Casting : Vikranth, Arthana Binu, Pasupathi, Suri, Kishore, Ravi Mariya
Directed By : Selva Sekaran
Music By : V. Selvaganesh
Produced By : Poongavanam, Anandh
சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் கதாபாத்திரங்களுடனும், கூடுதலான ஒரு கதையுடனும் வெளியாகியிருக்கும் ‘வெண்ணிலா கபடி குழு 2’ எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.
பீரியட் படமாக இருந்தாலும், எந்த காலக்கட்டத்தில் கதை நகர்கிறது, என்பதை இயக்குநர் படத்தில் குறிப்பிடவில்லை. அதனால், செல்போன் இல்லாத மற்றும் ஆடியோ கேசட் புழக்கத்தில் இருந்த காலகட்டம் என்று நாம் எடுத்துக்கொள்வோம்.
மியூசிக்கல் கடை நடத்தி வரும் விக்ராந்த் கல்லூரி மாணவி அர்த்தனா பினு மீது கண்டதும் காதல் கொள்கிறார். அவரும் விக்ராந்தை காதலிக்க, காதலுக்கு ஹீரோயின் அப்பாவான ரவி மரியா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையே, கபடி விளையாட்டின் மீது தீவிர ரசிகராக இருக்கும் விக்ராந்தின் அப்பா பசுபதி, கபடி போட்டி எங்கு நடந்தாலும் எதை பற்றியும் யோசிக்காமல் அங்கு சென்றுவிடுவார். இதனால், அவரது அரசு வேலைக்கு ஆபத்து வர, அப்பாவின் பொருப்பற்ற தனத்தால் கோபப்படும் விக்ராந்த், பசுபதியை திட்டிவிடுகிறார்.
அப்போது அவரது அம்மா, பிளாஷ் பேக் ஒன்றை சொல்ல, அதன் மூலம், பசுபதி வெண்ணிலா கபடி குழுவின் நட்சத்திர வீரர் என்றும், தன்னை காப்பாற்றுவதற்காகவே கபடி விளையாடுவதை விட்டதோடு, சொந்த ஊரை விட்டு வெளியேறியதையும், விக்ராந்த் அறிந்துக் கொள்கிறார்.
இதற்கிடையே, அர்த்தனாவின் அப்பா ரவி மரியா, விக்ராந்தை கொலை செய்ய அடியாட்களை அனுப்ப, அவர்களிடம் இருந்து விக்ராந்தை காப்பாற்றும் பசுபதி, விக்ராந்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், விக்ராந்தோ, தனது அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக, அப்பாவின் சொந்த ஊருக்கு சென்று, அவர் விளையாடிய வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாடி சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு போகாமல், பசுபதியின் ஊருக்கு செல்ல, அவர் கபடியில் சாதித்தாரா, அவரது காதல் என்ன ஆனது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
வெண்ணிலா கபடி குழு படத்தின் கருவான கபடி போட்டியை ஒட்டி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதில் இருந்த பிரஸ்னஸும், கதாபாத்திரங்களில் இருந்த புதுமையும் இதில் இல்லை என்றாலும், பசுபதியின் போஷன் திரைக்கதையை சுவாரஸ்யமாக்குகிறது.
கபடி வீரராக களம் இறங்கியிருக்கும் விக்ராந்த், கபடி மற்றும் காதல் இரண்டிலுமே சுமாரான பர்பாமன்ஸை தான் கொடுத்திருக்கிறார். ஹீரோவாக தன்னை காட்டிக்கொள்ளாமல், கதாபாத்திரமாக காட்டிக்கொண்டவருக்கு திறமையை காட்ட இந்த படம் போதுமானதாக இல்லை.
ஹீரோயின் அர்த்தனாவுக்கு ஹீரோவை கண்டதும் காதல் கொள்ளும் சாதாரண கமர்ஷியல் ஹீரோயின் வேடம் தான். சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு அணியான சூரி, அப்பு குட்டி, நித்திஷ், வைரவன், ரமேஷ் பாண்டியன், மாயி சுந்தர் ஆகிய அனைவரும் படத்தில் இருந்தாலும், காமெடி பெரிதாக எடுபடவில்லை. அதே சமயம், சூரியின் பரோட்டா காமெடியை, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து மீண்டும் களம் இறக்கியிருக்கிறார்கள். பரோட்டா சாப்பிட வெளி ஓட்டலுக்கு போனால் செலவாகிறது, என்று சொந்தமாக ஓட்டல் வைத்து பரோட்டா சாப்பிடும் சூரிக்கு, இந்த முறையும் பரோட்டா கைகொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஹீரோயினின் அப்பாவாக நடித்திருக்கும் ரவி மரியா, எப்போது காமெடியாக நடிக்கிறார், எப்போது சீரியஸாக நடிக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் சீரியஸாக நடிக்கும் பல இடங்களில் ரசிகர்களுக்கு சிரிப்பு தான் வருகிறது. விக்ராந்தின் அப்பாவாக நடித்திருக்கும் பசுபதி, அப்பா வேலையை தப்பில்லாமல் செய்திருக்கிறார்.
விக்ராந்த் மற்றும் பசுபதியின் அப்பா - மகன் காம்பினேஷனில் இருக்கும் கெமிஸ்ட்ரி, கபடிக்கும் படத்தின் திரைக்கதைக்கும் இல்லை. ஆனால், அந்த குறையை சரி செய்யும் விதத்தில் பசுபதியின் பிளாஷ் பேக்கும், சூரி மற்று அவரது குழுவின் காமெடி காட்சிகளும் அமைந்திருக்கிறது.
விறுவிறுப்பான விளையாட்டாக இருக்கும் கபடியை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை இயக்குநர் செல்வ சேகரன் ரொம்ப மெதுவாக நகர்த்தினாலும், விக்ராந்த் வெண்ணிலா கபடி குழுவில் இணைந்த பிறகு படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பிறகு காதல், அதை தொடர்ந்து வரும் பிரச்சினை, என்று வழக்கமான காட்சிகள் நீள்வதால் ரசிகர்கள் சற்று சோர்வடைந்துவிடுகிறார்கள்.
இறுதியில், விக்ராந்த் தனது அப்பாவின் கனவை நிறைவேற்றுவாரா இல்லையா, என்பதில் சில பல ட்விஸ்ட்டுகளை வைத்து ஆடியன்ஸ் பல்ஸை எகிற வைக்கும் முயற்சியோடு க்ளைமாக்ஸை நகர்த்தும் இயக்குநர், முடிவில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே சோகமாக படத்தை முடித்து, நம்மை பெருமூச்சி விட வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘வெண்ணிலா கபடி குழு 2’ வெற்றி பெற்றாலும், அணியின் வீரியம் என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது.
ரேட்டிங் 3/5