Latest News :

’திரெளபதி’ விமர்சனம்

fea1f6c24797576969f1bfaafea875e6.jpg

Casting : Richard, Sheela Rajkumar, Karunas, Nishanth

Directed By : Mohan.G

Music By : Jubin

Produced By : G.M Film Corporation

 

போலி பதிவு திருமணங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பலுக்கு எதிராக ஹீரோ ரிச்சர்ட்டும், அவரது மனைவி ஷீலா ராஜ்குமாரும் குரல் கொடுக்கிறார்கள். இதனால், ஷீலா ராஜ்குமாரையும், அவரது தங்கையையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, அந்த கொலை பழியை ரிச்சர்ட் மீது போடுகிறார்கள். இதனால் சிறைக்கு செல்லும் ரிச்சர்ட், ஜாமீனில் வெளியே வந்து போலி பதிவு திருமண கும்பலை பழிவாங்குவதோடு, தனது மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றும் பணியிலும் ஈடுபட, அதற்குள் அவரை போலீஸ் சிறை பிடித்துவிடுகிறது. அவரது மனைவி திரெளபதியின் சபதம் நிறைவேறியதா இல்லையா, அது என்ன சபதம், என்பது தான் படத்தின் கதை.

 

திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற துடிக்கும் அன்பு கணவராகவும், வீரமுள்ள சிலம்பம் ஆசானாகவும் ரிச்சர்ட் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இருந்தாலும், பல இடங்களில் அவரைவிட, அவரது மனைவியான திரெளபதி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் அப்ளாஸ் வாங்குகிறார். அவர் பேசும் வீர வசனமும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் குணமும், அதை அவர் கையாண்ட விதமும் கைதட்டல் பெருகிறது.

 

போலி வழக்கறிஞராக நடித்தவர்களும் தங்களது வில்லத்தனத்தை அளவாக காட்டி கதாப்பாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார்கள். கிராமத்து பெரியவராக நடித்தவரும், ரிச்சர்ட்டின் நண்பராக நடித்தவர், நிஜமான வழக்கறிஞராக நடித்த கருணாஸ், என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஜூபினின் இசையும், மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை விட, படத்தின் வசனங்களும் காட்சிகளும் முக்கியம், என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். இவர்கள் உணர்ந்தது போல, படத்தொகுப்பாளர் தேவராஜும் சற்று உணர்ந்து பணியாற்றியிருக்கலாம்.

 

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, தனது இரண்டாவது படமான இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.

 

பதிவு திருமண முறையில் மாற்றம் வேண்டும், என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, ஒரு குறிப்பிட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் சுமார் 3 ஆயிரம் போலி பதிவு திருமணம் நடைபெற்றிருப்பதாக படத்தில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலியான பதிவு திருமணங்கள் ஒரு சில நடக்கலாம், ஆனால், பதிவு திருமணங்களே போலியானது, என்பது போல இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

மோசடி எங்கு நடந்தாலும் அது தவறு தான். அதை விவரித்து இதுபோன்ற தவறு நடக்க கூடாது, அதற்கு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று சொல்லியிருக்கும் இயக்குநர் மோகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஆனால், அதற்காக பெண் மற்றும் ஆண் இருவரது தனிப்பட்ட விருப்பமான, திருமண உரிமையையே அவர்களிடம் இருந்து பறிக்கவேண்டும், என்று அவர் வலியுறுத்துகிறார். நல்லவேலையாக, அப்படியெல்லாம் செய்ய முடியாது, திருமணம் என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை, என்று நீதிபதி சொல்வது போன்ற காட்சியை வைத்து, ஆறுதல் படுத்திவிடுகிறார்.

 

அதேபோல், வட மாவட்ட மக்கள் மீது இருக்கும், ”மரம் வெட்டி” என்ற இமேஜை உடைக்கும் விதமாக, மரக்கன்றுகள் நடும் சேலேஜ், என்ற காட்சியை இயக்குநர் வைத்திருப்பது பாராட்டக்குரியது. 

 

திரைப்படமாகவும், மேக்கிங் முறையிலும், லாஜிக்காகவும் படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், சில போலியான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குழுவினர் செய்யும் சில போலியான பதிவு திருமணங்களைப் பற்றி பேசியிருக்கும் இந்த ‘திரெளபதி’ யை வரவேற்கலாம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery