Casting : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra
Directed By : R. S. Durai Senthilkumar
Music By : Vivek-Mervin
Produced By : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan
கொலை செய்யப்பட்ட அப்பாவுக்காகவும், அம்மாவின் சபதத்திற்காகவும் வில்லனை பழிவாங்கும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’.
சிறு சிறு திடுட்டு வேலைகளில் ஈடுபடும் தனுஷ், தனது எதிர் வீட்டில் வசிக்கும் ஹீரோயின் மெஹ்ரின் பிரசாடாவின் அலம்பல் தாங்க முடியாமல், அவரை அடக்குவதற்காக அவர் பணியாற்றும் கிக் பாக்ஸிங் கிளப்பில் இருக்கும் பொருட்களை திருடி விடுகிறார். இதனால், மெஹ்ரினுக்கு வேலை பறிபோவதோடு, அவரது சான்றிதழும் பறிபோகிறது. தன்னால் தான் அப்படி ஆனது என்ற குற்ற உணர்சியினால், மெஹ்ரினுக்கு உதவ நினைக்கும் தனுஷ், கிக் பாக்ஸிங் கிளப்பில் உள்ள அவரது சான்றிதழை எடுத்து வர செல்கிறார். அந்த நேரத்தில், கொலை குற்றத்திற்காக கேரள சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப் உரிமையாளரான நவீன் சந்திராவை கொலை செய்ய முயற்சிக்க, அங்கு தனுஷை கண்டு அதிர்ச்சியடைவதோடு, இறந்துவிட்டதாக நினைத்த தனது மகன் தான் தனுஷ் என்பதையும் தெரிந்துக் கொள்கிறார். அந்த நேரத்தில் சினேகாவின் உயிருக்கு ஆபத்து வர, தனது அம்மா என்று தெரியாமலேயே அவரை தனுஷ் காப்பாற்றுகிறார். அதன் பிறகு அம்மா, மகன் இருவரும் சேர்ந்து நவீன் சந்திராவை வீழ்த்துவதும், அதற்கான காரணமும் தான் படத்தின் கதை.
அப்பாவின் கொலைக்காக பழி தீர்க்க கிளம்பும் ஹீரோ, என்ற பழங்காலத்து ரிவெஞ்ச் ஃபார்மட் கதை என்றாலும், அதை அடிமுறை என்ற தமிழர்களின் பழமையான தற்காப்பு கலையுடன் சேர்த்து, ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு படமாகவும், தனுஷ் ரசிகர்களுக்கான மாஸ் படமாகவும் இயக்குநர் துரை செந்தில்குமார் கொடுத்திருக்கிறார்.
அப்பா, மகன் என இரண்டு வேடங்களையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அடிமுறை கலை வீரராக வீரம், காதல் என இரண்டிலுமே மாஸ் காட்டியிருக்கும் அப்பா தனுஷ், மகன் வேடத்தில் செய்யும் ரகளையும் ரசிக்க வைக்கிறது. அப்பா, மகன் இரண்டுமே தனுஷ் தான் என்றாலும், தனது நடிப்பு மூலம் அதை படம் முழுவதும் நாம் மறந்துவிடும்படி செய்துவிடுகிறார் தனுஷ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் சினேகாவுக்கு நடிக்க கூடிய வாய்ப்புள்ள கதாப்பாத்திரம். அதை நல்லபடியாக பயன்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். தனுஷுக்கு அம்மாவாக நடிப்பதா!, என்று யோசிக்காமல், தனது கதாப்பாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை மட்டுமே யோசித்து ஓகே சொன்ன சினேகா, இப்படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் பிஸியாக வலம் வரப்போகிறார்.
மகன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பிரசாடா, அழகில் அள்ளினாலும், நடிப்பில் தடுமாறுகிறார். முதல் பாதி படத்தில் அடிக்கடி முகம் காட்டுபவர், இரண்டாம் பாதியில் சில இடங்களில் முகம் காட்டி விட்டு மறைந்துவிடுகிறார்.
‘கலக்கப்போவது யாரு’ சதீஷின் காமெடி காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. அதிலும் அவருடன் முனிஷ்காந்த் சேர்ந்தவுடன் திரையரங்கே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறார்கள். போனஸாக தனுஷும் அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். தற்காப்பு கலையின் ஆசானாக நடித்திருக்கும் நாசர், தனது அனுபவ நடிப்பால் அந்த கதாப்பாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். அறிவு எழுதி பாடிய பாடல் மட்டும் கவர்கிறது. பின்னணி இசை ஓகே ரகமாக உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
தமிழகர்களின் பல கலைகள் பிரிந்து வெவ்வேறு பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருப்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமார், அடிமுறை என்ற கலை மற்றும் அதில் இருந்து தான் ஜூடோ, குங்பு உள்ளிட்ட பல கலைகள் உருவாகியிருப்பதை ஆழமாக விவரித்திருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும், என்று யூகிக்க கூடிய விதத்தில் திரைக்கதை ரொம்பவே சாதாரணமாக இருந்தாலும், தனுஷின் நடிப்பும், மாஸும் அதை சுவாரஸ்யப்படுத்திவிடுகிறது.
படம் கமர்ஷியலாக இருந்தாலும், அதை சின்ன மெசஜோடு நகர்த்தியிருக்கும் இயக்குநர் துரை செந்தில்குமார், தனுஷ் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு மாஸ் படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காட்சிகளை கையாண்டிருந்தாலும், அனைத்தையும் அளவாக கையாண்டு, ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘பட்டாஸ்’ சரவெடி.
ரேட்டிங் 3.5/5