Latest News :

’கன்னி மாடம்’ விமர்சனம்

f430605485d5bd41d40d1200c193cd04.jpg

Casting : Sriram Karthik, Saya Devi, Vishnu Ramasamy, Aadukalam Murugadass

Directed By : Bose Venkat

Music By : Hari Sai

Produced By : Rooby Films Hasheer

 

நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘கன்னி மாடம்’. ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிப்பில், ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி, விஷ்ணு ராமசாமி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் என்ன தான் வாழ்க்கை வேகம் எடுத்தாலும், எதாவது ஒரு மூளையில் சாதி என்ற பேய் தலைவிரித்தாடுகிறது என்பதை, அழுத்தமாகவும், அழகான காதலோடும் சொல்வது தான் இப்படத்தின் கதை. அதை வெறும் சாதி படமாக மட்டுமே சொல்லாமல், கோபத்தில் கொலை செய்வதோடு இந்த பிரச்சினை நின்றுவிடாமல், இறந்தவர்களின் குடும்பமும், கொலையாளியின் குடும்பமும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயா தேவி இந்த மூன்று நடிகர்களை சுற்றி தான் கதை நடக்கிறது, என்பதை விட இந்த மூன்று நடிகர்களும் படத்தை சுமந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். மூவரும் புதிது என்றாலும், அதை நடிப்பில் காட்டாதது பாராட்டுக்குரியது. படம் முடிந்தாலும், இந்த மூன்று நடிகர்களின் முகங்கள் மட்டும் நம் கண்களை விட்டு அகலவில்லை.

 

ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், தேவையான இடத்தில் காமெடி செய்து நம்மை சிரிக்க வைத்தாலும், குணச்சித்திர நடிகராகவும் பாராட்டு பெறுகிறார். ஆட்டோ ஒட்டும் பெண்ணாக நடித்திருக்கும் வலீனா பிரின்ஸும் கவனிக வைக்கிறார்.

 

ஸ்கொயர் ஸ்டாராக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியன், சினிமாவுக்காக தங்களது வாழ்க்கையை தொலைத்த பலரை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, அழகுராணி என்ற கதாப்பாத்திரத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவர் காட்டும் அன்பும், அதிரடியும் சென்னை ஹவுஸ் ஓனர்களின் அக்மார்க் முத்திரை.

 

ஹீரோவின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ், பாசமான தந்தையாக இருந்தாலும், அவரது நடவடிக்கை அவர் மீது கோபப்பட வைக்கிறது.

 

காட்சிகளில் இருக்கும் காதல், சோகம், பாசம் உள்ளிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் ஹரி சாயின் இசை, படம் பார்ப்பவர்களை உணரச்செய்கிறது. பாடல்கள் அனைத்திலும் அத்தனை மெலொடி, பின்னணி இசையில் பெரிய அமைதி, என்று கதைக்கான இசையை கொடுத்திருக்கும் ஹரி சாயிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

 

இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு கதையுடன் பயணித்திருக்கிறது. சிறிய அறை என்றாலும், அங்கு நடக்கும் நிகழ்வை இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பவர், திருதிரும்ப ஒரே லொக்கேஷனை காட்டினாலும், வெவ்வேறு விதமான பிரேம்கள் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

 

வசனங்களில் பெரியார் கருத்துக்களை பேசியிருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், அனைத்தையும் அளவாக பயன்படுத்தியிருப்பதோடு, தான் இயக்குநராக ஜெயித்து விட்டேன், என்பதை தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் நிரூபித்துவிட்டார்.

 

ஆணவக் கொலைகள் மூலம் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும், என்று நினைத்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், வன்முறை இல்லாத திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. சாதி பற்றிய படம் என்று, சொல்ல முடியாத அளவுக்கு மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் ஒரு தரமான படமாக இயக்குநர் போஸ் வெங்கட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘காதல்’, ‘மைனா’, ‘வழக்கு எண்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலின் புது வரவாக இடம் பிடித்திருக்கிறது இந்த ‘கன்னி மாடம்’.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery