Casting : Anifa, Bindhu, RV Thambi, Jeyakumar, Appu Kutty
Directed By : N.B.Ishmail
Music By : Gons
Produced By : T.Jayakumar, Ayisha, Akmal
அறிமுக நடிகர்கள் அனீபா, விஷ்வா, பிந்து, ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார் ஆகியோரது நடிப்பில், என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில், டி.ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல், அப்பு குட்டி, கராத்தே ராஜா ஆகியோரது தயாரிப்பில், விவசாயத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் ‘ஐ.ஆர் 8’ எப்படி என்று பார்ப்போம்.
நாகரீகம் என்னதான் வளர்ச்சியடைந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி பெருகினாலும், விவசாயமும், விவசாயிகளும் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை என்ற நிலை இருந்தாலும், விவசாயமும், அதையே நம்பியிருக்கும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தான் படம் பேசுகிறது.
இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஆர்.வி.தம்பி, தனக்கு பிறகு தனது மகன்கள் விவசாயத்தை பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினாலும், மகன்களோ விவசாயம் செய்வதை விட்டுவிட்டு நிலத்தை விற்க வேண்டும், என்பதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கிடையே, பிள்ளைகளின் படிப்புக்காக வாங்கிய கடனின் வட்டி குட்டி போட்டு பல லட்சங்களாக நிற்க, மறுபுறம் தொழிற்சாலை கட்டுவதற்காக அந்த நிலைத்தை வில்லன் கோஷ்ட்டி கைப்பற்ற நினைக்கிறது. இன்னொரு புறம் கடன் கொடுத்த வங்கி, என்று திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள் வந்தாலும், விவாசய நிலத்தை விற்க கூடாது, என்பதில் உறுதியாக இருக்கும் வயதான விவசாயியான ஆர்.வி.தம்பியின் அதிரடியான முடிவால், ஏற்படும் மாற்றங்களும், அதனால் அவர் நினைத்தது நடந்ததா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் தரத்தை பார்க்காமல், கருத்தை மட்டுமே பார்த்தால் இப்படம் மிகப்பெரிய படம் தான். காரணம், பெரிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சொல்ல நினைத்து கூட பார்க்காத விவசாயத்தைப் பற்றி இவர்கள் சொல்லியிருப்பது.
ஹீரோவாக நடித்த அனீபா, ஹீரோயினாக நடித்த ரோஜா, வில்லனாக நடித்த ஜெயக்குமார், விவசாயியாக நடித்த ஆர்.வி.தம்பி என அனைத்து நட்சத்திரங்களும் புது முகங்களாக இருந்தாலும், கதைக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இசையமைப்பாளர் கோன்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், கதைக்கு ஏற்றவாரும் பயணித்திருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க நினைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் டி.ஜெயக்குமார், ஆயிஷா, அக்மல் ஆகியோ எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல், மக்களுக்கு நல்ல மெசஜ் சொல்ல நினைத்து, இப்படி ஒரு படத்தை தயாரித்திருக்கும் அவர்களது முயற்சியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கும் இஸ்மாயில், காட்சிகளிலும், திரைக்கதையிலும் பிரம்மாண்டத்தையும், விறுவிறுப்பையும் காட்டவில்லை என்றாலும், படத்தின் மூலம் சொல்லியிருக்கும் மெசஜ் மூலம் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார்.
தொழில்நுட்பம், நட்சத்திரங்களின் நடிப்பு, காட்சிகள் என்று படத்தில் சில குறைகள் இருந்தாலும், அவை அனைத்தும் பட்ஜெட் என்ற பொருளாதார ரீதியிலான குறைபாடாகவே தெரிகிறது. அவற்றை தவிர்த்துவிட்டு இப்படத்தை பார்த்தால், நிச்சயம் படத்தையும், இயக்குநர் இஸ்மாயிலையும் பாராட்ட தவற மாட்டார்கள்.
மொத்தத்தில், இந்த ‘ஐ.ஆர் 8’ படத்திற்கு குட் போடலாம்.
ரேட்டிங் 3/5