Latest News :

‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ விமர்சனம்

2c265e340dd8a983b88193c8fd73f4b7.jpg

Casting : Vikash, Madhumitha, Ramar, Delhi Ganesh, Chitra, Raghul Thatha

Directed By : Naveen Manikandan

Music By : S.R.Ram

Produced By : HS Media Dreams - Shakul Ameed

 

எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் சார்பில் சாகுல் அமீது தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. நவீன் மணிகண்டன் இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். விகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மதுமிதா நடிக்க, டெல்லி கணேஷ், சித்ரா, விஜய் டிவி ராமர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

நண்பர்களுடன் சேர்ந்து குட்டி சுவரில் உட்கார்ந்து வெட்டித்தனமாக பொழுதை கழித்து வரும் ஹீரோ விகாஷ், தனது தந்தையின் பேச்சை கேட்காமல் இருக்கிறார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மகன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை எண்ணி வருத்தப்படும் டெல்லி கணேஷ், மகனை திருத்துவதற்கு ஒரே வழி காதல் தான் என்று எண்ணி, பெண் ஒருவர் கடிதம் எழுதுவது போல அடிக்கடி விகாஷுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தை ஹீரோயின் மதுமிதா தான் எழுதுகிறார், என்று தவறாக நினைக்கும் விகாஷ், அவரிடம் தனது காதலை சொல்ல, மதுமிதாவின் குடும்பத்தார் அவரை அடித்து விடுகிறார்கள். விஷயம் அறியும் டெல்லி கணேஷ், உண்மையை சொல்லி, மதுமிதா குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க முயற்சிக்கும் போது, அவர்கள் அவரை அவமானப்படுத்திவிடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகும் டெல்லி கணேஷ், இறந்துவிட, தனது அப்பாவின் மரணத்திற்கு காரணமான மதுமிதாவையே தனது மனைவியாக்குவேன், என்று சபதம் போடும் ஹீரோ விகாஷ், அந்த சபதத்தில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது தான் மீதிக்கதை.

 

அறிமுக ஹீரோ விகாஷ், முதல் படம் போல அல்லாமல் பொறுப்புடன் நடித்திருக்கிறார். காதல், காமெடி, நடனம், சண்டை என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பவர், கதைக்கு பொருத்தமான நடிகராகவும் இருக்கிறார். மொத்தத்தில், கமர்ஷியல் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு இளம் ஹீரோவாக இருக்கிறார்.

 

ஹீரோயின் மதுமிதா, தனக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போல எளிமையான அழகோடு, நடிப்பையும் நிறைவாக கொடுத்திருக்கிறார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் சித்ரா, ஹீரோவுக்கு அம்மா வேடத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அப்பா வேடத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், மகனை கண்டிக்க முடியாமலும், அதே சமயம் அவரது நிலையை எண்ணி வருந்தும் போது, ஒட்டு மொத்த தந்தைகளின் மன வருத்தத்தை பிரதிபலிக்கிறார்.

 

விஜய் டிவி ராமார், ராகுல் தாத்தா, அம்பானி சங்கர் ஆகியோரது கூட்டணி ரகளை செம காமெடியாக இருக்கிறது. அதிலும், பஞ்சாயத்து காட்சியும், “காலை தூக்குங்க போட்டோ எடுக்கணும்” என்று டபுள் மீனிங்கல பேசுவது என்று ராமாரின் காமெடி, சரவெடியாக படம் முழுவதும் வெடிக்கிறது. 

 

இயக்குநர் நவீன் மணிகண்டன் தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எளிமையான லொக்கேஷன்கள் என்றாலும் அவற்றை அழகாக காட்சிப்படுத்தியிருப்பவர், இரண்டு மணி நேரம் நமக்கு அழகான இயற்கைப் பகுதியில் பயணித்த அனுபவத்தையும் கொடுக்கிறார்.

 

எஸ்.ஆர்.ராம் இசையில் பாடல் வரிகள் அனைத்தும் புரியும்படி இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

இரண்டு மணி நேரம் ரசிகர்களை ஜாலியான மூடில் வைத்திருக்க வேண்டும், என்பதை மனதில் வைத்து இயக்குநர் நவீன் மணிகண்டன் எழுதியிருக்கும் திரைக்கதை எந்தவித நெருடலும் இல்லாமல் ரொம்ப நேர்த்தியாக பயணிக்கிறது. அதே சமயம், முழுக்க முழுக்க கமர்ஷியலாக படத்தை நகர்த்திச் சென்றாலும், தற்போதைய இளைஞர்களுக்காக சின்ன மெசஜ் ஒன்றையும் அழகாக சொல்லியிருக்கிறார். 

 

படத்தின் லொக்கேஷன், ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் தேர்வு என அனைத்திலும் நேர்த்தியை கையாண்டிருக்கும் இயக்குநர் நவீன் மணிகண்டன், இப்படத்தின் படப்பிடிப்பை 12 நாட்களில் முடித்தாராம். ஆனால், படத்தை பார்க்கும் போது, எப்படி அது சாத்தியம், என்று நினைக்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு படம் ரொம்ப கலர்புல்லாகவும், காமெடியாகவும் இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ குடும்பங்கள் கொண்டாடும் காதல் பிளஸ் காமெடி திருவிழா.

 

ரேட்டிங் 2.5/5

Recent Gallery