Latest News :

‘கல்தா’ விமர்சனம்

ea873a62bdbd6030168eaf621f64d4e9.jpg

Casting : Siva Nishanth, Antony, Divya, Ayraa

Directed By : S Hari Uthra

Music By : K Jay Krish

Produced By : Malar Movie Makers and I Creations

 

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகளால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது தான் ‘கல்தா’.

 

கல்லூரி மாணவராக நடித்திருக்கும் சிவா நிஷாந்த் மற்றும் ’மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி இருவரும் தான் படத்தின் ஹீரோக்கள். ஊரில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் இவர்கள் இருவரும், தங்களது ஊரில் கொட்டப்படும் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை அரசிடம் தெரியப்படுத்த பல்வேறு வகையில் முயற்சிக்கிறார்கள். ஆனால், அதன் பின்னணியில் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இருப்பதால், அவர்களின் முயற்சி வீண் போக, மக்களை திரட்டி போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்தை பொசுக்குவதற்காக அரசு அதிகாரிகளின் பலத்தோடு அரசியல்வாதிகள் செய்யும் சதி திட்டத்தால், அவர்கள் எப்படி பாதிப்படைகிறார்கள், என்பது தான் கதை.

 

சிவா நிஷாந்தும், ஆண்டனியும் தங்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். நடிப்பு, நடனம் என அனைத்திலும் விஷாலை நினைவுப்படுத்தும் சிவா நிஷாந்த், முதல் படம் போல் அல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். அதே சமயம், ஆண்டனியின் நடிப்பில் சில இடங்களில் பிசிரு தட்டுவது அப்பட்டமாக தெரிகிறது.

 

தக்காளி பழம்போல் இருக்கும் கதாநாயகி ஐரா, காதலுக்காகவும், பாடலுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும், மற்றொரு ஹீரோயினான திவ்யா கதை ஓட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இருவருடைய வேலையும் குறைவு தான் என்றாலும், அதை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

 

வில்லனாகி பிறகு நல்லவனாக மாறும் அப்புக்குட்டி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராஜசிம்மன், ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ், வில்லனாக நடித்திருக்கும் டைகர் தங்கராஜ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் கே.ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கும்படி இருந்தாலும், சில இடங்களில் மட்டும், ஏதோ ‘காஞ்சனா’ படம் பார்க்கும் உணர்வை கொடுத்துவிடுகிறது. சத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பி.வாசுவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மாயாஜாலம் காட்டியிருக்கிறார். படத்தொகுப்பாளர் என்.முத்து முனியசாமியும், சண்டைக்காட்சிகளில் கச்சிதமாக கத்திரி போட்டு, ரியலான சண்டைக்காட்சியாக திரையில் காண்பித்திருக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் கோட்டியையும் பாராட்டியாக வேண்டும்.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் முறையாக அதை கருவாக கொண்டு, கமர்ஷியலாகவும் இப்படத்தை இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா இயக்கியிருக்கிறார். 

 

சமூகத்தில் நடக்கும் ஒரு தவறான விஷயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாக இருந்தாலும், காதல், நட்பு, துரோகம் போன்ற கமர்ஷியல் விஷயங்களை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் ஹரி உத்ரா, இரண்டாம் பாதியில் கதையை வேறு பாதையில் பயணிக்க வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும், தான் சொல்ல வந்த விஷயத்தை இயக்குநர் அழுத்தமாகவும், தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

 

மக்களுக்கு கல்தா கொடுக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையை வசனங்கள் மூலம் கிழித்திருக்கும் இயக்குநர் ஹரி உத்ரா, சாமாணிய மக்களும் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, மருத்துவக் கழிவுகளால் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை, எப்படி பாதிப்படைகிறார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கல்தா’ எதிர்காலத்தில் மக்கள் எதிர்கொள்ள இருக்கும் மிக பெரிய பிரச்சினையின் எச்சரிக்கையாக உள்ளது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery