Casting : Kathir, Roshini Prakash, Kishor, AP Sreedhar
Directed By : Kumaran
Music By : Sam CS
Produced By : The poet studios - Vignesh rajagopal
‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘ஜடா’. அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில், போயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கால்பந்தாட்ட வீரரான கதிர் தேசிய அணியில் விளையாடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அவரைப் போல் கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு கொண்ட வட சென்னை இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மாநில அல்லது தேசிய அளவிலான வீரர்களாக்குவதற்காக கிஷோர் முயன்று வருகிறார். அதே சமயம், 7 பேர் கொண்ட அணியாக, எந்தவித கட்டுப்பாடும் விதிமுறைகளும் இல்லாமல் விளையாடப்படும் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தி அதன் மூலம் நடைபெறும் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கும் வில்லன் கோஷ்ட்டிக்கு எதிராக கிஷோர் களம் இறங்க, விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று இறந்து விடுகிறார்.
கிஷோரால் கால்பந்தாட்டத்தின் மீது ஈடுபாடு கொண்ட கதிர், கிஷோரின் மரணத்திற்கு காரணமாக அமைந்த 7 பேர் கொண்ட அணி விளையாடும், சூதாட்ட கால்பந்தாட்டத்தை நிறுத்துவதற்காக, வில்லன்கள் நடத்தும் 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டியில் விளையாட களம் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கிஷோரின் மரணம் அதை மையப்படுத்தி வரும் திடீர் திருப்பத்தால், கதையே வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது. அது எப்படிப்பட்ட பாதை, என்பது படத்தின் மறுபக்கம் என்று சொல்வதை விட மறுக்கதை என்றே சொல்லலாம்.
வட சென்னை மற்றும் அங்கு இருக்கும் ரவுடிசத்தை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்கள் வெளியானாலும், வட சென்னையில் இருக்கும் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் சில சூதாட்டக்காரர்கள் பற்றி பேசும் முதல் படமாக ‘ஜடா’ உள்ளது.
கதிர், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, கதாபாத்திரத்தை கவனமாகவும் கையாண்டிருக்கிறார். பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரராக கதிர் நடித்திருந்தாலும், இதில் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகி ரோஷினி பிரகாஷ், காதலுக்காகவும் ஒரு பாடலுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். படம் முழுவதும் இருக்கும் யோகி பாபுவின் காமெடிகள் சிரிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ஏ.பி.ஸ்ரீதர், பார்வையிலேயே மிரட்டுகிறார். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் உண்மையாகவே சண்டைப்போடுவது போல, காட்சிகளை கையாண்டிருக்கும் ஸ்ரீதர், வில்லனுக்கான சரியான தேர்வாக இருக்கிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கிஷோர் மனதில் நிற்கிறார். கதிரின் பயிற்சியாளராக நடித்திருக்கும் நடிகரின் நடிப்பும் சிறப்பு.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் சொல்லும்படியாக இல்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூரியாவின் ஒளிப்பதிவில் வட சென்னையின் பல புதிய பகுதிகள் தெரிகின்றன. குறிப்பாக கதிரின் வீடு அமைந்திருக்கும் இடம், இதுவரை யாரும் படம்பிடிக்காத இடங்களாக உள்ளது. அனைத்து லொக்கேஷன்களும் லைவாக இருப்பது படத்திற்கு பலம்.
கால்பந்தாட்டத்தைப் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், அவைகளில் இருந்து வித்தியாசப்படும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் போக்கு திடீரென்று மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விளையாட்டு, அதில் நடக்கும் சூதாட்டம், ஹீரோவின் காதல் என்று
படம் நேர்த்தியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று திகில் கான்சப்ட் வருவது, சற்று எதிர்ப்பார்ப்புடன் இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை.
இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை, எந்தவித தொய்வும் இன்றி விறுவிறுப்போடும், சுவாரஸ்யத்தோடும் சொல்லியிருக்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும், திடீர் மாற்றத்தை தவிர்த்திருந்தால், ஜடா முழுமையான பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி ஒரு பதிவாகவும் இருந்திருக்கும்.
ரேட்டிங் 3.5/5