Casting : Prabhu, Ragul Vijay, Madhubala, Priya Vatlamani, Nazar, Manobala
Directed By : Hari Santhosh
Music By : Kuthup E Krupa
Produced By : MR Pictures - L Padmanabha
எம்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் எல்.பத்மநாபா தயாரிப்பில், பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், பிரியா வட்லமணி, நாசர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காலேஜ் குமார்’ எப்படி, என்று பார்ப்போம்.
பெற்றோர்கள் தங்களது ஆசைகளையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணித்து அவர்களின் திறமை குறித்து அறியாமல் போவதால், அவர்கள் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என்பதை காமெடியாகவும், செண்டிமெண்டாகவும் சொல்லியிருப்பது தான் ’காலேஜ் குமார்;.
சரியாக படிக்க முடியாமல், அலுவலகம் ஒன்றில் பியூனாக பணிபுரியும் பிரபு, தனது நண்பருடன் போட்ட சவாலுக்காக தனது மகனை, படிப்பில் முதலாவதாக வர வைக்க வேண்டும், என்று சிறு வயது முதல் அவருக்கு படிப்பை தவிர வேறு எதிலும் ஆர்வம் போகக்கூடாது, என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். அப்பாவின் ஆசைக்காக, படிப்பது போல நடிக்கும் ராகுல் விஜய், ஒரு கட்டத்தில் கல்லூரியில் இருந்தே நீக்கப்படுகிறார். இதனால், மகன் மீது பிரபு கோபப்பட, அவரது மகனோ, “நான் உங்களுக்கு பணம் கட்டுகிறேன், நீங்கள் படித்து முதலிடத்திற்கு வர முடியுமா?” என்று கேட்க, பிரபு அதை ஏற்று கல்லூரியில் படிக்க தொடங்குகிறார். இறுதியில் அவர் சவாலில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் கதை.
படத்தின் ஹீரோ ராகுல் விஜய், தமிழிக்கு அறிமுகம் என்றாலும், முதல் படம் என்பது தெரியாத வகையில் கச்சிதமாக நடித்திருக்கிறார். டான்ஸ், ஆக்ஷன், காமெடி என்று கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டவராகவும் இருக்கிறார்.
ஹீரோவுக்கு அப்பா என்றாலும், பிரபுவும் படத்தில் ஒரு ஹீரோ தான். நண்பனிடம் போட்ட சவாலுக்காக, மகனை படி...படி...என்று சொல்லும் பிரபு, அதே மகனிடம் போட்ட சவாலுக்காக, கல்லூரிக்கு சென்று படிப்பது காமெடியாக இருந்தாலும், ஒவ்வொரு பெற்றோர்களின் கனவையும் பிரதிபலிப்பது போலவும் இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண மிடில் கிளாஸ் அப்பாவாக வெகுளித்தனமான நடிப்பால் அசத்தும் பிரபு, கல்லூரி மாணவரான பிறகு, கெட்டப்பை மாற்றி செய்யும் யூத் சேட்டைகளும் ரசிக்க வைக்கிறது.
ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியா வட்லமணி குறைவான போர்ஷனில் வந்து போகிறார். பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் மதுபாலா, நடிப்பு மீது பேரார்வம் மிக்கவராக இருக்கிறார், என்பது அவரின் ஓவர் ஆக்டிங்கில் அப்பட்டமாக தெரிகிறது.
நாசர், மனோபாலா, சாம்ஸ் என்று மற்ற நடிகர்களும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம் என்றாலும், படத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய், கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்களின் போக்கில் விட்டால், நிச்சயம் அவர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்களாக வருவார்கள், என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஹரி சந்தோஷ், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் எப்படி சிரமப்படுகிறார்கள், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் மட்டுமே, உயரத்திற்கு செல்ல முடியும், என்ற சில பெற்றோர்களின் தவறான கண்ணோட்டத்தை மாற்றும் விதத்தில், பல காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர், தங்களிடம் இருக்கும் திறமையை அறிந்து உழைத்தால், உயரத்திற்கு செல்லலாம், என்ற நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார்.
ஃபேமிலி டிராமா ஜானர் படம் என்றாலே, சீரியல் போல சில காட்சிகள் இருக்கத்தான் செய்யும், இந்த படத்திலும் அப்படி ஒரு குறை இருந்தாலும், இயக்குநர் ஹரி சந்தோஷ், சொல்லியிருக்கும் மெசஜுக்காக இந்த படத்தை பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் சென்று ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.
ரேட்டிங் 3/5