Casting : Sri Priyanka, Seeman, Harish, Muthuraman, E. Ramdoss
Directed By : Suresh Kamatchi
Music By : Ishaan Dev
Produced By : V House Productions
முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் ஒரு இடத்திற்கு வரும் போது சாலைகள் இருபுறமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்களை நாம் சாதாரணமாக கடந்து போவதுண்டு. ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அழுத்தமாக பேசியிருப்பதோடு, காவல்துறை மற்றும் அரசையே சற்று அசைத்துப் பார்க்கும் படமாக வெளியாகியிருக்கும் படம் தான் ‘மிக மிக அவசரம்’.
பெண் போலீஸான நாயகி ஸ்ரீபிரியங்கா, உயர் போலீஸ் அதிகாரியால் தனிப்பட்ட கோபத்திற்கு ஆளாகி பழிவாங்கப்படுகிறார். அதற்காக வெளிநாட்டு அமைச்சர் வரும் போது மேம்பாலம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் அமர்ந்தப்படுகிறார். உச்சி வெயிலில் கடமைக்காக கால் வலிக்க அந்த மேம்பாலத்தில் நின்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கு, உடல் உபாதை சம்மந்தமான பிரச்சினை வருகிறது. அத்தனை வலிகளையும் தாங்கினாலும், மனிதர்களால் தாங்க முடியாத பிரச்சினையில் சிக்கி தவிக்கும் ஸ்ரீபிரியங்காவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடும் உயர் போலீஸ் அதிகாரியான முத்துராமன், அவரை அந்த இடத்தைவிட்டு நகராதபடி செய்ய, ஸ்ரீபிரியங்கா புழுவாக துடிப்பது, நம் இதயத்தையே கனக்க செய்கிறது தான் படத்தின் கதை.
எளிமையான, சாதாரணமான, சின்னச்சிறு கரு என்றாலும், அதற்கு அழுத்தமான திரைக்கதை அமைத்து, உயிரோட்டத்துடன் கூடிய காட்சிகளோடு இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியும், நிஜமாகவே அப்படி ஒரு பிரச்சினையில் பெண் காவலர் இருந்தால், என்ன நடந்திருக்கும், அவர் எப்படி எல்லாம் கஷ்ட்டப்பட்டிருப்பார் என்பதை நம் கண் முன் காண்பித்த நடிகை ஸ்ரீபிரியங்காவும், இப்படத்தை வலிமையான படமாக்கிவிட்டார்கள்.
ஸ்ரீபிரியங்காவை சுற்றி நகரும் கதைப் போல், அவரை சுற்றி வரும் சில கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் மனதில் நின்றுவிடுகிறார்கள். பழிவாங்கும் போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன் கண்களிலேயே வில்லத்தனத்தைக் காட்டி மிரட்டுகிறார். ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஈழத் தமிழராக நடித்த அரவிந்தன், இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஈழ மக்களின் வேதனைகளை வெளிப்படுத்துவதோடு, தமிழர் என்ற உணர்வையும் தட்டி எழுப்பி விடுகிறார்.
சில நிமிட காட்சிகளில் வரும் சீமான், தனது கம்பீர தோற்றத்தினாலும், பேச்சினாலும் கவருகிறார். ஸ்ரீபிரியங்காவின் காதலராக நடித்துள்ள ஹரிஷ், சக போலீஸ்காரர்களாக இருந்தும் ஸ்ரீபிரியங்காவுக்கு உதவ முடியாமல் தவிக்கும் ராமதாஸ், வி.கே.சுந்தர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நம் மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறார்கள்.
இஷாந்த் தேவ் இசையும், பாலபரணியின் ஒளிப்பதிவும் ஸ்ரீபிரியங்காவின் வேதனைகளை நமக்குள் எளிதில் கடத்தி விடுகிறது. ஒரு இடத்தில் நடக்கும் கதை என்றாலும், காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்வதற்கு இவர்கள் பெரிதும் துணை நின்றிருக்கிறார்கள்.
கே.பி.ஜெகனின் கதை, வசனம் ஆகியவற்றில் இருக்கும் வீரியத்தை, இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் திரைக்கதையும், காட்சிகளும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
யாரையும் குறை சொல்லாமல், காவல் துறையில் இருக்கும் குறையை, குறிப்பாக பெண் காவலர்களுக்கு இருக்கும் குறையை சுட்டிக் காட்டியிருக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, அதனுடன் ஈழத்தமிழர்களின் அவல நிலையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு கதையை, இப்படியும் படமாக்கலாமா! என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இப்படத்தை இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கு ஆயிரக்கணக்கில் அப்ளாஷ் கொடுத்தாலும் போதாது.
மொத்தத்தில், ‘மிக மிக அவசரம்’ சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல, அனைத்து தரப்பினரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 4/5