Casting : Dinesh, Kayal Anandi, Munishkanth, Marimuthu
Directed By : Athiyan Aathirai
Music By : Thenma
Produced By : Neelam Productions Director Pa.Ranjith
தரமான படங்களை இயக்குவதோடு, தரமான படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ எப்படி இருக்கிறது, விமர்சனத்தை பார்ப்போம்.
பழைய இரும்புக் கடையில் லாரி டிரைவராக வேலை செய்யும் தினேஷும், டீச்சராக இருக்கும் ஆனந்தியும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு ஆனந்தியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று, சென்னை அருகே உள்ள ஒரு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்குகிறது. அந்த குண்டு எப்படியோ தினேஷ் வேலை செய்யும் பழைய இரும்புக்கடைக்கு வந்துவிடுகிறது. அதற்குள் குண்டு கரை ஒதுங்கிய விஷயத்தை அறியும் அரசாங்கம், கரை ஒதுங்கிய குண்டுக்கு பின்னால் இருக்கும் வியாபாரம், வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால், அந்த குண்டை பொதும் மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியாமல் கைப்பற்ற முயற்சிக்கிறது. மறுபக்கம், சமூக ஆர்வலரான ரித்விகா மற்றும் அவரது நண்பர்கள், அந்த குண்டை கைப்பற்றி, அதன் மூலம் ஏற்படும் பேராபத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும், யுத்தமே நடக்காமல் இருக்கும் நமது நாட்டில் இதுபோன்ற ஆபத்தான குண்டுகள் கரை ஒதுங்குவதற்கு பின்னணியில் இருக்கும் சதி திட்டம், குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார்.
இரண்டு குழுவும் குண்டுகளை தேட, தனது காதலியை மீட்பதற்கான போராட்டத்தில் இருக்கும் தினேஷ், தன்னிடம் இருக்கும் குண்டின் ஆபத்தை அறிந்துக்கொள்ள, இறுதியில் அவர் காதலியை மீட்க கிளம்பினாரா அல்லது மக்களை காப்பாற்ற அந்த குண்டை உரியவரிடம் சேர்க்க உதவினாரா, என்பது தான் கதை.
தமிழ் சினிமாவில் இதுவரை கையாளாத, பழைய இரும்புக் கடை மற்றும் அதன் உழியர்கள், என்ற புதுமையான களத்தில் உலக அரசியல் பற்றி பேசியிருக்கும் இந்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ மக்களின் மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
உலக யுத்தம் முடிந்தாலும், அதன் தாக்கமும், பாதிப்பும் இன்னமும் உலகில் எதாவது ஒரு மூளையில் எதிரொலித்துக் கொண்டு தான் இருக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இப்படம், உலக வல்லரசுகளின் கழிவுகளுக்கான காய்லாங்கடையாக இந்தியாவை, அரசியல்வாதிகள் எப்படி மாற்றுகிறார்கள், என்பதை மறைமுகமாக சொல்லுகிறது.
படங்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், அதன் தரம் அதிகம், என்ற ரீதியில் தினேஷ் நடிக்கும் அனைத்துப் படங்களும் நல்ல படங்களாகவே இருக்கிறது. அந்த வகையில், இப்படத்தில் லாரி டிரைவராக தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். இரவு முழுவதும் தூங்காமல், லாரி ஓட்டியதால் ஏற்படும் சோர்வை முகத்தில் காட்டியிருப்பவர், வசன உச்சரிப்பிலும் அதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
கயல் ஆனந்தி கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருந்தாலும், அனைத்து படங்களிலும் குழந்தை தனமாகவே பேசுகிறார். அவரது வசன உச்சரிப்பை சற்று மாற்றினால் நல்லது.
முனிஷ்காந்த் காமெடி மட்டும் இல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பிரகாசிக்கிறார். படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், முனிஷ்காந்தின் இயல்பான நகைச்சுவை காட்சிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
புதுமையான கதைக்களத்தோடு, தொழில்நுட்ப ரீதியாகவும் படம் மிரட்டலாக இருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் உழைப்பு பிரமிக்க வைத்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களிலும், பயணங்கள் தொடர்பாகவே வருகிறது. அத்தனை காட்சிகளும் ஏதோ இயல்பாக நடப்பது போலவே தோன்றுகிறதே தவிர எந்த இடத்திலும் சினிமா என்பதற்கான அடையாளமே இல்லை. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சேசிங் காட்சி மிரட்டல்
இசையமைப்பாளர் தென்மாவின் இசையில் காதல் பாடல்களைக் காட்டிலும், கூத்து பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ரெகுலரான இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் வித்தியாசத்தை கையாண்டிருக்கும் தென்மா, தனது பின்னணி இசை மூலமாகவும் கவனிக்க வைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, கதையின் ஓட்டம் பாதிக்காமல், அதே சமயம் ரசிகர்களும் பாதிப்படையாத வகையில், காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
ஜாதி, மதம் என்று பிரிவினையோடு இருக்கும் நம்மை கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி சுரண்டுகிறார்கள், என்பதை சுட்டிக் காட்டியிருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரை, தனி மனிதர் மீதானா ஆயுத தாக்குதலும், ஒரு நாட்டு மீதான ஆயுத தாக்குதலும் ஒன்று தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்வதோடு, நாடு என்று பார்க்காமல் உலகம் என்ற பார்வையில், அனைவரும் சமாதானத்தை கடைப்பிடிக்க வேண்டும், என்ற மெசஜையும் சொல்லியிருக்கிறார்.
உலகப்போர் நடைபெறாத இந்தியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட ஆபத்தான குண்டுகள் எப்படி வருகின்றது, என்பது குறித்து படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் கோப்புக்காட்சிகளிலேயே நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடும் இயக்குநர் அதியன் ஆதிரை, உலகப்போரின் தீமையையும், அதனால் மக்கள் அனுபவித்த வலிகளையும், கார்ட்டூன் மற்றும் பின்னணி குரலோடு நமக்கு உணர்த்துபவர், இரண்டு மணி நேரம் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்.
பா.இரஞ்சித் படங்கள் என்றாலே, குறிப்பிட்ட ஒரு முத்திரை குத்தப்படும். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை அப்படி ஒரு முத்திரையை எந்த இடத்திலும் குத்த முடியாது. தினேஷ், கயல் காதலில் சில இடங்களில் அவை இருந்தாலும், தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களாகவே அவை இருக்கிறது.
படத்திற்கு பலவீனம் என்றால் காதல் பாடல்கள் என்று சொல்லலாம். பரபரப்பான ஒரு கட்டத்தில் வரும் ஒரு காதல் பாடல் திணித்தது போல இருக்கிறது. மற்றபடி, குண்டு வெடித்துவிடுமா, அல்லது உரியவர்களிடம் கிடைத்துவிடுமா, என்ற பதற்றத்தோடு நம்மை படம் பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரை, தயாரிப்பாளர் பா.இரஞ்சித்ற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தமிழ் சினிமாவின் முதல் முயற்சி.
ரேட்டிங் 4/5