாகவும், நேர்த்தியாக காட்டியிருக்கிறது.

 

க்ளைமாக்ஸ் மட்டும் சினிமாத்தனமாக இருந்தாலும், காதல் ஒருவரை எந்த அளவுக்கு பித்து பிடிக்க வைக்கும் என்பதையும், அதிலும் பெண்கள் காதல் என்பது எந்த அளவுக்கு வெறித்தனமானது என்பதையும் இயக்குநர் ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

ரொமாண்டிக் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற ஜானருக்கு ஏற்ற வகையில், ரெஜினா கதாபாத்திரம் மூலம் ரொமான்ஸையும், சஸ்பென்ஸ் திரில்லரையும் ரசிக்கும்படியாக இயக்குநர் கொடுத்திருக்கிறார். 

 

Sevan Movie Review

 

மொத்தத்தில், இந்த 7 (செவன்) ஷாக்கடித்தது போன்ற உணர்வை கொடுக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery