Casting : Jyothika, Hareesh Peradai, Poornima Bhagyaraj, Sathyan, Kavitha Bharathi
Directed By : SY Gowthamraj
Music By : Sean Rolden
Produced By : Dream Warrior Pictures - SR Prakash Babu, SR Prabhu
ஜோதிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராட்சசி’ எப்படி என்று பார்ப்போம்.
அரசு பள்ளிகளின் அவல நிலையையும், பள்ளி கல்வித் துறையின் அவல நிலையையும் சொல்வது தான் ராட்சசியின் கதை.
சீரழிந்து கிடக்கும் அரசு பள்ளி ஒன்றையும், அதில் படிக்கும் மாணவர்களையும் அழிவில் இருந்து மீட்க அப்பள்ளிக்கு புதிதாக வரும் தலைமை ஆசிரியரான ஜோதிகா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அதன் மூலம் அவருக்கு சில எதிர்ப்புகள் வர, அவற்றை எப்படி சமாளித்து, சாபக்கேடான தனது பள்ளியை சாதனைப் பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ‘ராட்சசி’ யின் கதை.
தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் ஜோதிகா, நடிப்பில் ராட்சசியாக மட்டும் இல்லாமல் தேவதையாகவும் நம்மை கவர்கிறார். மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்தாமல், சக ஆசிரியர்கள், ஜாதி கட்சி தலைவர்கள் என அனைவரிடமும் மூன்று கேள்விகளை கேட்டு அதிர வைப்பவர், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முழு படமும் ஜோதிகாவை சுற்றியே நகர்வதோடு, படம் முழுவதுமே அவர் மட்டுமே பர்பாமன்ஸ் செய்வதால் அவரை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. வில்லனாக நடித்திருக்கும் ஹரிஸ் பெரடை வழக்கமான வில்லனாக பயணித்தாலும், ஒரு காட்சியில் “நான் பள்ளிக்கூடம் நடத்துகிறேனா இல்ல, கொள்ளக்கூட்டம் நடத்துகிறேனா, பள்ளி குழந்தைகளை கொல்ல சொல்றே” என்ற வசனத்தின் மூலம் இடம் பிடித்துவிடுகிறார்.
ஆசிரியர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த நடிகர்கள் மட்டும் இன்றி, அவர்களது பர்பாமன்ஸும் ஏற்கனவே பார்த்தது போலவே இருந்தாலும், சில நிமிடங்கள் மட்டுமே வரும் ‘அண்ணாதுரை’ செந்தில் நம்மை கவனிக்க வைக்கிறார். பள்ளிகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளில் நடக்கும் முறைகேடுகளை காட்டும் அந்த காட்சியில் முறைகேடு செய்யும் அதிகாரியாக நடித்திருக்கும் செந்தில்குமரனின் அடாவடியான நடிப்பு, அவரை உண்மையான அரசு அதிகாரியாகவே காட்டுகிறது.
உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் சத்யனின் சில காமெடிக் காட்சிகள் சிரிக்க வைப்பது போல, ஆட்டோ ஒட்டுநராக நடித்திருக்கும் இயக்குநர் மூர்த்தியும் தனது வசனம் மூலம் கவனிக்க வைக்கிறார்.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு மற்றும் சீன் ரோல்டனின் இசை இரண்டுமே கதையுடனே பயணிக்கிறது. ஜோதிகாவை சண்டை போட வைத்த சண்டைப்பயிற்சியாளர் சுகேஷின் பஜ்ச் திரையரங்கில் அப்ளாஷ் பெறுகிறது.
படத்தின் கதை என்னவென்று ஆரம்பத்திலே தெரிந்துவிடுவதோடு, படம் எப்படி முடியும் என்பதை ரசிகர்கள் முன் கூட்டியே யூகித்துவிடுவதால் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் திரைக்கதையை இயக்குநர் கெளதம்ராஜ் மற்றும் பாரதி தம்பி ஆகியோரது வசனம் தான் சற்று காப்பாற்றுகிறது.
சம்பளம் போதவில்லை, வசதி போதவில்லை என்று போராடும் அரசு பள்ளி ஆசிரியர்கள், என்றாவது மாணவர்களுக்கான வசதிக்காகவும், அவர்களது கல்வி முறைக்காவும் போரடி இருக்கிறார்களா? என்ற கேள்வி மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களின் தலையில் குட்டு வைத்திருக்கும் இயக்குநர் கெளதம்ராஜ், ”சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது கூட ஊழல் தான்” உள்ளிட்ட அதிரடி வசனம் மூலம் கை தட்டல் பெறுகிறார்.
இதுபோன்ற ஒரு படம் ஏற்கனவே வந்திருந்தாலும், இப்படி ஒரு படம் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், அதை மக்களும் கொண்டாடலாம், என்று சொல்லும் அளவுக்கு படத்தில் நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.
நல்ல விஷயங்களை சொன்னாலும், அதை சினிமாத்தனமாக சொல்லியிருப்பது தான் இப்படத்தின் மிகப்பெரிய குறை. அதிலும், ஜோதிகாவுக்காகவே வடிவமைத்தது போல சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதும் படத்துடன் ஒட்டாமல் போகிறது. இருப்பினும், இந்த குறையை படத்தின் வசனங்கள் போக்கிவிட்டு, நம்மை “ஆஹா...” என்று சொல்ல வைத்துவிடுகிறது.
மொத்தத்தில், குறைகள் சில இருந்தாலும், இந்த ‘ராட்சசி’ தேவதையாக கொண்டாடப்பட வேண்டியவர்.
ரேட்டிங் 3/5