Casting : உதயநிதி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி
Directed By : தளபதி பிரபு
Music By : டி.இமான்
Produced By : தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடேட்
முதல் முறையாக கிராமத்து கதைக்களத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’.
சரியாக படிக்காமல், வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றினாலும், தான் பிறந்த ஊருக்கு எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று இருக்கும் உதயநிதி போவது குறுக்கு வழியாக இருந்தாலும், செய்வது என்னவோ நல்லதாக இருப்பதால், இளசுகளுக்கு பிடித்தவராக இருக்கிறார்.அதே சமயம் ஊர் பெருசுகளுக்கு வில்லனாகவே தெரிகிறார்.
பாராட்டு புகழுக்கு ஏங்குபவரான பார்த்திபன், உதயநிதியின் ஊரில் உள்ள கோவில் ஒன்றில் தனக்கு நேர்ந்த அவமானத்தால், அந்த ஊரையே பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லவர் என்ற போர்வையில் பல நாச வேலைகளை செய்து வருகிறார். அதனால் அந்த ஊருக்கு அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய எதுவும் கிடைக்காததால், அந்த ஊர் மக்களும் அங்கிருந்து வேறு ஊருக்கு சென்றுக் கொண்டிருக்க, பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை திருமணம் செய்துக் கொண்டால், பார்த்தின் மூலமாகவே தனது ஊருக்கு நல்லது நடக்கும் என்று திட்டமிடும் உதயநிதி நிவேதா பெத்துராஜை காதலிக்க, அவரும் உதயநிதியின் காதல் வலையில் விழுந்துவிடுகிறார்.
இதற்கிடையே ஒரு விஷயத்தில் பார்த்திபனுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு உதயநிதிக்கு கிடைத்துவிட, அதற்கு மேல் உதயநிதியை வளரவிடக்கூடாது என்று திட்டமிடும் பார்த்திபன் நல்லது செய்வது போல உதயநிதியை ஓரம் கட்ட திட்டம் போட, உதயநிதியோ பார்த்திபனுக்கு போட்டியாக வளர்ந்துக் கொண்டே போகிறார். இதற்கிடையே உதயநிதியின் காதல் விவகாரத்தை தெரிந்துக் கொள்ளும் பார்த்திபன், தனது நரி தனத்தால் அவரது காதலில் கல்லைப் போடுவதுடன், உதயநிதியின் கிராமமே இருக்க கூடாது என்று திட்டம் ஒன்றை போட, அதை அறிந்துக் கொள்ளும் உதயநிதி, பார்த்திபனின் திட்டத்தை எப்படி முறியடித்து தனது கிராமத்தை காப்பாற்றுவதுடன், பார்த்திபன் கலைத்த தனது காதல் கோட்டையை மீண்டும் எப்படி கட்டிமுடிக்கிறார் என்பதே ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் கதை.
காதல் அதற்கு ஐடியா கொடுக்கும் காமெடி நண்பர், என்று அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருந்த உதயநிதி, முதல் முறையாக மாறுபட்ட களத்தில் வெற்றிகரமாக பயணித்திருக்கிறார். தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவரும் உதயநிதி அரசியல் வசனங்களைக் கூட அசால்டாக பேசி அப்ளாஸ் பெருகிறார். நகரத்து பின்னணியில் தொடர்ந்து நடித்து வந்தவர் கிராமத்து கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்துகிறார்.
’ஒரு நாள் கூத்து’ நிவேதா பெத்துராஜா இவர், என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அழகையும், நடிப்பையும் கொஞ்சம் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். கமர்ஷியல் ஹீரோயின்களுக்கான அத்தனை அமசங்களும் நிறைந்தவருக்கு, இப்படத்தின் மூலம் வாய்ப்புகளும் நிறைய கிடைக்கும்.
படத்தின் வில்லனான பார்த்திபன், தான் மட்டும் பேசாமல் உதயநிதி, சூரி என்று அனைத்து கதாபாத்திரங்களையும் பேச விட்டு தனது கதாபாத்திரத்தை வலுவாக காட்டியுள்ளார். ஊத்துக்காட்டான் என்ற கதாபாத்திரத்தில் வன்முறை இல்லாமல் அவர் செய்யும் வில்லத்தனம் பல இடங்களில் அவரை ஹீரோவாக காட்டுகிறது.
டி.இமானின் இசையில் ரெகுலர் பாடல்கள் தான் என்றாலும் படத்திற்கு பலம் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக ஹீரோயினை அழகாக காட்ட மனுஷன் ரொம்பவே மெனக்கெட்டுருக்கிறார்.
காதல் பிளஸ் காமெடி என்ற கான்சப்ட்டில் மட்டும் வெற்றி பெற்று வந்த உதயநிதி, தன்னால் ஹீரோயிசத்தை காட்டியும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இரண்டு ஊர்களுக்கு இடையே பிரச்சினை, அதில் சிக்கி சிதைந்து போகும் காதலையும் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஒருவருக்கு ஒரு ஊரால் ஏற்பட்ட அவமானத்தால் அந்த ஊரையே அவர் பழிவாங்க நினைக்க, அதை காப்பாற்றும் ஹீரோ, அவரது காதல் என்று திரைக்கதையையே புதுஷாக அமைத்திருக்கிறார் இயக்குநர் தளபதி பிரபு.
உதயநிதி - பார்த்திபன் இருவருக்கும் இடையே ஏற்படும் நீயா? நானா? போட்டி ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் ஒரு விஷயத்தில் உதயநிதி வெற்றி பெற்றுவிட்ட பிறகு, நமட்டு சிரிப்புடன் தனது அடுத்த அஸ்திரத்தை பார்த்திபன் ஏவும் போது, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுகிறது. அறுவா வெட்டு, அடிதடி என்று ஆக்ரோஷமான வில்லத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு, தனது கண் கண்ணாடியாலேயே தனது எதிராளிகளை கும்மாக்குத்து வாங்க வைக்கும் பார்த்திபனின் வில்லனிஷம் படத்தின் ஹைலைட் என்றால், அப்படிபட்ட வில்லனை தானாகவே விக்க வைக்கும் உதயநிதியின் பதிலடி தாக்குதல்கள் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.
உதயநிதி - பார்த்திபன் ஜோடியின் கெமிஸ்ட்ரி பக்காவாக பயணித்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த, சூரியின் காமெடிகள் கூடுதல் போனஸாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பர்பக்ட் எண்டர்டெயின்மெண்ட் படமாக உள்ளது.
ஜெ.சுகுமார்