Latest News :

’மெய்’ விமர்சனம்

deffb7e979bd00b2c32ddae417c8f0bc.jpg

Casting : Nicky Sundaram, Aishwarya Rajesh, Kishore

Directed By : SA Baskaran

Music By : Prithvi Kumar

Produced By : Sundaram Production

 

செந்தா முருகேசன் கதை எழுத, எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியிருக்கும் படம் ‘மெய்’. அறிமுக ஹீரோ நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில், சுந்தரம் புரொடக்‌ஷன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம், எப்படி என்று பார்ப்போம்.

 

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வரும் டாக்டரான ஹீரோ நிக்கி சுந்தரம், தான் ஒரு டாக்டர் என்பதை மறைத்துவிட்டு, மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். மெடிக்கல் ரெப்பான ஐஸ்வர்யா ராஜேஷும், நிக்கி சுந்தரமும் நட்பாக பழகுகிறார்கள். இதற்கிடையே, நிக்கியுடன் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் வாலிபர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட, அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். மறுமுனையில் மர்மமான முறையில் பலர் காணாமல் போகிறார்கள். அவர்கள் குறித்து போலீஸ் அதிகாரி கிஷோர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த வாலிபரின் மரணத்திற்கு நிக்கி சுந்தரம் தான் காரணம், என்று மருத்துவமனை கூறுகிறது. அதனால் நிக்கியை போலீஸ் தேட, மருத்துவமனையில் நடக்கும் மர்மங்கள் குறித்து கண்டறிய களம் இறங்கும் நிக்கி, காணாமல் போகிறவர்களுக்கும், தனியார் மருத்துவமனையின் மர்மங்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது என்ன தொடர்பு, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையோடு, விறுவிறுப்பான காட்சிகளோடும் சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

 

ஹீரோ டாக்டர், ஹீரோயின் மெடிக்கல் ரெப், மருத்துவமனை மர்மம், ஆள் கடத்தல், ஆகிய இந்த நான்கும், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பதை படம் ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே நமக்கு தெரியப்படுத்தி விடுகிறது. இருப்பினும், அதை எப்படி சொல்லப் போகிறார்கள், என்ற எதிர்ப்பார்ப்பையும் திரைக்கதை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது.

 

கதையில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ நிக்கி சுந்தரம் அமெரிக்க ரிட்டர்ன் தான் (டாக்டர் இல்லை). ஆள் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகர் போல இருந்தாலும், தமிழர் என்பதால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்பதால் அவர் நடிப்பை விமர்சிக்காமல், அவரது சினிமா ஆர்வத்தை பாராட்டாலாம். முறையான நடிப்பு பயிற்சி பெற்று, தனக்கு எந்த கதாபாத்திரம் பொருந்துமோ அதை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் நல்ல நடிகராக வருவார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கதையில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தாலும், அவரைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக ஒன்றுமில்லை. ஏன், காதல், டூயட் போன்ற ரெகுலர் காட்சிகள் கூட இல்லை.

 

Aishwarya Rajesh and Nicky Sundaram in Mei

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர், தனக்கே உரிய பாணியில் தனது வேலையை கச்சிதமாக செய்துவிட்டு போகிறார். வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் வி.என்.மோகனும், எடிட்டர் பிரீத்தி மோகனும் ஹீரோவின் பலவீனம் எந்த இடத்திலும் தெரிந்துவிட கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்திருக்கிறார்கள். இதனால், பார்த்து பார்த்து வேலை செய்திருக்கும் அவர்களின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இசையமைப்பாளர் ப்ரித்வி குமார் ஓரவு தான் கைகொடுத்திருக்கிறார்.

 

மெடிக்கல் கிரைம் சம்மந்தமான கதை என்பது ஆரம்பத்திலேயே படம் பார்ப்பவர்கள் யூகித்துவிட்டாலும், அது என்ன க்ரைம், யார் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், என்பதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் சொல்லியிருந்தாலும், புதிதாக சொல்லவில்லை.

 

ஏற்கனவே இதுபோன்ற மெடிக்கல் க்ரைம் படங்கள் பல தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது. அவற்றில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி சொல்ல முயற்சிக்காமல் பழைய ரூட்டிலேயே இயக்குநர் பயணித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். இருப்பினும், கிஷோர் கதாபாத்திரத்தில் வைத்திருந்த ட்விஸ்ட், நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்க, மீண்டும் பழைய ரூட்டில் பயணித்து, இறுதியில் எங்கு நிற்கும், என்று நாம் யூகிக்கிறோமோ அதே இடத்திலேயே வண்டி நின்றுவிடுகிறது.

 

போலி மருத்துவர்கள் பற்றியும், அரசு மருத்துவமனையை தவிர்த்துவிட்டு, தனியார் மருத்துவமனைக்கு செல்லும் மக்களையும் இயக்குநர் விலாசியிருக்கிறார். அதிலும் இலவச மருத்துவ பரிசோதை முகாம்களின் பின்னணியில் இருக்கும் மோசடிகள் குறித்து சொல்லி, கதையாசிரியர் செந்தா முருகேசன் பீதியை கிளப்புகிறார்.

 

புதுஷா சொல்ல எந்த முயற்சியையும் இயக்குநர் பாஸ்கரன், மேற்கொள்ளவில்லை என்றாலும், தனக்கு கிடைத்த கதையையும், அதற்கான ஹீரோவையும் மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக செயல்பட்டிருக்கிறார். அந்த வகையில், படம் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும், பரவாயில்லை என்று சொல்லும்படி, இயக்குநர் பணியாற்றியிருக்கிறார்.

 

மொத்தத்தில், இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தால் இந்த ‘மெய்’ நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery