Casting : Prabhas, Shradha Kapoor, Jackie Shroff, Arun Vijay
Directed By : Sujith Reddy
Music By : Ghibran
Produced By : Vamsi Krishna Reddy, Pramod Uppalapati, Bhushan Kumar
‘பாகுபலி’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முக்கியமான ஹீரோவாக உயர்ந்த பிரபாஸ், அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக தனது அடுத்தப் படத்தையும் பிரம்மாண்டமாக, அனைத்து மாநிலத்தவருக்கும் ஏற்ற படமாக கொடுக்கும் முயற்சியாக வெளியாகியிருக்கும் ‘சாஹோ’ அவரை மீண்டும் சாதிக்க வைத்ததா அல்லது சறுக்க வைத்ததா, என்று பார்ப்போம்.
ஜாக்கி ஷெராப் உலகின் மிகப்பெரிய டான், அவர் இந்தியாவுக்குள் நுழைய நினைக்கும் போது சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தி கொன்றுவிட, அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பல லட்ச கோடிப் பணமும் எரிந்துவிடுகிறது. ஆனால், அந்த பணம் அழியவில்லை, இன்னும் இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கும் ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய், அப்பணத்தை எடுக்க வேண்டும் என்றால், பிளாக்ஸ் பாக்ஸை கைப்பற்றியாக வேண்டும், என்று கூறுகிறார்.
உலக டான்கள் அனைவரும் அந்த பிளாக் பாக்ஸை எடுக்க முயற்சிப்பதோடு, ஜாக்கி ஷெராப்பின் இடத்தை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்க, அந்த நேரத்தில் எண்ட்ரியாகும் பிரபாஷ், தனது அதிரடியால் பிளாக்ஸ் பாக்ஸை கைப்பற்றுகிறார். அதன் பிறகு நடக்கும் ட்விஸ்ட்டுகளும், பிரபாஸ் யார்? என்பதும் தான், படத்தின் மீதிக்கதை.
350 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படம் என்று படக்குழுவினர் அடிக்கடி கூறினார்கள். ஆனால், அந்த 350 கோடி ரூபாய் பணத்தின் பெரும்பகுதியில் க்ரீன் மேட் வாங்கியிருக்கிறார்கள் என்பது படத்தை பார்த்த போது தான் தெரிகிறது.
‘பாகுபலி’ என்ற படத்தின் மூலம் பேன் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த பிரபாஸ், தனது அடுத்தப் படத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்திய படம் போலவே இல்லை. அதிலும், பிரபாஸுக்கும், ஹீரோயின் ஷரத்த கபூருக்குமான கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை.
அருண் விஜய், ஜாக்கி ஷெராப் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் கதையிலும், நம் மனதிலும் ஒட்டாமல் போகிறார்கள்.
முதல் பாதி தொடங்கியதும், எப்படா முடியும், என்று நம்மை நினைக்க செய்துவிடுகிறது. பிறகு ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் சற்று படத்தினுள் நம்மை இழுத்தாலும், அவற்றில் இருக்கும் லாஜிக் மீறல்கள் நம்மை எரிச்சலடைய செய்கிறது. பேன் இந்தியா ஹீரோ என்று பெயர் எடுத்த பிரபாஸை மீண்டும் அக்மார்க் தெலுங்கு ஹீரோவாக்கும் அளவுக்கு இயக்குநர் ரசிகர்களின் காதில் வாழைப்பூவையே வைத்துவிடுகிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசையும், மதியின் ஒளிப்பதிவும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் தான் பலம் என்றாலும், அவை ஓவர் டோஸாக இருப்பது ஒரு கட்டத்தில் எரிச்சலடைய செய்துவிடுகிறது.
ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை இயக்க நினைத்திருக்கும் இயக்குநர் சுஜித் ரெட்டி, திரைக்கதை என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டு, இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘சாஹோ’ படத்தில் பலபேரை மட்டும் சாகடிக்காமல் படம் பார்ப்பவர்களையும் சாகடிக்கிறது.
ரேட்டிங் 2/5