Latest News :

’ஒன் ஹார்ட்’ விமர்சனம்

ad25f15598f1f2dcecf85654c6dfb53f.jpg

Casting : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குழுவினர்

Directed By : ஒய்.எம் மூவிஸ் குழுவினர்

Music By : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் குழுவினர்

Produced By : செந்தில்வேலன்

 

படத்தில் பாடல்கள் வந்தாலே பதறிக்கொண்டு வெளியேறும் ரசிகர்களை, ‘ஒன் ஹார்ட்’ என்ற தனது பாட்டு மற்றும் இசை படத்தின் மூலமாக கட்டிப்போட்டிருக்கிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால், இது திரைப்படம் அல்ல இசைப்படம். அதாவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைப் பற்றிய படம். இதுபோன்ற இசை கான்சர்ட் படங்கள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சினிமாவில் உருவாகியிருக்கும் முதல் மியூசிக் கான்சர்ட் படம் இந்த ‘ஒன் ஹார்ட்’ தான்.

 

12 பேர் கொண்ட குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் நடத்திய இசை நிகழ்வு தான் இப்படம். நேரடியாக மேடைகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தனது வித்தை செய்யும் விரல்களால் பியானோவை வாசித்து, வயலின் இசைக் கலைஞருடன் போட்டி போடும் ஏ.ஆர்.ரஹ்மான், படம் பார்ப்பவர்களை சிலையாக்கிவிடுகிறார்.

 

நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் ரொம்ப அமைதியாகவும், அளவாகவும் பேசும் ரஹ்மான், இசை புயல் என்ற பட்டத்திற்கு ஏற்ப மேடையில் புயலாகவே மாறிவிடுகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என்று பாடல்களை அவர் பாடும் விதமும், பியானோவை வாசிக்கும் விதமும் நம்மை மெய் மறக்கச் செய்துவிடுகிறது.

 

90 நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் எப்போது தொடங்கியது, அந்த 90 நிமிடம் எப்படி முடிந்தது, என்பதே தெரியாத வகையில் நம்மை இசையால் நனைப்பதுடன், சில காட்சிகளாலும் பிரமிக்க வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், நமது ஹார்ட்டுகளில் இந்த ‘ஒன் ஹார்ட்’ டை அழுத்தமாக பதியச் செய்துவிடுகிறார். அவரது குழுனர் மட்டும் என்ன கலேசானவர்களா, வயலின் இசை கலைஞர், கித்தார் கலைஞர், டிரம்மர் ரஞ்சித் பாரோட், சென்னையை சேர்ந்த கித்தார் கலைஞர், ஜாஸ் இசை கலைஞர் என்று அனைவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் ரசிகர்களை தங்களது திறமையால் வசிகரித்துவிடுகிறார்கள்.

 

படம் முடிந்தால் முண்டியடித்துக் கொண்டு வெளியேறும் ரசிகர்களை, படம் முடிந்து திரையில் ஓடும் டைடில் கார்டு முடிந்த பிறகும் எழுந்திருக்க விடாமல் ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியும், அதை அவர் தொகுத்த விதமும் அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில் இந்த ‘ஒன் ஹார்ட்’ இசைப் படம் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, ரஹ்மானின் விரல்கள் செய்யும் வித்தைகளை மிக அருகில் பார்க்க கூடிய வாய்ப்பையும், அவரது இசையை மிக துள்ளியமாக கேட்டு ரசிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

 

பாடல்கள் எதுவுமே முழுமையாக இல்லாமல் இருப்பது, தமிழ்ப் பாடல்கள் மிக மிக குறைவாக இருப்பது, ஆகியவை மட்டுமே குறைபாடுகளாக தெரிந்தாலும், ஆஸ்கார் நாயகனின் இந்த ‘ஒன் ஹார்ட்’ நமது இதயத்தை ரொம்ப இதமாகவே வருடுகிறது.

 

ஜெ.சுகுமார்

Recent Gallery